தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சந்தனமலை.. குழந்தை பாக்கியம் தரும் வள்ளிகுகை.. திருச்செந்தூரில் என்னென்ன சிறப்புகள்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தமிழ் கடவுள் முருகன் தரிசனம் கிடைத்தாலே போது பிறவிப் பயன் அடைந்த பாக்கியம் பலருக்கும் கிடைக்கும். முருகன் ஆலயங்கள் தமிழகத்தில் பல இருந்தாலும் திருச்செந்தூரில் அருள்பாலிக்கும் சுப்ரமணியரையும் சண்முகரையும் தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருமண வரம் வேண்டியும், குழந்தை பாக்கியம் வரம் வேண்டியும் திருச்செந்தூருக்கு வந்து கடலில் நீராடி இறைவனை தரிசனம் செய்கின்றனர்.

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்..கடல் தாலாட்ட கம்பீரமாக நிற்கிறது திருச்செந்தூர் கோவில். கடலோரத்தில் இருந்தாலும் மலையும் உண்டு குகையும் உண்டு அதுவும் சாதாரண மலையில்லை சந்தன மலை. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று சொல்வார்கள். முருகப்பெருமான் மலை மீது அமர்ந்து அருளாட்சி செய்வார். அவரது அருளை பெற மலையேறி தரிசனம் செய்வார்கள் திருச்செந்தூரில் கடற்கரையில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

திருச்செந்தூர் கோவில் திருப்பணிக்காக மவுனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி மூவரும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தனர். திருச்செந்தூர் கோவிலில் குரு தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்தால் திருமண வரம் கிடைக்கும் என்றும் வள்ளி குகைக்கு முன்பு உள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருச்செந்தூர்

திருச்செந்தூர்

திருச்செந்தூர் முருகன் கோவில் சங்க காலத்திலேயே சிறப்புப் பெற்றுத் திகழ்ந்த திருத்தலமாகும். அலைவாய், திரச்சீரலைவாய், வெற்றி நகர், வியாழ சேத்திரம், அலைவாய்ச் சேறல், செந்தில், திரிபுவளமாதேவி சதுர்வேதி மங்கலம், சிந்துபுரம், ஜெயந்திபுரம், வீரவாகு பட்டினம், என்றெல்லாம் திருச்செந்தூர் முன்பு அழைக்கப்பட்டது.

 சந்தன மலை

சந்தன மலை


அறுபடை வீடுகளில் ஐந்து குன்றின்மீது அமைந்திருக்க, திருச்செந்தூரில் மட்டும் கடற்கரையில் வீற்றிருக்கிறார் முருகன். ஆனால் இந்த இடமும் மலைதான் என்று பக்தர்கள் கருதுகிறார்கள். இதற்கு சந்தனமலை என்று பெயர். இதற்கு வள்ளி குகை அருகே உள்ள மலையும், பெருமாள் கோயில் அமைந்திருக்கும் சந்தன மலையும் சாட்சி என்றும் சொல்கிறார்கள்.

 ஓம் வடிவ ஆலயம்

ஓம் வடிவ ஆலயம்

திருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது. திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது. திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரத்துக்கு மேலைக் கோபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு. மேற்கு திசையில் உள்ளதால் இந்த பெயர் ஏற்பட்டது.

பெருமாள் கோவில்

பெருமாள் கோவில்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பஞ்சலிங்கம் இருப்பது போல பெருமாளும் காட்சி தருகிறார். கோவில் வெளிப்பிராகாரத்தின் வடக்குப்பகுதியில் வெங்கடாஜலபதி, சந்தானகிருஷ்ணன் இருவரும் தனித்தனி சந்நதி கொண்டிருக்கிறார்கள். கஜலட்சுமி, பிரம்மா, பூதேவி, நீளாதேவி, கௌதமர், மார்க்கண்டேயர், விஷ்வக்சேனர், கருடன் ஆகியோர் சூழ, அரங்கநாதர் பள்ளிகொண்ட பெருமாளாகக் காட்சி தருகிறார். இந்த இடமெல்லாம் சந்தனமலை என்பதற்கு சாட்சியாக, சந்தன நிறத்தில் மண் சுவர் காணப்படுகிறது. புதன் தோஷம் நிவர்த்தி அடைய இந்த பெருமாளை வணங்குகிறார்கள்.

வள்ளி குகை

வள்ளி குகை


கோயிலின் வடக்குப்புறத்தில், அமைந்துள்ளது வள்ளிக் குகை. இது குன்றைக் குடைந்து உருவாக்கப்பட்ட ஆலயம். முன் பகுதியில் 16 கால் மண்டபம் உள்ளது. வட பக்கமுள்ள சுவரை, சூரசம்ஹார நிகழ்ச்சி ஓவியங்களாகச் சித்திரிக்கின்றன. வள்ளியம்மையின் தந்தையான நம்பிராஜனும் அவனது படைவீரர்களும் முருகப்பெருமானுடன் போரிட வந்தபோது, வள்ளியம்மை, பயந்து ஒளிந்து கொண்டதுதான் இந்த குகை.

