கடைசி வரை சந்திக்காத ராமதாஸ்.. சகோதரியிடம் ஆதங்கப்பட்ட அன்புமணி.. தைலாபுரத்தில் நடந்தது என்ன?
விழுப்புரம்: பாமக தலைவர் அன்புமணியை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சந்திக்க விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது. நேற்று ராமதாஸை சந்திக்க அன்புமணி தைலாபுரம் வந்த போது, அவர் கடைசி வரை தனது அறையில் இருந்து வெளியில் வரவில்லை என்றும், இதனால் சகோதரி மற்றும் தாய் ஆகியோரிடம் பேசிவிட்டு அன்புமணி புறப்பட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
ராமதாஸ் vs அன்புமணி
பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையிலான மோதல் தொடர்ந்து வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மோதல் தொடர்ந்து வரும் சூழலில், தற்போது உச்சத்தை எட்டி இருக்கிறது. இதனால் ராமதாஸின் கொள்கைகளை கையில் எடுத்து பாமகவை வழிநடத்த அன்புமணி ஆயத்தமாகி வருகிறார். இருந்தாலும் இருவருக்கும் இடையில் சமாதானம் செய்ய பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

தைலாபுரம் வந்த அன்புமணி
இந்த சூழலில் நேற்று காலை திடீரென சென்னையில் இருந்து ராமதாஸை சந்திப்பதற்காக அன்புமணி புறப்பட்டார். காலை 9.30 மணியளவில் தைலாபுரம் வந்த அன்புமணியுடன் அவரது 3வது மகளும் உடனிருந்தார். சுமார் 1 மணி நேரம் வரை தைலாபுரத்தில் இருந்த அன்புமணி, ராமதாஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது.
விரும்பாத ராமதாஸ்
இந்த நிலையில் தைலாபுரத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான சந்திப்பு நடக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. அன்புமணி திடீரென வந்ததால், அவரை சந்திக்க ராமதாஸ் விரும்பவில்லை. இதனால் ராமதாஸ் தனது அறையில் இருந்து வெளியிலேயே வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் தனது அம்மாவிடம் சிறிது நேரம் பேசி நலம் விசாரித்துள்ளார்.
அன்புமணி ஆதங்கம்
இதன்பின் தனது சகோதரியிடம், சில சம்பவங்களை கூறி ஆதங்கப்பட்டதாக தகவல் கூறப்பட்டுள்ளது. சுமார் ஒரு 1 மணி நேரம் வரை காத்திருந்த அன்புமணி, பின் காரில் ஏறி தைலாபுரத்தில் இருந்து புறப்பட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையிலான மோதலில் இதுவரை எந்த சமாதானமும் ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
குருமூர்த்தியுடன் ஆலோசனை
அன்புமணி புறப்பட்ட பின்னரே ராமதாஸ் தனது அறையில் இருந்து வெளி வந்துள்ளார். அதன்பின் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகியோரையும் சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த சந்திப்புக்கு 2 வாரங்களுக்கு முன்பாக ராமதாஸை தனியாக சந்தித்து சைதை துரைசாமி பேசி இருந்தார். இதனால் குருமூர்த்தி வருவதற்கு சைதை துரைசாமியுடனான சந்திப்பே காரணமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications