ஜேகே டயர்ஸ் அல்ல ஏகே டயர்ஸ்.. ராணிப்பேட்டை தவெக எம்எல்ஏ மூட சொன்ன ஆலை யாருடையது தெரியுமா?
சென்னை: தமிழக சட்டசபை வரலாற்றில் இல்லாத வகையில், ஒரு ஆலையை மூட வேண்டும் என்று ஒரு எம்.எல்.ஏ பேசியதும், அந்த ஆலை தொடர்பான கேள்விக்குச் சட்டசபையில் அமைச்சர்கள் அடுத்தடுத்து பதிலளித்து விவாதம் நடத்தியதும் இதுவே முதல்முறையாகும். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கிண்டல் செய்து வருகின்றன. குறிப்பாக, பா.ஜ.க உச்சகட்டமாகக் கிண்டல் செய்து வருகிறது. ராணிப்பேட்டை எம்.எல்.ஏ சொல்ல வந்தது என்ன என்று விசாரித்தபோது, 'ஏ.கே. டயர்ஸ்' கடைக்குப் பதிலாக 'ஜே.கே. டயர்ஸ்' எனத் தவறுதலாகச் சொல்லியிருக்கிறார் த.வெ.க எம்.எல்.ஏ தாஹிரா. அவர் மூடச் சொன்னது பழைய டயர்களை உருக்கும் 'ஏ.கே. டயர்ஸ்' என்ற ஆலை என்பது தெரியவந்துள்ளது. அது யாருக்குச் சொந்தமானது என்பதைப் பார்ப்போம்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவலத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நேற்று நடந்தன. அப்போது கேள்வி நேரத்தின்போது, ஒவ்வொரு எம்.எல்.ஏ-வும் கேள்விகளை எழுப்பினார்கள். அந்த வகையில் ராணிப்பேட்டை தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ தாஹிரா பேசும்போது, "ராணிப்பேட்டையில் ஜே.கே. டயர் கம்பெனி இருக்கிறது. இவர்கள் இரவெல்லாம் டயர்களை எரிய விடுகிறார்கள். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அங்குள்ள மக்களும் போராட்டம் செய்திருக்கிறார்கள்.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை கடந்த ஆட்சியிலிருந்தே வைத்து வருகிறார்கள். கண்டிப்பாக நமது ஆட்சியில் அந்த கம்பெனியை இழுத்து மூட வேண்டும். அந்த கம்பெனி நமக்குத் தேவையில்லை. அங்கிருக்கும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.
இதற்கு அப்போது சட்டசபையில் உடனடியாக எழுந்து பதிலளித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி.கே. ராஜீவ், "இதுகுறித்த தகவல்களைத் தாருங்கள், இன்றே (நேற்றே) அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து அறிக்கை தருகிறேன்" என்றார். தொடர்ந்து பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, "ஜே.கே. டயர்ஸ் ஆலையை மூட வேண்டும் என்று சொல்லியிருந்தீர்கள். ஆனால், கண்டிப்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும்; எல்லா கம்பெனிகளும் இயங்க வேண்டும். அதேநேரத்தில், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் விதமாக நடவடிக்கை எடுத்து, நிறுவனங்களுக்கான சட்டத் திருத்தங்களை வழங்கி, அந்த நிறுவனம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுக்கும்; அதேநேரம் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும்" என்றார்.
ராணிப்பேட்டை தவெக எம்.எல்.ஏ-வின் இந்தப் பேச்சுக்குப் பிறகு, உண்மையான நிலவரம் குறித்து நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் ஆராயத் தொடங்கினர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜே.கே. டயர்ஸ் நிறுவனத்தின் ஆலையே கிடையாது என்பதும், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் தான் அந்த ஆலை உள்ளது என்பதும் தெரியவந்தது. அதேநேரம், ராணிப்பேட்டை சிப்காட்டில் எம்.ஆர்.எஃப் டயர் உற்பத்தி ஆலை மட்டுமே இருக்கிறது. எனவே, இல்லாத ஆலையை மூடச் சொல்லிவிட்டாரா தாஹிரா எம்.எல்.ஏ என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்யத் தொடங்கினார்கள்.
இல்லாத ஆலையை மூடக் கோரியதும், அதற்கு அமைச்சர்கள் பதிலளித்தது குறித்தும் பா.ஜ.க மாநிலத் தலைமைச் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விமர்சிக்கையில், "ராணிப்பேட்டையில் JK Tyre நிறுவனத்திற்கு ஆலையே இல்லை! இல்லாத கம்பெனியை எப்படி இழுத்து மூடுவது? மேலும், இதில் அதிர்ச்சி என்னவெனில், இரு அமைச்சர்கள் இந்த சட்டமன்ற உறுப்பினரின் கேள்விக்குப் பதில் சொன்னதுதான். இன்னும் என்னவெல்லாம் காணப் போகிறோமோ? இறைவா!" என்று கிண்டல் செய்திருந்தார்.
குழப்பத்தின் பின்னணி
இது தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் என்னவென்று அடுத்தடுத்து விசாரிக்கத் தொடங்கின. அந்த வகையில் நடந்த ஆய்வில், ராணிப்பேட்டை மாவட்டம் வானாபடி அருகே காஞ்சனகிரி மலை அடிவாரத்தில் 'ஏ.கே. டயர்ஸ்' என்ற பழைய டயர்களை உருக்கும் ஆலை ஒன்று இயங்கி வருவது தெரியவந்துள்ளது. இது முகுந்தராயபுரம் தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.கே. முருகனுக்குச் சொந்தமான ஆலை என்று கூறப்படுகிறது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதும், பின்னர் அதிகாரிகள் சீல் வைத்துச் சீரமைக்கப்பட்ட பிறகு மீண்டும் இயங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே, ராணிப்பேட்டை எம்.எல்.ஏ தாஹிரா 'ஏ.கே. டயர்ஸ்' எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாகத் தவறுதலாக 'ஜே.கே. டயர்ஸ்' எனக் கூறியிருக்கலாம் எனத் த.வெ.க-வினர் பொதுவெளியில் விளக்கம் அளித்து வருகிறார்கள். பொதுவாகச் சட்டசபையில் பேசும்போது மிகவும் கவனமாக ஆராய்ந்துதான் பேசுவார்கள். அப்படி இருக்கும்போது, பெயரை உச்சரிக்கும்போது ஏற்பட்ட சிறிய தவறால், ஒரு நிறுவனத்தை மூட வேண்டும் என்று தவறுதலாக ஆளும் கட்சி எம்.எல்.ஏ பேசியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