பிள்ளை வரம்

பிள்ளை வரம்

இந்த குகையை வள்ளி ஒளிந்த வளிநாடு என்றும் குறிப்பிடுவார்கள். குகைக்குள் சென்று நாம் வழிபடலாம் - மாலை 6 மணிக்குள். குழந்தை வரம் கேட்டு இந்த மலைமீது தொட்டில் கட்டி வணங்கினால் பிள்ளை வரத்தை வள்ளி தருவார் என்பது நம்பிக்கை. முருகனை நினைத்து தியானம் இருக்க விரும்புபவர்கள் வள்ளிக்குகை அருகில் உள்ள தியான மண்டபத்தை பயன்படுத்தலாம்.

பாலபிஷேகம்

பாலபிஷேகம்

முருகப்பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் கை கூடும் என்பது நம்பிக்கை. மூலவர் தவக் கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி சேர்க்கப்படுகிறது.

சுக்கு வெந்நீர் நிவேதனம்

சுக்கு வெந்நீர் நிவேதனம்

முருகப்பெருமானுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொருள்களில் சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு, பேரீச்சம் பழம், பொரி, தோசை, சுகியன், தேன் குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியன இடம் பெறுகின்றன. உச்சிக்கால பூஜைக்கு முன் இலை போட்டுச் சோறு, மோர்க் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர் போட்டுத் தீர்த்தம் தெளித்த பின்னரே மூலவருக்கு போற்றிகள் பூஜையை தொடங்குவார்கள். இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர், ஆகியன நிவேதனம் செய்கின்றனர்.

கந்த சஷ்டி விரதம்

கந்த சஷ்டி விரதம்

நீண்ட நெடுங்காலமாக ஒரு பெண்மணிக்குக் குழந்தைப் பேறு இல்லை. அவள் பல தெய்வங்களை வணங்கினாள். பூஜை செய்தாள். பலன் ஒன்றும் இல்லை. ஒருநாள் சித்தர் ஒருவர் கோயிலுக்கு வந்தார். அந்தப் பெண் அவரிடம் தன் குறையைச் சொன்னாள். "குடம் பிடித்தான், சட்டி கொள்!'' என்றார் சித்தர். சித்தர்கள் சூட்சுமமாகப் பேசுவார்கள். அப்பெண் படிப்பறிவில்லாதவள். குடம் பிடித்தானையும், சட்டி கொள்வானையும் எங்கு போய்க்காண்பாள்? சித்தர் சொன்னதன் பொருள் அவளுக்கு புரியவில்லை. குழம்பித் தவித்தாள்.

 சேவற்கொடியோன் செந்தில் நாதன்

சேவற்கொடியோன் செந்தில் நாதன்

மாம்பழக் கவிராயர் என்ற புலவர் அந்த ஊருக்கு வந்திருந்தார். அப்பெண் அவரிடம் சென்று, ஐயா, குடம் பிடித்தான், சட்டி கொள் என்று ஒரு சித்தர் சொன்னார். அதன் பொருள் என்ன?'' என்று கேட்டாள். அதற்குப் புலவர், குடம் என்பதைக் குக்குடம் என்று பொருள் கொள்ள வேண்டும். குக்குடம் என்றால் சேவல் என்று பெயர். அந்தச் சேவலைக் கொடியில் வைத்திருப்பவன் சேவற்கொடியோன். அவன் யாரென்று உனக்குத் தெரியுமா, அம்மா?'' என்று கேட்டார்.
"தெரியும் ஐயா. அவர்தான் முருகக்கடவுள் என்றார் அந்த பெண்.

குழந்தை வரம் தரும் சஷ்டி விரதம்

குழந்தை வரம் தரும் சஷ்டி விரதம்

சட்டி என்பது "கந்த சஷ்டி' என்று பொருள். அந்த முருகப்பெருமானை நினைத்து கந்த சஷ்டி விரதம் இருந்தால் உனக்குக் குழந்தைச் செல்வம் கிட்டும் என்பதையே அந்தச் சித்தர் சொல்லியிருக்கிறார். அப்படியே செய்து வா!'' என்றார் புலவர். அப்பெண் "அப்படியே செய்கிறேன்' என்று கூறி மகிழ்ச்சியுடன் விடைபெற்றுச் சென்றாள். கந்த சஷ்டி விரதம் இருந்ததன் பலனாக அழகன் முருகனைப் போலவே ஆண் மகனைப் பெற்றெடுத்தால் அந்த பெண். புத்திர பாக்கியம் வேண்டுவோர் அழகன் முருகனை நினைத்து கந்த சஷ்டி விரதம் இருந்தால் அதற்கான நற் பலன்கள் கிடைக்கும். நம்பிக்கையோடு இருந்தால் நல்லவையே நடக்கும்.

English summary
Kandha Sashti Special. On the left side of the Tiruchendur temple is the Valli cave. If you build a cradle on the sandalwood hill in front of this cave, you will get a child soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X