ஆருத்ரா தரிசனம்: மார்கழி திருவாதிரை.. சிதம்பரம் நடராஜர் தாண்டவத்தை தரிசித்தால் இத்தனை நன்மைகளா?
சிதம்பரம்: மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப்படுகிறது. பிறப்பே எடுக்காத சிவபெருமானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்று கூறுவது விந்தையான விசயம்தான். மார்கழி திருவாதிரையில் நடராஜரின் தாண்டவத்தை தரிசித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
தேவர்களின் விடிகாலை பொழுதாக போற்றப்படும் மார்கழியில் திருவாதிரைப் பண்டிகை ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. இது சிவனுக்கு உகந்த நாள். ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளான சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை.
சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள். சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற நாள் ஆருத்ரா நன்னாள். சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும்

பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன் என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவ பெருமானைக் குறிக்கிறது. சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது பற்றி புராணச் செய்திகள் உள்ளன.
சேந்தனார் வீட்டுக்கு களி சாப்பிட நடராஜப் பெருமான் வந்த அந்த தினம்,ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப் படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.
ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகா வுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும் ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.
திரேதாயுகா அலறித் துடித்து பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள். அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி,திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள்.
மனைவி பார்வதியின் சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும் அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள். இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது. சேந்தனாருக்கும் திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது.
மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜரின் திருநடனம் கண்டால் ஆச்சரியப்பட வைக்கும். இறைவனின் நடனமே உலகின் அசைவிற்கு காரணமாக இருக்கிறது. சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் 'காஸ்மிக் நடனம்' என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது. அணுவின் அசைவும் நடராஜரின் நடனமும் ஒன்றாக கருதப்படுகிறது. அதனாலேயே அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று திருமூலர் கூறியுள்ளார். கடவுள் துகள், ஹிக்ஸ் போசான் என்று பலவற்றை கண்டாலும் அது நடராஜரை தொடர்புபடுத்துகிறது, திருமூலரும் அப்படியே கூறுகிறார். கடவுளை, அணுவின் அணுவே என்று பாடுகிறார். அதையே சிவமாகப் பார்க்கிறார்.
ஒவ்வொரு தமிழ் மாதமும் திருவாதிரை நட்சத்திர தினம் என்பது சிவ வழிபாட்டுக்கு உகந்தது. அந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து சிவனை வழிபடுவார்கள். அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தில் வரக்கூடிய திருவாதிரை தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விரத நாள். இந்த நாளில் சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு வாய்ந்த அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும்.
இந்நாளில் நாம் காணும் நடராஜரின் அற்புதமான நடனத் திருக்காட்சியே ஆருத்ரா தரிசனம் என்று போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில் பெண்கள் விரதம் இருந்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதை மையமாகக் கொண்டு பெண்கள் சிலர் திருவாதிரை விரதம் எடுத்து தங்கள் தாலியினை மாற்றிக் கொண்டு சிவபெருமானை வழிபட்டு தங்களின் கணவருக்கு தீர்க்க ஆயுள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வர்.
சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த இரு விழாக்களிலும் மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் உற்சவராக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும். வேறு எந்த கோவில்களிலும் இத்தகைய சிறப்பை காண இயலாது என்பதால் இந்த விழாவை காண தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்திற்கு வருவார்கள்.
இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா வருகிற 28ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தினந்தோறும் சாமி அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உலா வந்து அருள்பாலிக்கிறார். 29ஆம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகனத்திலும், 30ஆம் தேதி தங்க சூரிய பிறை வாகனத்திலும், 31ஆம்தேதி வெள்ளி பூத வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது. ஜனவரி 1ஆம் தேதி கோபுர தரிசனம் எனும் தெருவடைச்சான் உற்சவமும், 2ஆம் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 3ஆம் தேதி தங்க கைலாச வாகனத்திலும், 4ஆம் தேதி தங்க ரதத்திலும் சாமி வீதி உலா நடைபெறும். தொடர்ந்து 5ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. ஆருத்ரா தாிசனம் விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணிவரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஆனந்த நடராஜருக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து காலை 6 மணி முதல் திருவாபரண அலங்கார காட்சி, சிற்சபையில் ரகசிய ஸ்தாபன பூஜை, பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெறுகிறது. தொடர்ந்து மதியம் 2 மணிக்கு ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து சாமியும், அம்பாளும் சிற்சபைக்கு எழுந்தருளும் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. 7ஆம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதி உலா, 8ஆம் தேதி இரவு ஞானபிரகாச குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறும். ஆருத்ரா தரிசனத்திற்கான விழா ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
இதனிடையே முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடாக திகழும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா நடைபெற உள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா மாணிக்கவாசருக்கு காப்பு கட்டுடன் டிசம்பர் 28ஆம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 5ல் மாணிக்கவாசகர் சப்பரத்தில் கிரிவல நிகழ்ச்சியும் அன்று இரவு ராட்டின திருவிழாவும் நடைபெறும். மேலும் முக்கிய நிகழ்வான ஜனவரி6 ஆருத்ர தரிசன விழாவும் நடைபெற உள்ளது. இதையொட்டி நடராஜரும் சிவகாமி அம்மனும் கிரிவலப் பாதையில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். இந்நிலையில் விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றார்கள்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications