75 வருடக் கண்ணீர் கதை.. மலைவாழ் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஸ்டாலின்!
வேலூர்: முதல் முறையாக சாலை வசதியைப் பார்த்திருக்கிறது ஒரு மலைக் கிராமம். இது பீகார் மாநில செய்தியாக இருக்கும் என நீங்கள் நினைத்தால் அது தவறு. தமிழ்நாட்டில்தான் இத்தனை வருடங்களாக ஒரு கிராமம் சாலை இல்லாமல் சரிந்து கிடந்திருக்கிறது. சுதந்திரம் அடைந்து இந்த மலைக் கிராமத்துக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்த அவலநிலையைத்தான் சீர்செய்து கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

வேலூர் மாவட்டம் அருகே உள்ளது அணைக்கட்டு மலைக்கிராம ஊராட்சி. இதற்கு உட்பட்டுப் பல கிராமங்கள் உள்ளன. அதில் ஒன்று பிஞ்சமந்தை ஊராட்சி. இதுவும் மலைக்கிராமம். இந்த மலைப்பகுதிக்குக் கடந்த 75 ஆண்டுகளாகச் சாலைவசதியே இல்லை. இந்த மக்கள் வேலூர் நகரத்திற்கு வரவேண்டும் என்றால், கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் பயணித்தாக வேண்டும். கரடுமுரடான பாதைகளைக் கடந்துதான் வரவேண்டும்.
எப்படி வாழ்ந்தார்கள் இந்த மக்கள்? எவ்வளவு கஷ்டங்கள் இருந்தன? தங்களின் கண்ணீர் கதையைச் சொல்ல முன்வந்தார் மோகனா. "எங்கள் தாத்தா பாட்டி காலத்திலிருந்தே இந்த மலைக்கிராமத்திற்கு ரோடு வசதி இல்லை. எங்கள் மக்கள் தங்களின் எல்லா தேவைகளுக்கும் நடந்தேதான் போகவேண்டும். எங்குப் போகவேண்டும் என்றாலும் நடைப்பயணம்தான்.

தனி ஆளாகப் போகும்போது காட்டுப் பாதைகளைக் கடந்து போவதால், மிருகங்களின் அச்சுறுத்தல் வேறு. என்ன நடக்கும்? எப்போது எந்த மிருகம் வரும்? புதர்கள் பக்கம் நடந்தால் பாம்புகள் பயம் வேறு. தலைச் சுமையாகப் பொருட்களை எடுத்துக்கொண்டு, நடக்கும்போது எவ்வளவுதான் கவனமாக இருப்பது சொல்லுங்கள்? இதில் கூடவே குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றால், நமது உயிர் நம் கையில் இருக்காது. அந்தளவுக்குப் பயம் மனதைக் கவ்விக் கொள்ளும்" என்கிறார்.
இவர் கூறுவது நல்ல உடல் ஆரோக்கியம் உள்ள மக்களின் நிலைமையைப் பற்றி. ஆனால் உடல்நிலை சரியில்லாத அல்லது முதியவர்கள் ஆகியவர்களின் பிரச்சினைகள் இன்னும் அதிகம். அவர்களை தூளி கட்டித்தான் மலை அடிவாரத்திற்குக் கொண்டு செல்லவேண்டும்.

இந்தநிலை வழக்கமாக மலைக்கிராம மக்கள் சந்தித்து வருகின்ற ஒன்றுதான். ஆனால் எத்தனைக் காலம் இதே நிலை தொடர்வது? அதற்கு ஒரு முற்றுப்புள்ளியே கிடையாதா என்பது சமூக ஆர்வலர்களின் முன்வைக்கும் கேள்வியாகவே இருந்துவந்தது.
"பொதுவா கிராமத்தைவிட்டு வெளியே போகவேண்டும் என்றால், காலையிலேயே பயணத்தைத் தொடங்கவேண்டும். கீழே செல்ல மாலை ஆகிவிடும். அல்லது பாதி நாள் ஆகிவிடும். அதன்பிறகு நகரத்திற்குச் சென்று தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு, உடனே ஊர் திரும்ப முடியாது.

