Aadiperukku 2026: செல்வ வளம் பெருக ஆடிப்பெருக்கில் செய்ய வேண்டிய வழிபாடு..தாலிசரடு மாற்ற நல்ல நேரம்?
சென்னை: ஆடி மாதத்தில் பருவ மழைகள் பெய்து, நீர்நிலைகள் நிரம்புவது வழக்கம். ஆடி மாதத்தின் 18 ஆம் நாளான ஆடிப்பெருக்கு நாளில் எந்த விஷயங்களை ஆரம்பித்தாலும் அவை அந்த ஆண்டுதோறும் பெருகும் என்பது நம்பிக்கை. செல்வ வளம் பெருக ஆடிப்பெருக்கு நாளில் செய்ய வேண்டிய வழிபாடுகள், தாலி சரடு மாற்றுவதற்கான நல்ல நேரம் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ஆடி 18 ஆம் நாளான ஆடிப்பெருக்கு தமிழர்களின் முக்கியப் பண்டிகையாகும். நீர்நிலைகளுக்கு நன்றி தெரிவித்து வழிபடும் நாளே ஆடிப்பெருக்கு நாளாகும். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி உண்டு. நீர் வளம் பெருகும் இந்த மாதத்தில் தான் விவசாயிகள் நெல், கரும்பு போன்றவற்றை விதைத்து தை மாதத்தில் அறுவடை செய்வார்கள். ஆடிப்பெருக்கன்று எந்த விஷயத்தை செய்தாலும் அது பெருகும் என்பது நம்பிக்கை. புத்தாடை, தங்கம், மஞ்சள், கல் உப்பு போன்ற மங்களப் பொருள்களை இந்நாளில் வாங்குவது நன்மையைத் தரும்.

அந்த வகையில், வீட்டில் செல்வ வளம் பெருகவும், மாங்கல்ய பாக்யம் நீடிக்கவும் ஆடிப்பெருக்கு நன்னாளான இன்று செய்ய வேண்டிய வழிபாடு, தாலி சரடு மாற்றுவதற்கான நல்ல நேரம் குறித்து பார்க்கலாம்.
செல்வ வளம் பெருக செய்ய வேண்டிய வழிபாடு..
ஆடிப்பெருக்கு நாளான இன்று ஆறு, குளங்கள் போன்ற நீர்நிலைகளின் கரைகளில் இலை விரித்து, அதன் மேல் அகல்விளக்கேற்றி மகாலட்சுமியை வழிபாடு செய்வது மேன்மையைத் தரும். காவிரியை தாயாக எண்ணி வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் போன்ற மங்களப் பொருள்களை படைத்து வழிபாடு செய்வது நல்லது.
திருமணமாகாத பெண்கள் நல்ல வரன் அமைய வேண்டி இந்த நன்னாளில் அம்பாளை எண்ணி மஞ்சள் கயிறு கட்டிக் கொள்ளலாம். புதுமணத் தம்பதியினர், சுமங்கலிப் பெண்கள் தாலி மாற்றிக் கொள்வது நன்மையைத் தரும்.
சுமங்கலிப் பெண்களுக்கு தாலிக் கயிறு, மஞ்சள், குங்குமம், புத்தாடை, வளையல் போன்றவற்றை தானமாக கொடுப்பது அனுகூலத்தை ஏற்படுத்தும்.
ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவது, கோசாலைகளுக்குத் தேவையான பொருள்களை தானமாக அளிப்பது சகலவித நன்மைகளையும் ஏற்படுத்தும்.
அரிசி, பருப்பு, மஞ்சள், கல் உப்பு போன்ற பொருட்களை வீட்டில் குறையாமல் வாங்கி நிரப்பி வைப்பது நன்மையைத் தரும். தங்கம், வெள்ளி போன்றவற்றையும் வாங்கலாம்.
தாலி சரடு மாற்ற நல்ல நேரம் எது?
காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரையும், மாலையில் 3.15 மணி முதல் 4.15 மணி வரையும் மிகச் சிறந்த நல்ல நேரமாக பார்க்கப்படுகிறது. அன்று காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலம் இருந்தாலும் இந்த நல்ல நேரத்தில் சரடு மாற்றினால் பிரச்சனை இல்லை. ஒரு வேளை ராகு காலம் என உங்களுக்கு நெருடலாக இருந்தால் மாலை நேரத்தில் கொடுக்கப்பட்ட நேரத்தில் மாற்றிக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
