தலையே சரியில்லையா? 9 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! திருவெண்ணெய்நல்லூரில் தலைமை ஆசிரியர் கைது!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே 9 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், பள்ளித் தலைமையாசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள புதூர் அருங்குறிக்கை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தலைமையாசிரியராக திருவிக்ரமன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் அப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பள்ளியில் பயிலும் 3, 4 மற்றும் 5ஆம் வகுப்புகளைச் சேர்ந்த 9 மாணவிகளிடம் தலைமையாசிரியர் திருவிக்ரமன் பாலியல் ரீதியாகத் தவறான முறையில் நடந்து கொண்டதாகப் புகார்கள் எழுந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள், தங்களுக்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்து பெற்றோரிடமும், பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியர்களிடமும் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மாணவிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில், விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் இளமதி, தலைமையாசிரியர் திருவிக்ரமனைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி உரிய அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Government school

இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பாக கல்வித் துறை அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தலைமையாசிரியர் திருவிக்ரமன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ற்கெனவே வேறு இரண்டு பள்ளி மாணவிகளிடம் இதே ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகப் புகார்கள் அளிக்கப்பட்டு, அது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பின்னணியில், தற்போது 9 மாணவிகள் தொடர்பாக எழுந்துள்ள புகார் கல்வித்துறை மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிகள் என்பது குழந்தைகளுக்குப் பாதுகாப்பான கல்விச் சூழலை வழங்க வேண்டிய இடமாகும். அத்தகைய இடத்தில் மாணவிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாகக் கூறப்படும் நபர்கள் மீது உரிய விசாரணை நடத்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பும் மனநல ஆலோசனையும் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+