
சபரிமலையில் குவியும் பக்தர்கள்.. அதிர வைத்த டிரம்ஸ் சிவமணி..பம்பையில் குளிக்க கட்டுப்பாடுகள்
சபரிமலை: பக்தர்களின் கூட்டம் அலைமோதும் சபரிமலையில் இடைவிடாத சிவமணியின் இசை சன்னிதானம் வரை அதிரவைத்தது என்று பக்தர்கள் தெரிவித்தனர். சிவமணியின் இசை சபரிமலை முழுதும் எதிரொலித்தது என்றும் பக்தர்கள் கூறினர். சபரிமலை படிபூஜைக்கு 2037ஆம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். உதயாஸ்தமன பூஜைக்கு ரூ.40 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை முதல் நாளிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள், கொட்டும் மழையில் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர்.டிசம்பர் 27 ஆம் தேதி மண்டல பூஜை நடத்தப்பட உள்ளது. மண்டல பூஜைக்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படும். மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 31 ம் தேதி கோவில் நடை திறக்கப்பட உள்ளது. சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்வது அவசியம் என தெரிக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
தினசரியும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. விடுமுறை நாட்களில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கடந்த 15 நாட்களில் 60 கோடி வரைக்கு சபரிமலைக்கு வருமானம் கிடைத்துள்ளது.
அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி வகுப்புகள்! திருமா பயிலகம் மூலம் திருமாவளவன் செய்யும் நல்ல காரியம்!

8 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்
திங்கட்கிழமையன்று 89 ஆயிரம் பக்தர்கள் சபரிமலை செல்ல முன்பதிவு செய்திருந்தனர். இதில் 80 ஆயிரம் பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை சன்னிதானம் சென்ற பக்தர்கள் காலை 10 மணிக்குத்தான் சாமி தரிசனம் செய்தனர். இதன்மூலம் பதினெட்டாம் படி ஏற பக்தர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதுபோல நெய்யபிஷேகம் செய்வதற்கும், பிரசாதம் வாங்கவும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

டிரம்ஸ் சிவமணி
சபரிமலையில் பக்தர்கள் பலமணிநேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்ய வேண்டியிருப்பதால் பலரும் சோர்வடைந்தனர். ஐயப்பனின் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களின் அயர்ச்சியைப் போக்கி அவர்களை உற்சாகப்படுத்த சன்னிதானத்தில் தினமும் இசை கச்சேரி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது. அந்த வகையில் பிரபல ட்ரம்ஸ் இசைக்கலைஞரின் இசைக்கச்சேரி நடைபெற்றது. ட்ரம்ஸ் சிவமணியின் இசைக்கச்சேரியை பக்தர்கள் பெரிதும் வரவேற்றனர். இடைவிடாத சிவமணியின் இசை சபரிமலையின் சன்னிதானம் வரை அதிரவைத்தது. மேலும், சிவமணியின் இசை சபரிமலை முழுதும் எதிரொலித்தது என்றும் பக்தர்கள் கூறினர்.

பம்பையில் குளிக்க கட்டுப்பாடு
இதனிடையே சபரிமலை செல்லும் பக்தர்கள் பம்பையில் புனித நீராடுவது வழக்கம். பம்பை ஆற்றில் குளித்தால் பக்தர்களின் பாவம் நீங்குவதாக ஐதீகம். இதனால் சபரிமலை செல்லும் பக்தர்கள் அனைவரும் பம்பையில் நீராடிவிட்டுதான் செல்வார்கள். இவ்வாறு பம்பையில் குளிக்கும் பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் விட்டு செல்வது வழக்கம். இதனால் ஆறு மாசடைந்து வந்தது. எனவே பக்தர்கள் ஆற்றில் ஆடைகளை வீசி எறிவது தற்போது தடை செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் சபரிமலையில் குளிக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆற்றில் இறங்கி குளிக்கும் பக்தர்கள்
அதன்படி பம்பையில் பக்தர்கள் குளிக்கும் பகுதியில் 6 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாயில்கள் வழியாக மட்டும் தான் பக்தர்கள் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டும். ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்தால் இந்த பாதைகள் அடைக்கப்படும். மேலும் இந்த பகுதியில்தான் பக்தர்கள் குளிக்க வேண்டும் எனவும் இங்கு தமிழ், மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு உள்ளது.

படி பூஜைக்கு முன்பதிவு
சபரிமலையில் தரிசன முன்பதிவு ஒரு பக்கம் நடந்து வருகையில், படிபூஜைக்கான முன்பதிவும் அதிகரித்து வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் படி பூஜை செய்வது என்பது முக்கியமான வழிபாட்டு முறையாகும். படி பூஜை செய்வதற்கு முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும் . சபரிமலை ஐயப்பன் கோவிலில் அதிக பொருட்செலவில் நடத்தப்படும் படிபூஜைக்கு 2037ஆம் ஆண்டு வரை பக்தர்களால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் தெரிவித்தார்.

2037 வரை முன்பதிவு
செய்தியாளர்களிடம் பேசிய அனந்த கோபன், சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் தவிர மாத பூஜை நாட்களில் படி பூஜை நடத்தப்படுகிறது. இதற்கான கட்டணம் ரூ.75 ஆயிரம் ஆகும். இந்த பூஜைக்கு 2037-ம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக உதயாஸ்தமன பூஜைக்கு ரூ.40 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த பூஜைக்கு 2024ஆம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர்.
அதே போல் சகஸ்ர கலச பூஜைக்கும் ரூ.40 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.