“ஆன்மீகம், கலாச்சாரத்தை நீக்கிவிட்டால் நாம் வெறும் மந்தைக்கூட்டம்” - ஆளுநர் ஆர்.என்.ரவி பரபர பேச்சு!
சென்னை : நம் நாட்டிலிருந்து ஆன்மீகம், கலாச்சாரத்தை நீக்கினால் நாமும் சாதாரண மந்தை கூட்டம் போல தான் இருப்போம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னையில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய தமிழக ஆளுநர் ரவி, தற்போது இருக்கும் இந்தியா, 20 வருடங்களுக்கு முன்பு வேறு மாதிரி இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தொழில், சுகாதாரம், ராணுவம் என்று எல்லா வகையிலும் நமது நாடு மிகவும் முன்னேறி உள்ளது. இப்போது நமது நாட்டை பிற நாடுகள் குறைத்து எடைபோடுவது இல்லை என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

பட்டமளிப்பு விழா
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியின் 55வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு கல்லூரியில் படித்து முடித்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் மொத்தம் 128 பேர் பட்டம் பெற்றனர். இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.

கடின உழைப்பு
மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின்னர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, "இன்றைக்கு நீங்கள் வாங்கிய பட்டம் என்பது உங்களுடைய கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. உங்கள் வாழ்க்கையில் அடுத்தகட்டத்தை வெற்றியுடன் தொடங்குங்கள்" என வாழ்த்துக் கூறினார்.

வளத்தைச் சுரண்டிவிட்டனர்
மேலும் பேசிய ஆளுநர் ரவி, "பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய சமயத்தில், காந்தி வேறு ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு சிந்தனையில் இருந்தார். அப்போது, இந்த தருணத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்டவர்களிடம், காலனி ஆதிக்கத்தை ஒழிப்பதற்கு இன்னும் காலம் எடுத்துக்கொள்ளும். பிரிட்டிஷார் பல வகைகளில் நமது வளங்களை சுரண்டியுள்ளனர் என காந்தி தெரிவித்தார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு
தற்போது இருக்கும் இந்தியா, ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு வேறு மாதிரி இருந்தது. தொழில், சுகாதாரம், ராணுவம் என்று எல்லா வகையிலும் தற்போது நமது நாடு மிகவும் முன்னேறி உள்ளது. இப்போது நமது நாட்டை பிற நாடுகள் குறைத்து எடைபோடுவது இல்லை.

மந்தைக் கூட்டம்
இந்திய நாட்டின் கிராமப் பகுதிக்கு சென்றாலும், அவர்களின் தினசரி வாழ்க்கையில் நமது கலாச்சாரத்துடன் வாழ்கிறார்கள். நமது பாரத நாட்டில் இருந்து ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தை நீக்கிவிட்டால், ஒரு சாதாரண மந்தைக்கூட்டம் போலத் தான் நாமும் இருப்போம்.

பிரதமர் செய்து காட்டினார்
இந்த நாடு ஒரே குடும்பம். சாலை போடுவது என்றாலும் எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் மாநிலம் பார்த்தோ, ஆட்சியாளர்களைப் பார்த்தோ செய்யப்படுவது இல்லை. பல வீடுகளில் கழிவறை வசதி இல்லாத நிலை இருந்தது. 2016ல் அனைவருக்கும் கழிவறை என்று கூறியது போலவே செய்து காண்பித்தார் பிரதமர்." எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications