திருப்பதியில் காணிக்கையாக குவியும் 500 டன் முடி எங்கே போகிறது? என்ன செய்வார்கள் தெரியுமா?
திருப்பதி: திருமலை திருப்பதியில் பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கும் 500- 600 டன் முடிகளை திருப்பதி தேவஸ்தானம் எப்படி பயன்படுத்துகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பக்தர்களின் முடி காணிக்கை எந்தெந்த வழிகளில் திருப்பதிக்கு உதவுகிறது என்பதை பார்ப்போம்.
திருமலை திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் மாட்டு கொழுப்பு, பன்றிக் கொழுப்பு உள்ளிட்டவை சேர்க்கப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்து நாடே அதுகுறித்துதான் விவாதித்து வருகிறது. திருப்பதி கோயில் உலக அளவில் பிரசித்தி பெற்றது.

இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். அவர்களது காணிக்கை மூலம் திருப்பதி, பணக்கார கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது. திருப்பதி லட்டு எத்தனை பிரபலம் என்பது அனைவருக்கும் தெரியும்.
அத்துடன் திருப்பதிக்கு சென்றால் பெரும்பாலானோர் மொட்டை அடித்துக் கொண்டு வருவார்கள். அதுவும் பிரபலம்தான். ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான கிலோ முடி காணிக்கையாக பெறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் இந்த முடிகளை தேவஸ்தானம் எப்படி அப்புறப்படுத்துகிறது. திருப்பதி பாலாஜி கோயிலில் முடி காணிக்கை கொடுப்பது ஏன் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
முடி காணிக்கை ஏன்?: திருப்பதிக்கு போய் எவ்வளவுக்கு எவ்வளவு முடி காணிக்கை கொடுக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஏழுமலையான் ஒருவரை பணக்காரர் ஆக்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. அது மட்டுமல்லாமல் திருப்பதியில் முடி காணிக்கை கொடுத்தால் உடல்நல குறைபாடுகளும் எதிர்மறை எண்ணங்களும் அடியோடு ஒழிந்து போகும் என்கிறார்கள். இத்துடன் லட்சுமியின் அருளும் நமக்கு கிடைக்கும்.
ஏலத்தில் கிடைத்த பணம்: காணிக்கையாக கொடுத்த முடி ஏலம் விடப்படுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு பக்தர்களின் முடி காணிக்கையை ஏலம் விட்டதில் மாதம் ரூ 6.39 கோடி வருமானம் வந்தது. இந்த முடி காணிக்கையை ஆண்டுதோறும் முதல் வியாழக்கிழமைகளில் ஏலம் விடப்படுகிறது.
தரம் பிரிப்பு: முடிகள் பல்வேறு தரங்களாக பிரிக்கப்படுகின்றன. உள்ளன. கடந்த 2018ஆம் ஆண்டு 1.87 லட்சம் கிலோ முடி விற்பனை செய்யப்பட்டது. அவற்றுள் 10 ஆயிரம் கிலோ நல்ல தரமான முடி. ஒரு கிலோ ரூ 22,494 க்கு விற்பனை செய்யப்பட்டு மொத்தமாக ரூ 1.35 கோடி வருமானம் கிடைத்தது.
46,100 கிலோ முடிகளில் டை அடித்த முடி என்பதால் அவை இரண்டாம் தரமாக பிரிக்கப்பட்டு அவை கிலோ ரூ 17,223 க்கு விற்பனையானது. இதன் மூலம் 4.13 கோடி ரூபாய் கிடைக்கும். அது போல் மூன்றாம் தரமாக பிரிக்கப்பட்ட 30,300 கிலோ முடி கிலோ ரூ 2833 க்கு விற்பனையானது. இதன் மூலம் ரூ 14.17 லட்சம் கிடைத்தது.
வெள்ளை முடிக்கு எவ்வளவு: அது போல் நான்காம் தரம் கொண்ட முடிகள் கிலோ 1195- க்கும், 5 ஆம் தரம் கொண்ட முடிகள் கிலோ 24 க்கும் விற்பனையானது. 6900 கிலோ வெள்ளை முடிகள் கிலோ ரூ 5462 க்கு விற்பனை செய்யப்பட்டன. இதன் மூலம் ரூ 27.31 லட்சம் வருமானம் கிடைத்தது. ஆண்டுதோறும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் 500 முதல் 600 டன்கள் முடியை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.
முடியை எப்படி சுத்தப்படுத்துவார்கள்: முதலில் முடிகளை கொதிக்க வைத்து சுத்தப்படுத்த வேண்டும். அதில் பொடுகு, பேன் உள்ளிட்டவை இருக்கும் என்பதால் சுத்தப்படுத்துவது முக்கியம். பிறகு அதை காயவைக்க வேண்டும். காய்ந்தவுடன் பெரிய குடோன்களுக்கு சேமிக்க அனுப்பப்படுகிறது. 5 அங்குலம் முதல் 31 அங்குலம் வரை முடி காணிக்கை கிடைக்கிறது. இவற்றை ஆண்டுதோறும் ஏலமிடுவதால் தேவஸ்தானத்திற்கு நல்ல வருமானம் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications