ராஜ ராஜ சோழனின் சதய விழா..தஞ்சை பெரியகோவிலில் பந்தகால் முகூர்த்தம்.. நவ.3ல் பேரபிஷேகம்
தஞ்சாவூர்: மாமன்னர் ராஜராஜ சோழனின் ஐப்பசி சதய விழா தஞ்சாவூர் பெரிய கோவிலில் பந்தகால் நிகழ்வுடன் தொடங்கியது. நவம்பர் 2, 3ஆம் தேதி இரண்டு நாட்கள் அரசு சார்பில் சதய விழா நடைபெறும் என்றும் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட மங்கள பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது.
இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

ஐப்பசி சதய விழா
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது ஆலயம். ராஜ ராஜ சோழனின் பிறந்தநாளை சதயவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.
தஞ்சை பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா ஐப்பசி மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.

1037வது சதயவிழா
அந்தவகையில், மாமன்னன் ராஜராஜசோழனின் 1037வது சதய விழா பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியுள்ளது. ராஜராஜசோழனின் சதய விழாவை முன்னிட்டு வருகிற நவம்பர் 02ஆம் தேதி புதன்கிழமை பெரிய கோவில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மிக சொற்பொழிவு, பரிசளிப்பு விழா ஆகியவை நடைபெறவுள்ளது.

நவம்பர் 03 சதயம்
நவம்பர் 03ஆம் தேதி தேதி காலை தேவார நூலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, ஓதுவார்களின் வீதியுலா நடைபெறுகிறது. பின்னர் பெரிய கோவிலுக்கு அருகே உள்ள மாமன்னன் ராஜராஜசோழனின் சிலைக்கு கோவில் நிர்வாகம், மாவட்டம் நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

பெருவுடையாருக்கு பேரபிஷேகம்
அதனை தொடர்ந்து ராஜராஜசோழன், உலோகமாதேவி ஐம்பொன் சிலைகள் முன்பாக புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் நடத்தி, பின்னர் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட மங்கள பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடத்தவுள்ளனர். அன்று இரவு ராஜராஜசோழன் மற்றும் உலோகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வீதியுலா நடைபெறவுள்ளது.

பொன்னியின் செல்வனுக்கு பிறந்த நாள் விழா
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பின்னர் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஐப்பசி சதய விழாவை காண பல்லாயிரக்கணக்கானோர் தஞ்சாவூருக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications