இந்த பொருட்களை தானமாக கொடுங்கள்..உங்கள் கைராசிக்கு வீடு நிறைய ஐஸ்வர்யம் பெருகும்
சென்னை: இறைக்க இறைக்கத்தான் கிணற்றில் நீர் ஊரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். நாம் கற்ற கல்வியை பிறருக்கு சொல்லிக்கொடுத்தால் நம்முடைய அறிவு விருத்தி அடையும் அதுபோல நாம் சில பொருட்களை தானமாக கொடுத்தால் நம்முடைய செல்வம் விருத்தி அடையும். தானம் கொடுப்பவர்களை இறைவனுக்கு மிகவும் பிடிக்குமாம் எனவேதான் தானம் செய்பவர்களின் வீட்டில் செல்வம் மேலும் மேலும் பெருகுகிறது.
பெண்கள் கையால் செய்யக்கூடிய காரியம் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை. இதனால் தான் எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் அதை வீட்டில் இருக்கும் பெண்கள் கையால் செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள். பெண்கள் மகாலட்சுமியின் அம்சம் எனவேதான் வீட்டு பெண்களின் கைகளில் இருந்து தினம் ஒரு ரூபாயாவது ஆண்கள் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்வார்கள். அப்படி செய்வதன் மூலம் வருமானம் அதிகரிக்கும் என்றும் கூறுவார்கள்.
பெண்கள் தங்களின் கையால் சில பொருட்களை தானமாக கொடுத்தால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். அப்படி எந்தெந்த பொருட்களை தானமாக தர வேண்டும் எப்படி தர வேண்டும் என்று இன்றைக்கு பார்க்கலாம்.

செல்வம் பெருகும்
மேஷ ராசியில் பிறந்த பெண்கள் தங்க நிறத்தில் உள்ள பொருட்களை தானமாக தருவது நல்லது. மஞ்சள், கடலைப்பருப்பு, சுண்டல் போன்றவைகளை தானமாக தருவதன் மூலம் செல்வ வளம் பெருகும். மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்தால் விரைவில் செல்வம் சேரும். ரிஷப ராசிக்காரர்கள் தேனை தானமாக தரலாம். செவ்வாய் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்வதன் மூலம் செல்வம் பெருகும். ஏழை பெண்களின் திருமணத்துக்கு முடிந்த பொருட்களை தானம் செய்வதன் மூலம் தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும்.

கல்விக்கு பண உதவி
மிதுன ராசிக்காரர்கள் வெண் பொங்கல் சமைத்து முடிந்த அளவுக்கு ஏழைகளுக்கு தானம் கொடுங்கள். அனைத்து விதமான செல்வமும் தேடி வரும். ஏழை மாணவர்களுக்கு கல்விக்கு பணம் தானம் கொடுப்பதும் நன்மை தரும்.
கடக ராசிக்காரர்கள் பசுமாட்டுக்கு கீரை உள்ளிட்ட பொருட்களை தானமாக கொடுப்பதன் மூலம் குடும்பத்தில் வறுமையை விரட்டும். ஏழை நோயாளிகளுக்கு மருந்து வாங்கி தானம் கொடுத்தால் நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.
பால், தண்ணீர் தானம் செய்ய வற்றாத செல்வம் பெருகும்.

கோதுமை தானம்
சிம்ம ராசிக்காரர்கள் ஞாயிறு கிழமைகளில் தாமிரம், கோதுமை தானமாக தரலாம். ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதை கேட்டு வாங்கிக்கொடுக்க நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். கன்னி ராசிக்காரர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும். ஏழை மாணவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா வாங்கிக் கொடுக்க முன்னேற்றம் அதிகரிக்கும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தானம்
துலாம் ராசிக்காரர்கள் பசு நெய்யை தானமாக வாங்கிக் கொடுக்கலாம். ஆதரவற்ற இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு படிப்பு உதவித்தொகை தானமாக கொடுப்பது உங்கள் வீட்டு வாரிசுகளுக்கு நல்லது.
விருச்சிக ராசிக்காரர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தானம் செய்ய செல்வம் சேரும். அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் தானம் செய்தால் பண வரவு அதிகரிக்கும். ஆரஞ்சு நிற பொருட்களை அதிகம் தானமாக தரலாம். பெண்களுக்கு குங்குமம் வாங்கி தானமாக தர நன்மைகள் அதிகரிக்கும்.

மஞ்சள் தானமாக தரலாம்
தனுசு ராசிக்காரர்கள் செவ்வாய்க் கிழமைகளில் முருகனை வழிபட்டு சாம்பார் சாதம் தானம் செய்தால் வாழ்வு செழிக்கும். வயதான பெண்களுக்கு கொண்டைக்கடலையால் செய்த உணவு தானம் செய்தால் நல்லது. மஞ்சள் தானமாக தர நன்மைகள் நடைபெறும். சீப்பு, முகம் பார்க்கும் கண்ணாடி, மஞ்சள் கயிறு, மை டப்பா, குங்குமம், மஞ்சள் என்று ஒரு செட்டாக போட்டு சிறிய கவரில் பேக் செய்து இப்போது நமக்கு கிடைக்கிறது. இந்த பொருட்களை வாங்கி வெற்றிலை பாக்கின் மேல் வைத்து அப்படியே சுமங்கலி பெண்ணுக்கு தானமாக கொடுக்க வேண்டும். எத்தனை பேருக்கு வேண்டும் என்றாலும் கொடுக்கலாம்.

செருப்பு தானம்
மகரம் மற்றும் கும்ப ராசியில் பிறந்த பெண்கள் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும். வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கி தரலாம். ஏழைகளுக்கு செருப்பு தானமாக வாங்கி தர வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். செல்வ வளம் பெருகும். ஏழைகளுக்கு கதம்ப உணவை அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும். இதனால் உங்களுக்கு வரும் பண வரவு இரட்டிப்பாகும். ஏழை நோயாளிகளுக் மருந்து மாத்திரை வாங்கி கொடுக்கலாம். மீன ராசியில் பிறந்த பெண்கள் வெல்லம் தானமாக கொடுக்கலாம். ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும்.

நெல்லிக்காய் தானம்
பொதுவாக அனைத்து ராசிக்கார பெண்களும் தங்களின் கைகளால் நெல்லிக்காய் தானத்தை செய்வது வீட்டிற்கு லக்ஷ்மி கடாட்சத்தை கொண்டு வரும். முடிந்த அளவு வாங்கலாம் குறைந்த பட்சம் 11 நெல்லிக்காய்கள் வாங்கினால் கூட போதும். அந்த நெல்லிக்காய்களை அருகில் இருக்கும் கோவிலுக்கு எடுத்துச் சென்று அங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு இந்த நெல்லிக்காய் தானத்தை செய்யுங்கள். வெள்ளிக்கிழமை இந்த தானத்தை செய்வது மிகவும் சிறப்பு. வரலட்சுமி நோன்பு கடைபிடிக்கப்படும் இன்றைய தினத்தில் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று நெல்லிக்காய்களை தானமாக வாங்கிக் கொடுங்கள். சகல செல்வங்களும் உங்கள் வீடு தேடி வரும்.












Click it and Unblock the Notifications