For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது- 8 வழிச்சாலைத் திட்டத்தை கைவிடுக: அன்புமணி ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை- சேலம் 8 வழிச் சாலை திட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பு ஏமாற்றம் தருவதாகவும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் பாமக இளைஞரணி தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளதாவது:

சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு செல்லாது என்றும், அத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த தடையில்லை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. உழவர்களின் நலன்களை பாதிக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது; இது ஏமாற்றமளிக்கிறது.

PMK MP Anbumani Ramadoss urges to withdraw Chennai Salem 8 Lane Expressway

சென்னையிலிருந்து சேலத்திற்கு உளுந்தூர்பேட்டை வழியாக ஒரு தேசிய நெடுஞ்சாலை, வேலூர், கிருஷ்ணகிரி வழியாக இன்னொரு நெடுஞ்சாலை என இரு தேசிய நெடுஞ்சாலைகள் இருப்பதாலும், திண்டிவனம் - கிருஷ்ணகிரி வழியாக மூன்றாவது தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருவதாலும் வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தி நான்காவது தேசிய நெடுஞ்சாலை அமைக்கத் தேவையில்லை என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுதியான நிலைப்பாடு ஆகும். அதனால் தான் சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.

8 வழிச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் 7,000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் கையகப் படுத்தப்படும்; 10 ஆயிரத்திற்கும் கூடுதலான விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழக்கும் என்பதால் இத்திட்டத்தை எதிர்த்து கடுமையான போராட்டங்களை பா.ம.க. நடத்தியது. இந்த திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய 5 மாவட்ட மக்களை, விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தேன்.

அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த திட்டத்திற்கு தடை விதித்ததுடன், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்கவும் ஆணையிட்டது.

சென்னை - சேலம் இடையிலான பசுமைவழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு உச்சநீதிமன்றத்திற்கு செல்லும் என்று எதிர்பார்த்ததால், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவையும் தாக்கல் செய்தேன். உச்சநீதிமன்றத்தில் வலிமையான சட்டப்போராட்டத்தையும் எங்கள் வழக்கறிஞர்கள் மேற்கொண்டனர்.

ஆனால், அவை அனைத்தையும் மீறி, 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இப்படி ஒரு தீர்ப்பை நானோ, உழவர்களோ எதிர்பார்க்கவில்லை.

ஆனாலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பில் ஆறுதல் அளிக்கும் அம்சம் ஒன்று உள்ளது. 8 வழிச்சாலைக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருக்கும் போதே, உழவர்களின் பெயர்களில் இருந்த நிலங்களை அரசாங்கத்தின் பெயர்களுக்கு மாற்றி வருவாய்த்துறை ஆவணங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அந்தத் தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது.

அதன்படி 8 வழிச்சாலை திட்டத்திற்காக உழவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்கள் அனைத்தும் இப்போது ஆவணங்களின்படி உழவர்களிடமே திருப்பி வழங்கப்பட்டிருக்கிறது.

8 வழிச்சாலைத் திட்டத்திற்காக அந்த நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என்றால் அதற்காக புதிய அறிவிக்கை வெளியிட்டு, உழவர்களின் விருப்பங்களைக் கேட்டறிந்து அதனடிப்படையில் தான் அரசு செயல்பட வேண்டும். 8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம் என்றாலும் கூட, அதற்குத் தேவையான நிலங்களை தமிழக அரசு தான் கையகப்படுத்தித் தர வேண்டும்.

நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உழவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அவர்களின் நலன்களைக் கருதியும், அவர்களின் விருப்பங்களின்படியும் நிலம் கையகப்படுத்தப்படுவதை அரசு தவிர்க்க வேண்டும்.

வாணியம்பாடியிலிருந்து திருப்பத்தூர், ஊத்தங்கரை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மஞ்சவாடி, அயோத்திப்பட்டினம் வழியாக சேலத்திற்கு செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலை 179- ஏ என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இதை 4 வழிச்சாலையாக மாற்றும் திட்டம் ரூ.521 கோடியில் தயாரிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நிறைவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளன.

இந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் 8 வழி பசுமைச்சாலைக்கு தேவையே இருக்காது என்பதால் சென்னை- சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டில் உழவர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக போராடுவதில் முதன்மை இடத்தில் இருப்பது பாட்டாளி மக்கள் கட்சி தான். சென்னை - சேலம் 8 வழிச்சாலை விவகாரத்திலும் உழவர்கள் நலன்களை பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பா.ம.க. உறுதியாக எடுக்கும்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
PMK Youth Wing leader and Rajyasabha MP Anbumani Ramadoss has urged to withdraw that the Chennai Salem 8 Lane Expressway Project.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X