ஜஸ்ட் 10 ரூபாய்.. 6 பேர் 150 கி.மீ போகலாம்.. அசர வைத்த வண்டி.. ஆனந்தமான ஆனந்த் மகிந்திரா
வாஷிங்டன்: ஆறு பேர் பயணிக்கும் வகையில், மின்சாரத்தில் ஓடும் வாகனத்தை கிராமப்புற இளைஞர்கள் ஓட்டும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் ஆனந்த் மகிந்திரா, இதுபோன்ற புதுமையான கண்டுபிடிப்புகள் தன்னை கவரும் வகையில் இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
இந்தியாவின் மிகவும் பிரபலமான தொழில் அதிபர்களில் ஒருவரான ஆனந்த் மகிந்திரா, சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
குறிப்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஆனந்த மகிந்திரா பகிரும் கருத்துக்கள் நெட்டிசன்களை கவரும் வகையில் இருக்கும். இவரது ட்விட் பதிவுகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று சொல்லும் அளவுக்கு ஆனந்த் மகிந்திராவின் ட்விட் பதிவுகள் இணையத்தில் டிரெண்டிங் ஆகிவிடும்.
விபத்தில் சிக்கிய பெண்ணை கண்டதும் வாகனத்தை நிறுத்தி, முதலுதவி செய்த பிரியங்கா காந்தி!

ஆனந்த் மகிந்திரா ட்விட் பதிவு
ட்விட்டரில் 1 கோடிக்கும் மேற்பட்ட பாலோயர்களை கொண்டுள்ள ஆனந்த் மகிந்திரா, தனக்கு கிடைக்கும் சுவாரசியமான தகவல்கள், இணையதளத்தில் தென்படும் தன்னம்பிக்கை கதைகள், துணுக்குகள், அசாத்திய திறன்களுடன் செய்யப்படும் வேலைப்படுகள் என பல பதிவுகளை தனது ட்விட்டரில் அடிக்கடி பதிவிட்டு வருகிறார். சில அசாத்திய திறமைகளுடன் செய்யப்படும் வேலைப்பாடுகளை பார்த்து பாராட்டும் ஆனந்த் மகிந்திரா, சில சமயம் அத்தகைய நபர்களுக்கு உதவுவதாகவும் உறுதி அளித்து அதன்படி உதவிகளையும் செய்து வருகிறார்.

6 பேர் பயணிக்கக் கூடிய வகையில்
இப்படி இவருடைய பல பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. அந்த வகையில் வகையில் தான் இன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் டிரெண்டாகி வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் 6 பேர் பயணிக்கக் கூடிய வகையில் டிசைன் செய்யப்பட்ட ஒரு இரண்டு சக்கர வாகனத்தை வடிவமைத்த கிராமப்புற இளைஞர்களை பாராட்டி பதிவிட்டுள்ளார்.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கி.மீ
இது தொடர்பாக ஆனந்த் மகிந்திரா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், இரண்டு சக்கரங்கள் மட்டுமே கொண்ட வகையில் டிசைன் செய்யப்பட்ட வாகனத்தை இளைஞர் ஒருவர் ஓட்டி வருகிறார். இதில் ஆறு பேர் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக நீளமாக அமைக்கப்பட்டு இருக்கின்றன. மின்சாரத்தில் இயங்கும் இந்த வாகனத்தை ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கி.மீட்டர் வரை ஓடும் என்று வாகனத்தை ஓட்டி வரும் இளைஞர் கூறுகிறார். இந்த வாகனத்திற்கு ஒருமுறை சார்ஜ் ஏற்ற ஆகும் செலவும் வெறும் 10 ரூபாய்தான் என்றும் கூறுகிறார்.

தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய்
இந்த வீடியோவைத்தான் ஆனந்த் மகிந்திரா தனது ட்விட் பதிவில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு கேப்ஷனாக ஆனந்த மகிந்திரா பதிவிட்டு இருப்பதாவது:- "சிறிய வடிவமைப்பு அம்சங்களுடன் சர்வதேச கவனத்தை ஈட்ட முடியும். கூட்டம் நிறைந்த ஐரோப்பிய சுற்றுலா மையங்களில் டூர் பஸ்சுக்காக பயன்படுத்தலாம்? கிராமப்புறங்களின் புதுமையான டிரான்ஸ்போர்ட் கண்டுபிடிப்புகள் எனக்கு எப்போதும் என்னை ரசிக்க வைக்கும். தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் ஆக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் கருத்து
இது போன்ற வாகனத்தை வடிவமைக்க 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை செலவு ஆனதாக வீடியோவில் பேசும் இளைஞர் குறிப்பிடுகிறார். 6 பேருடன் இந்த வாகனம் செல்லும் காட்சிகளும் வீடியோவில் இடம் பெற்று இருக்கின்றன. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். பூங்காக்கள், ஜூக்கள் போன்ற பரந்த இடங்களுக்கு மட்டுமே இதை பயணிகளுக்காக பயன்படுத்தலாம் என்றும் சாலை போக்குவரத்திற்கு உகந்தது இல்லை என்றும் சில நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர். அதேபோல், இதுபோன்ற கண்டுபிடிப்புகள் சாத்தியம் என்றாலும் இதற்கான அரசின் ஒப்புதல்கள் வாங்குவது போன்ற நடவடிக்கைகள் இது முன்னோக்கி செலவதற்கு தடையாகிவிடும் என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர்.