For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரியலூர் ஹைட்ரோகார்பன் திட்டம்...எதேச்சதிகாரப் போக்குடன் நடக்கும் மத்திய பாஜக அரசு- சீமான் பாய்ச்சல்

Google Oneindia Tamil News

சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அரியலூர், கரூர், திருச்சி மாவட்டங்களையும் சேர்த்து நாசகார ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

Seeman on Centres New Hydrocarbon projects in Ariyalur

ஹைட்ரோ கார்பன் எனும் எரிகாற்று எடுக்கும் திட்டத்திற்கெதிராக ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்ப்பைத் தெரிவித்து, அதனை ஆளும் அரசும் ஏற்று அத்திட்டத்தைக் கைவிடுவதற்குக் கொள்கை முடிவு எடுத்திருக்கிறது. ஆனால் அதனை அலட்சியப்படுத்தி மாநில அரசைத் துளியும் மதியாது மத்தியில் ஆளும் பாஜக அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த முனைவது அதிர்ச்சியளிக்கிறது.

Seeman on Centres New Hydrocarbon projects in Ariyalur

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாகத் தொடங்கவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடக்கோரி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ள நிலையில், அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசின் ஒ.என்.ஜி.சி. நிறுவனம் அனுமதிகேட்டு மாநில சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மாநில அரசின் தன்னுரிமைக்கும், மக்களின் மண்ணுரிமைக்கும் மதிப்பளிக்காது எதேச்சதிகாரப்போக்கோடு தமிழகத்தின் மீது நிலவியல் போரைத் தொடுக்க முயலும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் செயல் மக்களாட்சித் தத்துவத்திற்கெதிரான மாபாதகமாகும்.

Seeman on Centres New Hydrocarbon projects in Ariyalur

வேளாண் பெருங்குடி மக்களின் நெடுநாள் கோரிக்கை முழக்கத்தை ஏற்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர், அரியலூர், கடலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி சமவெளிப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அன்றைய அதிமுக அரசு அறிவித்தது. இதனால் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெயில் எரிவாயு உள்ளிட்ட திட்டங்களால் அச்சமடைந்திருந்த விவசாயப் பெருங்குடி மக்கள் நிம்மதியடைந்தனர். ஆனால், அதிமுக அரசால் சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டபோது முந்தைய அறிவிப்புக்கு மாறாக திருச்சி, கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் விடுபட்டிருந்தது பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது.

மேலும், அந்தச் சட்டத்தின் 4(2)(a) பிரிவானது, அச்சட்டம் செயற்பாட்டுக்கு வரும்முன் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் எதுவும் நிறுத்தப்படாது என்று கூறப்பட்டிருந்தது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைச் சுட்டிக் காட்டி அரசின் முடிவை எதிர்த்து அப்போதே நாம் தமிழர் கட்சி குரல் கொடுத்தது. தற்போது காவிரி சமவெளிப்பகுதியில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டுவது விவசாயிகளைப் பெருங்கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Seeman on Centres New Hydrocarbon projects in Ariyalur

தமிழகம் மற்றும் புதுவையில் 1984-ம் ஆண்டிலிருந்து ஒ.என்.ஜி.சி நிறுவனம் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய்க்கிணறுகளை அமைத்து வருகிறது. 1984-ம் ஆண்டிலிருந்து, தற்போதுவரை மொத்தமாக 768 கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 187 கிணறுகள் (திருவாரூரில் 78, நாகையில் 57, தஞ்சையில் 12, கடலூரில் 4, அரியலூரில் 1, இராமநாதபுரத்தில் 35) என மொத்தமாக 187 கிணறுகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. 2019-ம் ஆண்டில் மட்டும் தமிழகம், புதுவையில் வேதாந்த நிறுவனம் 274 கிணறுகளும், ஓ.என்.ஜி.சி 215 கிணறுகளும் என மொத்தமாக 489 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்காக ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

Seeman on Centres New Hydrocarbon projects in Ariyalur

அரசு அறிவித்துள்ள கொள்கையின்படி, ஏற்கனவே மூடப்பட்ட கிணறுகள் மற்றும் தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் கிணறுகள் உட்பட அனைத்துக்கிணறுகளும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்தான். இப்போது எண்ணெய்க்கிணறுகளாக இருக்கும் கிணறுகளில்கூட, நாளை நீரியல் விரிசல் (Hydraulic fracking) முறைப்படி மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ள முடியும். இந்தப் புதிய கிணறுகளுடன் சேர்த்து ஏற்கனவே இருக்கும் 768 கிணறுகளையும் தடையின்றிச் செயல்பட அனுமதிப்பதுதான் அரசின் திட்டமென்றால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்' என்ற முந்தைய அரசின் பேரறிவிப்பு, பன்னாட்டு நிறுவனங்களின் வளச்சுரண்டலுக்குத் தடையாக இருந்த விவசாயிகள், பொதுமக்களைத் திசைதிருப்பவே என்பது வெட்டவெளிச்சம்.