ஏனென்றால், இருட்டிவிடும். காட்டில் நடக்கமுடியாது. ஆகவே, இரவு எங்காவது தங்கிவிட்டு, மறுநாள் காலைதான் ஊர் வருவோம். அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்கே இப்படி என்றால், வேறு வேலைகள் பற்றி நீங்களே யோசித்துப் பாருங்கள்.
மக்கள் நடமாடவே இத்தனை சிரமங்கள் என்றால் இந்தக் கிராமம் முழுக்க விவசாயம்தான். இங்கு விளைவிக்கப்படும் வேளாண் பொருட்களை எப்படி எடுத்துச் சென்று சந்தைப்படுத்துவது? காய்கறிகளை ஏற்றிக்கொண்டு செல்வதற்குள்ளாகவே பாதி அழுகிவிடும். அதுதான் இத்தனைக் காலம் வரை இருந்த நிலைமை.

இன்று எல்லாம் மாறிவிட்டது. மனதிற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் மலைக்கும் இப்போது சாலை வந்துவிட்டது. அதை முதல்வர் ஸ்டாலின் செய்து தந்துவிட்டார்" என்று புன்னகை குறையாமல் சொல்கிறார் மோகனா.
"நான் படிக்கும்போது எல்லாம் ரோடு வசதியே இல்லை. நான் 2000 ஆம் ஆண்டில் பள்ளியில் படித்த காலத்தில் எல்லாம் காட்டுப் பாதை வழியே நடந்துதான் செல்வேன். எங்கள் கிராமத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்புவரை மட்டுமே பள்ளி இருந்தது. அதற்குமேல் படிக்கப் போனால், வெளியூர்தான்.

இப்போதுதான் மேல்நிலைப்பள்ளி வசதி எல்லாம் எங்கள் கிராமத்திற்குக் கிடைத்துள்ளது. அப்படி எல்லாம் கஷ்டப்பட்டுத்தான் நாங்கள் படித்தோம்" என்கிறார் இந்தக் கிராமத்தில் வாழ்ந்துவரும் இளைஞர் ரமேஷ்
ஆண் பிள்ளைகளின் நிலைமையே இப்படி என்றால், பெண் பிள்ளைகளை ஊர்விட்டு ஊர் அனுப்பிப் படிக்கவைக்கத் தயங்கி, பெரும்பாலான பெண் பிள்ளைகளைப் படிப்பதற்கே அனுப்பாமல் இருந்துள்ளனர் பெற்றோர்.

இதே கிராமத்தில் இப்போது வசித்துவரும் மைதிலி என்ற மாணவி தான் 1 முதல் 7 ஆம் வகுப்பு வரை காட்பாடியில் உள்ள விடுதியில் தங்கித்தான் படித்தாக வாக்குமூலம் தருகிறார். இந்த நிலைக்கு ஒரே காரணம் சாலை வசதி இல்லாததுதான் என்றும் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார் இவர்.
இவரது தந்தை சங்கர், தனது குழந்தைக்கு அப்பா, அம்மாவின் அன்பு என்றால் என்னவென்றே தெரியாது. ஏனென்றால் 5 வயது முதல் அவள் விடுதியில் வைத்தே வளர்க்கப்பட்டாள். 13 வருடத்தை அவள் வெளியே கழித்திருக்கிறாள். அது பெரிய துயரம் என்று நம்மிடம் ஆதங்கம் பொங்கப் பேசுகிறார்.

பீஞ்சமந்தை, பாலம்பட்டு, சார்தன் கொல்லை ஆகிய 3 ஊராட்சிகளை உள்ளடக்கியதுதான் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம். இது முழுக்க முழுக்க மலைக்கிராமம். இந்தக் கிராமத்திற்கு இதுவரை சாலைவசதியே இல்லை. பல ஆண்டுகளாக இந்தக் கிராம மக்களுக்குச் சாலை வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று வனத்துறையிடம் கோரிக்கை வைத்து வந்துள்ளார்கள்.
ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவே இல்லை. எதிர்க்கட்சியில் திமுக இருந்தபோது பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர் இந்த ஊர் மக்கள். அதற்கு அரசு செவி சாய்க்கவே இல்லை.

