கூகுள் நிறுவனத்திலும் சாதியா? தலித் பேச்சாளருக்கு தடை.. சுந்தர் பிச்சை மீதே புகார் -மேலாளர் ராஜினாமா
வாஷிங்டன்: கூகுள் நிகழ்வில் தலித் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் தேன்மொழி சௌந்தரராஜன் உரையாற்ற சில ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நிகழ்ச்சியே ரத்து செய்யப்பட்டது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
அமெரிக்காவில் வசித்து வரும் தேன்மொழி சௌந்தரராஜன், ஈகுவாலிட்டி லேப்ஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
சாதி ரீதியாக பாதிக்கப்படும் தலித்துகளுக்கு தனது தொண்டு நிறுவனத்தின் மூலமாக சட்ட உதவிகளை வழங்கி வருகிறார் தேன்மொழி சௌந்தரராஜன்.
Memes சர்வர் சூடாகுது.. கிராஷ் ஆகிவிடும்!.. தேடினது போதும்.. சுந்தர் பிச்சை உருக்கம்!.. வேற லெவல்!

தேன்மொழி சௌந்தரராஜன்
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் கூகுள் நியூஸ் ஊழியர்கள் மத்தியில் தலித்துகளின் வரலாறு தொடர்பான கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் தேன்மொழி சௌந்தரராஜன் உரை நிகழ்த்த இருந்தார். இதற்கு கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சி ரத்து
குறிப்பாக தேன்மொழி ஒரு இந்து விரோதி என்றும், இந்துக்களுக்கு எதிரானவர் எனவும் நிறுவன உயரதிகாரிகளுக்கு மின்னஞ்சல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து தேன்மொழி சௌந்தரராஜன் கலந்துகொள்ள இருந்த கருத்தரங்கை கூகுள் நிறுவனம் ரத்து செய்தது. இது தொடர்பாக கூகுள் நிறுவன தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சையிடமும் தேன்மொழி முறையிட்டதாக கூறப்படுகிறது.

சுந்தர் பிச்சை
ஆனால், சுந்தர் பிச்சை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில், இந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்த கூகுள் நியூசின் மூத்த மேலாளர் தனுஜா குப்தா ராஜினாமா செய்வதாக அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூகுள் தலைமைக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் கூகுள் பன்முகத்தன்மையை நிலைநிறுத்தும் முயற்சிகளில் வெற்றிபெற விரும்புகிறதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கூகுளில் சாதியா?
விமர்சனங்களை எதிர்கொள்ளவும், பெண்களை தாக்கவும் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்வது கூகுளில் சாதாரணமானதாகி விட்டது எனக் கூறியுள்ளார். இதுகுறித்து அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் இதழுக்கு பேட்டியளித்த தேன்மொழி சௌந்தரராஜன் தெரிவிக்கையில், "சுந்தர் பிச்சை ஒரு இந்தியர். ஒரு பிராமணர். அவர் தமிழ்நாட்டில் வளர்ந்தவர். தமிழ்நாட்டில் பிறந்த ஒருவர் சாதி அரசியலை அறியாமல் இருக்க வாய்ப்பே இல்லை." எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொழிலாளர் அமைப்புகள் கண்டனம்
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆசிய பசிபிக் அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பான (AFL-CIO) வின் தலைமை இயக்குநர் அல்வினா யெஹ் தெரிவிக்கையில், "கூகுளில் நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகளை தனித்தனியாக பிரித்து பார்க்க முடியாது. பாதுகாப்பான பணியிடம் மற்றும் சாதி சமத்துவத்துக்காக போராடி வரும் தொழிலாளர்கள் மீது கூகுளின் பழிவாங்கும் நடவடிக்கை கவலையளிக்கிறது." எனக் கூறியுள்ளார். ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என கூகுள் மறுத்துள்ளது.