2020 மாதிரியே சம்பவம்.. இண்டியானா, கென்டகி மாகாணத்தை அப்படியே தூக்கிய டொனால்டு டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. புதிய அதிபர் கமலா ஹாரிசா? அல்லது டிரம்பா? என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும். வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கி உள்ளது. 270 என்ற மேஜிக் எண்ணை பெறுபவர் வெற்றி பெறுவார். இந்நிலையில் 2020ம் ஆணடு மாதிரியே இண்டியானா, கென்டகி மாகாணத்தில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். வெர்மெண்ட்டில் கமலா ஹாரிஸ் வென்றுள்ளார்.
உலகையே நாட்டாமை செய்யும் ஒரு நாடு என்றால் அது அமெரிக்கா தான். அந்த நாட்டின் அதிபர் தான் அங்கு சக்தி வாய்ந்த தலைவர். அமெரிக்காவை பொறுத்தவரை இரண்டு கட்சிகள் பிரதானமாக உள்ளன. ஒன்று ஜனநாயகக் கட்சி. இன்னொன்று குடியரசு கட்சி. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் இரண்டு முறை தான் அதிபர் பதவி வகிக்க முடியும். அதாவது ஒருவர் 8 வருடம் பிளஸ் 2 வருடம் என 10 வருடத்திற்கு மேல் அமெரிக்காவில் அதிபராக இருக்க முடியாது. தற்போது ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் உள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்ட ஜோ பைடனின் பதவிகாலம் வருகிற 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான ஆயத்த பணிகள் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே ஆரம்பம் ஆனது.
அதிபர் வேட்பாளர்களாக ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் களம் இறங்கியிருக்கிறார்கள். இதேபோல் வேறு சில கட்சி வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் கமலா ஹாரிஸ்-டிரம்ப் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது நமது நாட்டில் உள்ளது போலவே மக்கள் நேரடியாக தேர்ந்து எடுப்பதில்லை. எலெக்ட்ரோல் காலேஜ் (தேர்வுக்குழு உறுப்பினர்கள்) முறைப்படி வாக்குப்பதிவு நடக்கும். மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். அதாவது இந்தியாவில் எப்படி ஒவ்வொரு மாநிலத்திற்கு 10, 15 அல்லது 80 எம்பிக்கள் வரை ஆதரவு உள்ளதோ, அதுபோல் தான் அமெரிக்காவிலும் உள்ளது. ஆனால் அதனை எலக்ட்ரோல் வாக்குகள் என்று அழைப்பார்கள். யார் 270 என்ற மேஜிக் எண்ணை தொடுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்களாகிறார்கள்.
அமெரிக்காவில் மொத்தம் 16 கோடியே 50 பேர், வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள் ஆவர். இதில் பலர் தபால் மூலமும், இ-மெயில் மூலமும் வாக்களித்து இருந்தனர். இந்தநிலையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மொத்தம் உள்ள 50 மாகாணங்களிலும் நேற்று நடந்நது. அமெரிக்காவை பொறுத்தவரை மிகப்பெரிய நாடு என்பதால் ஒரே மாதிரியான நேர வகை இல்லை.. 4 வகையான நேரம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் குறிப்பிட்ட சில மாகாணங்களில் காலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி நேற்று மாலை 5 மணிக்கு) வாக்குப்பதிவு தொடங்கியது. இதேபோல் பென்சில்வேனியா, ஜார்ஜியாவில் இந்திய நேரப்படி நேற்று மாலை 5.35 மணிக்கும், அரிசோனாவில் மாலை 6.30 மணிக்கும் வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். அமெரிக்காவை பொறுத்தவரை என்னதான் டிஜிட்டல் முறைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், வாக்குச்சீட்டு முறையில் தான் தேர்தல் நடக்கும். அப்படித்தான் நேற்று தேர்தல் நடந்தது. வாக்காளர்கள் தங்களுக்கு பிடித்த வேட்பாளர்களுக்கு வாக்களித்து, அந்த சீட்டை ஓட்டுப்பெட்டியில் போட்டார்கள். இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு சில மாகாணங்களில் வாக்குப்பதிவு முடிந்தது. பல மாகாணங்களில் காலை 8 மணிக்கு முடிவடைகிறது.
அமெரிக்காவை பொறுத்தவரை வாக்குப்பதிவு முடிந்த உடனேயே பதிவான வாக்குகளை எண்ண தொடங்கிவிடுவார்கள். அந்த வகையில் வாக்கு எண்ணிக்கை சில இடங்களில் தொடங்கி உள்ளது. இந்நிலையில் சிஎன்என் ஊடகம், இண்டியானா மாகாணம் குறித்த கணிப்பை வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. இண்டியானா மாகாணத்தில் மொத்தம் 11 எலக்ட்ரோல் வாக்குகள் உள்ளது. இங்கு டிரம்ப் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கணித்தது சிஎன்என் ஊடகம்.. இதேபோல் வெஸ்ட் வெர்ஜினாவிலும் டிரம்ப் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக சிஎன்என் ஊடகம் கணித்தது. இண்டியானா மற்றும் வெஸ்ட் வெர்ஜினா ஆகிய மாகாணங்களை பொறுத்தவரை கடந்த முறையும் டிரம்ப் தான் வெற்றி பெற்றார். ஆனால் ஒட்டுமொத்தமாக அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தான் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் கணிப்பு படியே, இண்டியானாவில் டிரம்ப் வெற்றி பெற்று 11 வாக்குகளை பெற்றுள்ளார். கென்டகி மாகாணத்திலும் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அங்கு 8 எலக்ட்ரோல் வாக்குகளை டிரம்ப் பெற்றுள்ளார். மொத்தம் 23 எலக்ட்ரோல் வாக்குகளை பெற்றுள்ளார் டிரம்ப். கமலா ஹாரிஸ் இதுவரை 3 எலக்ட்ரோல் வாக்குகளையே பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் வெர்மொண்ட் மாகாணத்தில் வென்று 3 எலக்ட்ரோல் வாக்குகளை பெற்றுள்ளார். வெர்மொண்ட்டை பொறுத்தவரை கடந்த முறை பைடன் தலைமையிலனா ஜனநாயக கட்சி வென்று இருந்தது. இந்த முறையும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டுள்ள கமலா ஹாரிஸ் வென்றுள்ளார். கென்டகி மாகாணத்தை பொறுத்தவரை கடந்த முறையும் டிரம்ப் தான் வெற்றி பெற்றார். அதேபோலவே இந்த முறையும் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications