
திருமணத்தில் பேசிய உதயநிதி.. குறுக்கே வந்த இபிஎஸ் - ஓபிஎஸ் மேட்டர்! வித்தியாசமான அட்வைசால் சிரிப்பலை
கள்ளக்குறிச்சி: திமுக எம்எல்ஏ உதயசூரியன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மணமக்கள் விட்டுக்கொடுத்த வாழ வேண்டும் என்றும், ஓபிஎஸ் - இபிஎஸ்போல் இருக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தினார். இதனை கேட்டு திருமணத்தில் பங்கேற்றவர்கள் வாய்விட்டு சிரித்தனர்.
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளரும் சங்கராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயசூரியன் இல்லத் திருமண விழா இன்று காலை நடைபெற்றது.
கச்சராபாளையத்தில் உள்ள கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே அமைந்து இருக்கும் கலைஞர் திடலில் நடைபெற்ற இந்த விழாவில் திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பக்கம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
விவசாயிகள் கவனத்திற்கு! நவம்பர் 1ஆம் தேதி நீங்க செய்ய வேண்டியது இது தான்! அலர்ட் செய்யும் அமைச்சர்!

உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
இன்று மண வாழ்வுக்குள் நுழையும் மணமகன் பர்னாலா, மணமகள் சங்கவி ஆகியோரை வாழ்த்திய உதயநிதி ஸ்டாலின் விழாவில் தொடர்ந்து உரையாற்றினார். "எம்.எல்.ஏ. உதயசூரியன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது பற்று கொண்டவர். கலைஞர் அவர்களுக்கு நெருக்கமாக கழகத்திற்காக பாடுபட்டவர்.

உதயசூரியனுக்கு பாராட்டு
ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு மக்களுக்காக உதயசூரியன் பணியாற்றி வருகிறார். அப்பொழுது தலைவரின் கரங்களால் அவரது திருமணம் நடைபெற்றது. இன்று உதயநிதி ஸ்டாலினான நான் இந்த திருமணத்தை நடத்தி வைப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

ஓபிஎஸ் - இபிஎஸ்
மணமக்கள் இன்றுபோல் என்றும் நலமாக இருந்து வாழ்க்கையில் சிறப்பாக இருக்க வேண்டும். மணமக்கள் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். தயவு செய்து ஓபிஎஸ் - இபிஎஸ் போல இருக்காதீர்கள்." என்று வாழ்த்தினார். உதயநிதி இவ்வாறு பேசியதை கேட்டு திருமண விழாவில் சிரிப்பலை எழுந்தது.

அமைச்சர் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் ரிஷ்வந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான வசந்தம் கார்த்திகேயன், மற்றும் கள்ளக்குறிச்சி எம்.பி.கௌதம சிகாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.