கொட்டும் கனமழை..ஓடைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்..சதுரகிரி மலையேற தடை விதித்த வனத்துறை
விருதுநகர்: தொடர் கனமழை பெய்வதால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. தேய்பிறை பிரதோஷம் முதல் ஐப்பசி அமாவாசை வரை பக்தர்கள் சதுரகிரி செல்ல அனுமதியில்லை என வனத்துறையினர் அறிவித்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இது புகழ்பெற்ற ஆன்மிக தலமாகும். இந்த மலையில் ஏறுவதற்கு ஏதுவாக முதல் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
மலையேறும் பக்தர்கள் கரடு முரடான பாறைகளையும், பள்ளத்தாக்குகளையும், நீரோடைகளையும் கடந்து சென்று சிவபெருமானை தரிசிக்க வேண்டும்.
தமிழ்நாட்டை புயல் தாக்குமா? 26 மாவட்டங்களில் இன்று கனமழை.. வானிலை மைய ரிப்போர்ட் என்ன சொல்கிறது?

சுந்தரமகாலிங்கம்
சதுரகிரி மலை கோவில் சித்தர்கள் வாழும் கோவிலாகும். இங்கு சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், இரட்டை லிங்கம், பிளாவடி கருப்பசாமி உள்ளிட்ட பல கோவில்கள் காணப்படுகின்றன. இவற்றை தரிசிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

பக்தர்கள் தரிசனம்
சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமிக்கு தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுவது வழக்கம். கடந்த சில வாரங்களாகவே கனமழை பெய்து வருவதால் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கனமழை வெள்ளம்
மலையேறும் பக்தர்கள் சங்கிலிப்பாறை, வழுக்குப்பாறை ஓடைகளை கடந்துதான் மலையேற வேண்டும் எனவே வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளதால் சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

பக்தர்கள் ஏமாற்றம்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு கடந்த மாதம் மகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கடந்த 6ஆம் தேதி வரைக்கும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தேய்பிறை பிரதோஷம், தீபாவளி பண்டிகை, அமாவாசை நாளில் சதுரகிரி மலையேறி மகாலிங்கத்தை தரிசிக்கலாம் என்று நினைத்த பக்தர்கள் வனத்துறையினரின் அறிவிப்பால் ஏமாற்றமடைந்துள்ளனர்.