மேலும், நிலமும், வேளாண்மையும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹைட்ரோ கார்பன் போன்ற கனிமங்கள் மத்திய அரசின் கீழ் வருவதால் 2019-ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு வழங்கப்படும் சுற்றுச்சூழல் அனுமதியே போதுமென்றும், மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியம் அனுமதியைத் தனியாகப்பெறத் தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மாநில அரசின் அனுமதியே தேவையில்லை என்றாகிவிடுகிறது. அதனடிப்படையிலேயே தற்போது புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு முனைகிறது.

அதுமட்டுமின்றி 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எண்ணெய் - எரிவாயுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த மக்களிடம் கருத்துக் கேட்க அவசியமில்லையென்று குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் இந்திய சுற்றுச்சூழல் துறை அனுமதியளித்து அறிவிக்கை வெளியிட்டது. இவையெல்லாம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தைப் பயனற்றதாக்கும் மறைமுகச் செயல்திட்டங்களே. எனவே, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என முந்தைய அதிமுக அரசு அறிவித்ததை உண்மையிலேயே செயல்படுத்திட, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தில் விடுபட்டுப்போன திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்க்க திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தையே நீர்த்துபோகச் செய்யும் பாதகமான சட்ட உட்பிரிவுகளை நீக்க வேண்டும். வேளாண் நிலங்கள், நீர் நிலைகள், நிலத்தடிநீர் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் ஏற்கனவே செயல்பாட்டிலுள்ள அல்லது கைவிடப்பட்ட எந்தவொரு திட்டத்தையும் தொடர்ந்து செயல்பட மாநில சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. வளர்ச்சி என்ற பெயரில் கெயில், சாகர் மாலா, பெட்ரோலிய முதலீட்டு மண்டலம், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ என்று புதிய புதிய திட்டங்களை வெவ்வேறு பெயர்களில் கொண்டுவந்து விவசாய நிலங்களை அழிக்க நினைக்கும் மத்திய அரசின் பேரழிவுத் திட்டங்களை தமிழக அரசு எவ்வகையிலும் அனுமதிக்கக்கூடாது. மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்குப் பதிலாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியே போதும் என்ற மாநில அரசுகளின் தன்னாட்சி உரிமையைப் பாதிக்கக் கூடிய ஒன்றிய அரசின் ஒற்றையாட்சிக் கொள்கை முடிவுகளுக்கு எதிராகவும், மண்ணின் வளத்தைப் பாதிக்ககூடிய திட்டங்களைச் செயல்படுத்த மக்களிடம் கருத்துக்கேட்க தேவையில்லை என்ற மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும் மத்திய அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளை எதிர்த்து வெறுமனே கடிதம் மட்டும் எழுதாமல், பாராளுமன்றத்தில் தங்களுக்குள்ள எண்ணிக்கைப் பலத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி ஆளும் திமுக அரசு உறுதியான அரசியல் மற்றும் சட்டப் போராட்டத்தை மேற்கொண்டு அவற்றைத் திரும்பப்பெறச் செய்யவேண்டும்.

இவற்றைச் செய்துமுடித்து, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான அறிவிப்பின் நோக்கத்தை முழுமைப்படுத்தி தமிழக விவசாயிகளையும், விவசாயத்தையும் காத்திட முன்வரவேண்டும். மேலும், அரியலூர், புதுக்கோட்டை மட்டுமின்றி தமிழகத்தின் எந்தவொரு பகுதியிலும் மக்களையும், மண்ணையும் பாதிக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒருபோதும் துணைப்போகக் கூடாதென்றும், இது குறித்தான தமிழக அரசின் உறுதியான நிலைப்பாட்டை ஒன்றிய அரசுக்குத் தெளிவாக விளக்கிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

English summary
Naam Tamilar Chief Seeman has Condemned that the Centre's New Hydrocarbon projects in Ariyalur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X