"முருகனுக்கு அரோகரா".. களைகட்டிய திருச்செந்தூர்.. ஆவணித் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்
தூத்துக்குடி: புகழ்பெற்ற திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாவான ஆவணித் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. கொடியேற்றத்தைக் காண்பதற்காக அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அரோகரா முழக்கத்துடன் ஏராளமான பக்தர்கள் கொடியேற்ற நிகழ்ச்சியை தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆவணித் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். நடப்பு ஆண்டிற்கான ஆவணித் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்வை தரிசிப்பதற்காக அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அப்போது, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அரோகரா முழக்கங்களை எழுப்பி வழிபட்டனர்.

ஆவணித் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆவணி திருவிழாவையொட்டி, இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொர்ந்து, முருகப் பெருமானுக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து, உதய மாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்ற நிலையில், காலை 5.15 மணியளவில் திருவிழா கொடியேற்றப்பட்டது.
முதல் நாள் நிகழ்ச்சியாக, இன்று மாலை அப்பா் சுவாமிகள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருள்கிறார். பின்னர், வீதிகளில் உழவாரப் பணி மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு ஸ்ரீபெலி நாயகரும், அஸ்திர தேவரும் பல்லக்கில் எழுந்தருளி 9 சந்திகளில் வீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.
முக்கிய நிகழ்ச்சிகள்
செப்டம்பர் 4 ஆம் தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு மேலக் கோயிலில் இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனை நடைபெறவுள்ளது. தொடர்ந்து, சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. செப்டம்பர் 5 ஆம் தேதி காலை கோ ரதம், இரவு வெள்ளி ரதம் வீதியுலா வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து, செப்டம்பர் 6 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு சண்முகப் பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9 மணிக்கு சுவாமி சண்முகப் பெருமான் வெட்டி வோ் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்தை சேரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
தேரோட்டம்
செப்டம்பர் 7 ஆம் தேதி காலை 5 மணிக்கு பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தியில் சுவாமி வீதியுலா வந்து மேலக்கோயில் சேர்கிறார். நண்பகல் 12 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தியில் சுவாமி வீதியுலா வந்து கோயில் சேரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. செப்டம்பர் 9 ஆம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முருகப்பெருமானின் தேரோட்டத்தை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக வருகை தர உள்ளனர்.


Click it and Unblock the Notifications
