ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சுவார்த்தையால் பலன் இல்லை! நீயா, நானா பார்த்துருவோம்- ராமதாஸ் ஆவேசம்
விழுப்புரம்: எனக்கும், செயல் தலைவர் அன்புமணிக்கு இடையில் போய்க் கொண்டிருக்கும் பிரச்சனை உங்கள் யாருக்கும் முழுமையாக தெரிய வாய்ப்பில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக பிரச்சனையில் 2 சிறந்த ஆளுமைகள் மூலமாக சமரச பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அந்த பேச்சுவார்த்தை டிராவில் முடிந்துவிட்டதாகவும் கூறி இருக்கிறார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் உச்சக் கட்டத்தை எட்டி இருக்கிறது. அண்மையில் ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் அதிமுக மூத்த தலைவர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் தைலாபுரத்தில் ராமதாஸை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதன்பின் சென்னை வந்த ராமதாஸ், மீண்டும் ஆலோசனை நடத்தி இருந்தார்.

ராமதாஸ் பேட்டி
இதனால் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் பேசுகையில், னக்கும், செயல் தலைவர் அன்புமணிக்கு இடையில் போய்க் கொண்டிருக்கும் பிரச்சனை உங்கள் யாருக்கும் முழுமையாக தெரிய வாய்ப்பில்லை.
நீயா? நானா?
பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து நடத்திய சமரச பேச்சுவார்த்தை டிராவில் முடிந்தது. சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இருவர் யார் என்பது உங்களுக்கு தெரியும். தலைவர் பதவியை நான் விட்டுக் கொடுக்க தயாராக இருந்த போதும் அன்புமணி நம்பவில்லை. அய்யாவை நம்ப முடியாது. எழுதி கொடுக்க சொல்லுங்கள் என்றார். எனக்குள் இருந்த கோபம், பொங்கி எழுந்தது.
எனக்கு உரிமை இல்லையா?
அப்போதுதான் நீயா? நானா? பார்த்திடுவோம் என்று முடிவெடுத்துவிட்டேன். என்னை தேடி வந்த 14 பஞ்சாயத்துக்காரர்களும் ஒரே விதமான தீர்ப்பையே சொன்னார்கள். எல்லாம் தனக்கே வேண்டும் என்று அன்புமணி சொல்கிறார். என்னை தைலாபுரம் வீட்டுக்குள் இருந்து பேரன், பேத்திகளோடு விளையாடிக் கொண்டு இருக்குமாறு சொல்கின்றனர். 46 ஆண்டுகள் கட்சியை கட்டுக்காத்த எனக்கு இன்னும் ஓரிரு ஆண்டுகள் கட்சியின் தலைமையேற்க எனக்கு உரிமை இல்லையா?
பாமக எனும் மாளிகை
என்னை சந்திக்க கூடாது என்று ஒவ்வொரு நிர்வாகிக்கும் அன்புமணி தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். ஒவ்வொரு செங்கலாக பார்த்து கட்டி எழுப்பிய பாமக என்ற மாளிகையில், நான் யாரை குடியமர்த்தினேனோ அவரே வெளியே தள்ளிவிட்டார். அன்று அமைதி காத்திருந்தால், அன்புமணிக்கு அதிகாரம் தானாக வந்திருக்கும். ஓரிரு ஆண்டுகள் பொறுத்திருந்தால் நானே அன்புமணிக்கு முடிசூட்டு விழா நடத்தி இருப்பேன்.
தந்தையை மிஞ்சிய தனயன்
தந்தைக்கு பிறகே தனயன்; அய்யாவுக்கு பிறகே அன்புமணி என்பதே எல்லோரும் சொல்லும் வார்த்தை. குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம். ஆனால் தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது. இதுவே நீதி, நேர்மை, தர்மம். குலசாமி என்று கூறிக் கொண்டே நெஞ்சில் என்னை குத்துகின்றனர். எல்லாம் அய்யா தான் என்று சொல்லிக் கொண்டே அதள பாதாளத்தில் தள்ள பார்க்கிறார்கள் என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications