"அணு ஆயுதங்கள்!" உக்ரைன் போர் தொடர்ந்தால்.. அது தான் புதினின் கடைசி ஆயுதம்! பென்டகன் தரும் வார்னிங்
வாஷிங்டன்: உக்ரைன் போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக அமெரிக்காவின் பென்டகன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப். 24ஆம் தேதி முழு வீச்சில் போரைத் தொடங்கியது. சில நாட்களில் போர் முடிந்துவிடும் என்றே பலரும் நினைத்த நிலையில், இந்தப் போர் 4ஆவது வாரமாகத் தொடர்கிறது.
உக்ரைன் நாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. இந்த போரால் இரு நாட்டு மக்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் கடுமையான இழப்புகள் சந்தித்து வருகின்றனர்.

அதிருப்தி
உலகில் மிகப் பெரிய ராணுவங்களில் ஒன்றா ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன. இதன் காரணமாகவே போர் பல நாட்களாகத் தொடர்கிறது. பல பகுதிகளில் ரஷ்ய ராணுவத்தால் மேற்கொண்டு முன்னேற முடியாத சூழலும் நிலவுகிறது. இதனால் ரஷ்ய அதிபர் புதின் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், ரஷ்ய உளவுப் பிரிவின் முக்கிய அதிகாரிகளையும் வீட்டுச்சிறையில் வைக்கவும் புதின் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பென்டகன்
இந்நிலையில், உக்ரைன் போர் எதிர்பார்த்த காட்டிலும் நீண்ட காலம் தொடர்ந்தால் ரஷ்ய ராணுவம் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் பென்டகன் தெரிவித்துள்ளது. இது குறித்துப் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் பெரியர் கூறுகையில், "உக்ரைன் போர் தொடர்வது ரஷ்ய ராணுவத்தைப் பலவீனப்படுத்தும். அதேபோல பொருளாதாரத் தடைகளும் ரஷ்யாவின் நீண்ட கால வளர்ச்சியைக் கடுமையாகப் பாதிக்கும். உலக நாடுகள் ரஷ்யாவைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளிலும் தீவிரம் காட்டி வருகின்றன.

அணு ஆயுதம்
இவை அனைத்தும் சேர்ந்து ரஷ்யாவின் நவீன துல்லியமான தாக்குதல் என்ற திறனை அச்சுறுத்தும். இந்தப் போரும் இதனால் ஏற்பட்ட விளைவுகளும் மெல்ல ரஷ்ய வலிமையைப் பலவீனப்படுத்துவதால், மேற்கு நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், தனது பலத்தை முன்னிறுத்துவதற்கும் ரஷ்யா தனது அணுசக்தி ஆயுதங்களை அதிகம் நம்பி இருக்கும் வாய்ப்புகள் அதிகம்" என்றார். கடந்த சில வாரங்களுக்கு முன்னரே, நாட்டில் இருக்கும் அணு ஆயுதப்படைகள் தயார் நிலையில் இருக்கும் ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா
உக்ரைன் போரில் இதுவரை ரஷ்யா விரும்பிய முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த பென்டகன் அதிகாரி ஒருவர், படையெடுப்பு பெருமளவில் ஸ்தம்பித்துள்ளது என்றும் பல பகுதிகளில் ரஷ்யா ராணுவத்தால் மேற்கொண்டு முன்னேற முடியாத சூழலே உள்ளதாகத் தெரிவித்திருந்தார். மேலும், உக்ரைன் போரில் தோல்வி அடைந்தால், அது ரஷ்யாவின் ஆத்திரத்தை அதிகப்படுத்தும் என்றும் இது உக்ரைன் மட்டுமின்றி அனைத்து மேற்கு நாடுகளுடன் ரஷ்யா மோதலில் ஈடுபட வழிவகை செய்யும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஆபத்தான முறை
இது தொடர்பாக அந்த பென்டகன் அதிகாரி மேலும் கூறுகையில், "உக்ரைன் உட்பட முன்னாள் சோவியத் நாடுகள் மீதான செல்வாக்கை மீட்டு எடுக்கவே ரஷ்யா இந்தப் போர் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. உக்ரைன் இந்த விஷயத்தில் அதிக எதிர்ப்பை காட்டியது. போர் தொடங்கிய சமயத்தில் ஒப்பீட்டளவில் ரஷ்யாவுக்கு அதிக இழப்புகள் ஏற்பட்ட போதிலும், உக்ரைன் அரசு தனது வழிக்கு வராத வரை, ரஷ்யா இன்னும் ஆபத்தான முறைகளைப் பயன்படுத்தி போரில் முன்னேற வாய்ப்புள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.

அணு ஆயுதங்கள்
உக்ரைன் மீதான போர் தொடங்கி சில நாட்களிலேயே ரஷ்ய அணு ஆயுதப்படைகள் தயார் நிலையில் இருக்கும்படி ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டிருந்தார். அதேபோல உக்ரைன் நாட்டில் இருக்கும் முக்கிய அணுமின் நிலையங்களையும் ரஷ்ய ராணுவம் கைப்பற்றியது. மேலும், திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவின் உதவியுடன் அணு ஆயுதங்களை உக்ரைன் தயாரித்து வருவதாக ரஷ்யா பரபர குற்றச்சாட்டை முன் வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications