
தீப திருவிழா..திருவண்ணாமலையில் 5 அடுக்கு பாதுகாப்பு..2700 சிறப்பு பஸ்கள் இயக்கம் - முழு விபரம்
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். வருகிற டிசம்பர் 6ஆம் தேதி மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சிவ பெருமானின் பஞ்ச பூத தலங்களில் நெருப்புத்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. இங்கு கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. டிசம்பர் 3ஆம் தேதி மகா தேரோட்டம் நடைபெற உள்ளது.
டிசம்பர் 6ஆம் தேதி மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எந்த வித கட்டுப்பாடுகளும் இன்றி தீபத்திருவிழா நடைபெறுவதால் பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயில், நகர் பகுதியில் 11,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழா நாளை கொடியேற்றம்..இன்று முருகன் தேர் வெள்ளோட்டம்

திருவண்ணாமலை அண்ணாமலையார்
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
தீபத் திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று இரவு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு அண்ணாமலையார் கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

பஞ்சமூர்த்திகள் வீதி உலா
இதனைத்தொடர்ந்து வண்ண வண்ண மாலைகளால் அலங்காரம் செய்து செய்யப்பட்டு தீப தூப ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ராஜகோபுரம் முன்புள்ள 16 கால் மண்டபத்தில் அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன் விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வெள்ளி இந்திர விமானத்தில் எழுந்தருளினார்.

மாட வீதிகளில் உலா வந்த பஞ்சமூர்த்திகள்
இதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு கற்பூர தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

டிசம்பர் 6 மகாதீப திருவிழா
பத்து நாட்கள் நடைபெறக்கூடிய இந்த திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று காலை 6:00 மணி அளவில் கோவில் கருவறையில் பரணி தீபம் அன்று மாலை 6 மணி அளவில் கோவில் பின்புறம் உள்ள 2268 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். இந்த தீப தரிசனத்தை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் வெளி மாவட்டங்களில் இருந்து 25 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என மாவட்ட நிர்வாகத்தினரால் எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பு பேருந்துகள்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இருந்து 2,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக அரசு முதன்மை செயலாளர் கோபால் தெரிவித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபவிழா 27ஆம் தொடங்கியது. வரும் 6ம்தேதி மகாதீப விழா நடைபெற உள்ளது. விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக வரும் 5ம்தேதி முதல் 7ம்தேதி வரை 3 நாட்களுக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் 2,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

2700 சிறப்பு பேருந்துகள்
அதற்காக, திருவண்ணாமலையில் 9 தற்காலிக மற்றும் 4 கூடுதல் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து, போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் கோபால், திருவண்ணாமலையில் நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது, சிறப்பு பஸ்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் தற்காலிக பஸ் நிலையங்களையும், அரசு போக்குவரத்துக் கழக பணிகளையும் அவர் பார்வையிட்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபத்திருவிழாவை முன்னிட்டு, சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, சேலம், வேலூர், கோவை, கடலூர், நாகை, மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து 2,700 சிறப்பு பஸ்கள், 6,500 நடைகள் இயக்கப்படும்.

சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு
சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ள 94454 56040, 94454 56043 என்ற செல்போன் எண்களை தொடர்புகொள்ளலாம். கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சொகுசு பேருந்துகள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் 05/12/2022 மற்றும் 06/12/2022 ஆகிய நாட்களில் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரன் கூறியுள்ளார். சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in, மற்றும் tnstc official app, ஆகிய இணையதளங்களின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்கலாம் எனவும் அமைச்சர் சிவசங்கள் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் கடைகள் மூடல்
இதனிடையே திருவண்ணாமலை நகரப் பகுதிக்கு அருகாமையில் இயங்கி வரும் 4 அரசு சில்லறை மதுபான கடைகள் மற்றும் மதுபான கடைகளுடன் இணைந்த 5 உரிமம் பெற்ற டாஸ்மாக் பார்களை டிசம்பர் 2- ம் தேதி முதல் 7- ம் தேதி வரை 6 நாட்கள் மூடி வைக்க ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.