இந்த நிலையில்தான் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவர் பதவியேற்றவுடன் சாலைவசதியை ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுவாக எழுப்பப்பட்டது.
அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், "பல ஆண்டுகளாக இந்தக் கிராமத்திற்குச் சாலைவசதி செய்து தரவேண்டும் என நான் பேசி இருக்கிறேன். சாலை இல்லாததால் அந்த மக்கள் அடைக்கின்ற துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அன்றாடம் பிரச்சினை.

சமீபத்தில்கூட அல்லேரி மலையில் ஒரு குழந்தையைப் பாம்புக் கடித்துவிட்டது. அக்குழந்தையை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல போராடினோம். முறையான சாலை இல்லாததால் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டன. இறுதியாக மலை அடிவாரத்திற்குக் கொண்டு செல்வதற்குள் அக்குழந்தை இறந்துபோனது. அதைப்பற்றி செய்திகள்கூட வந்தன.
இச்சம்பவத்திற்கு முன்பாகவே நான் சாலை வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் எனச் சட்டமன்றத்திலே கோரிக்கை விடுத்திருந்தேன். அதை உடனடியாக ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறு கோடி ரூபாயை ஒதுக்கி, இன்றைக்கு சாலை அமைத்துள்ளோம்.

இந்த மக்களின் நல்வாழ்வுக்காக இந்தச் சாலை அமைக்க நிதி ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு என் சார்பாகவும் என் தொகுதி மக்கள் சார்பாகவும் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்கிறார் பெருமிதமாக.
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள்தொகைS 1,31,047. இதில் பட்டியலின மக்களின் எண்ணிக்கை 29,068. பட்டியல் பழங்குடி மக்களின் எண்ணிக்கை 12,728.
இத்தனை மக்கள் வாழும் கிராமத்திற்கு ஒரு சாலை இல்லை என்பது எத்தனைப் பெரிய அவலம்? அந்த அவலத்தைத்தான் இன்று அகற்றி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
"சார் ரோடு என்பது சாதாரண விஷயம் இல்லை. ஒரு சாலை அமைத்தால், அதன்பிறகு அந்தப் பகுதியில் நிலத்தின் மதிப்பே கூடிவிடுகிறது. இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் செய்த மாற்றம் என்பது 70 ஆண்டுகளாக யாராலும் செய்ய முடியாத மாற்றம்.
இந்தச் சாலை போட்டபிறகு எனது இரண்டாவது குழந்தையை விடுதியிலிருந்து கிராமத்திற்கே மீண்டு அழைத்து வந்துவிட்டேன். தினம் ஒருமணிநேரம் பயணித்தால் போதும் பள்ளியை அடைந்துவிடுவேன். அப்படி இருக்கும் போது ஏன் குழந்தை தனியாகக் கிடந்து கஷ்டப்பட வேண்டும்?
இன்றைக்கு என் முதல் குழந்தைக்குக் கிடைக்காத அன்பு 2 வது குழந்தைக்குக் கிடைத்துள்ளது. அதற்கு முழுக் காரணம் முதல்வர் ஸ்டாலின். அவரை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எங்கள் மக்கள் மறக்கமாட்டார்கள். ஏன் என்றால், முதல் ரோடு போட்டவர் அவர்தான். அதுதான் முக்கியம்" என்கிறார் இந்த ஊரில் வசித்துவரும் சங்கர்
ஒரு நல்ல அரசு என்பது ஏர்போர்ட்டை சுற்றி சாலைகளைப் போடுவது அல்ல; ஏற முடியாமல் தவிக்கும் ஏழை மலைவாழ் மக்களுக்கும் சாலைகளை அமைத்துத் தருவதுதான். அதைத்தான் செய்துள்ளார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications