
திருவண்ணாமலை..பரணி தீபம், மகாதீபம் தரிசிக்க ஆன்லைன் டிக்கெட் நாளை முதல் பதிவு - ரயில்கள் விபரம்
திருவண்ணாமலை: டிசம்பர் 6ஆம் தேதி பரணி தீபம், மகாதீபம் தரிசனம் செய்வதற்காக டிக்கெட்டுகள் பெற நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பக்தர்கள் வசதிக்காக தீபத் திருவிழாவையொட்டி வரும் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை திருவண்ணாமலைக்கு 24 சிறப்பு ரயில்கள் உட்பட 63 ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக நினைத்தாலே முக்தி தரும் திருத் தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
தீபத் திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று காலை 63நாயன்மார்களின் மாட வீதி உலா பவனி நடைபெற்றது. முன்னதாக விநாயகர், சந்திர சேகரர், 63 நாயன்மார்கள் ஆகியோர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்.. திருவண்ணாமலை தீபத்திருவிழாவை காண சூப்பர் ஏற்பாடு.. முழுவிபரம்

63 நாயன்மார்கள் வீதி உலா
சிவபெருமானுக்குத் தொண்டு செய்த அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், சம்பந்தர் உள்ளிட்ட 63 நாயன்மார்களை சிறப்பிக்கும் வகையில் 59வது ஆண்டாக தொடர்ந்து மாட வீதி உலா நடைபெற்றது. திருவண்ணாமலையைச் சேர்ந்த அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சிவ தொண்டர்கள் என ஏராளமானவர்கள் 63 நாயன்மார்கள் பல்லக்கை சுமந்து மாடவீதியில் வலம் வந்தனர்.

வெள்ளிரத ஊர்வலம்
இதனைத்தொடர்ந்து சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து நேற்றிரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரதத்தில் மாடவீதியில் பவனி வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சரத தேரோட்டம்
தீபத் திருவிழாவின் முக்கிய விழாவான மகா தேரோட்டம் இன்று காலை 5.00 மணி முதல் 7 மணிக்குள் தொடங்கியது. விநாயகர் தேரோட்டம், அருணாச்சலேஸ்வரர் தேரோட்டம், பெண்கள் மட்டுமே இழுக்கும் பராசக்தி அம்மன் தேர், சிறுவர்கள் மட்டுமே இருக்கும் சண்டிகேஸ்வரர் தேர் எனப் பஞ்ச ரதங்களும் மாட வீதிகளின் வலம் வருவதைக் காண லட்சக் கணக்கானோர் குவிந்துள்ளனர். திருவண்ணாமலையில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்ப்பட்டுள்ளன. 3000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தீப திருவிழா தரிசன டிக்கெட்டுகள்
இதனிடையே அருணாசலேசுவரர் கோயிலில் வரும் 6ம் தேதி தீபத்திருவிழா நடைபெறுவதை ஒட்டி மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. காலை 4 மணிக்கு பரணி தீபத்தை தரிசிக்க 500 ரூபாய் கட்டணம் என்றும், மாலை 6 மணிக்கு மகாதீபத்தை தரிசிக்க 500 மற்றும் 600 என இரண்டு வகை கட்டணங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட்களை annamalaiyar.hrce.tn.gov.inஎன்ற கோயில் இணையதள முகவரியில் நாளை காலை 10 மணி முதல் பதிவு செய்யலாம் என்றும், ஆன்லைன் டிக்கெட் பெற ஆதார் எண், கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீபத்திருவிழா பற்றிய விவரங்களை 1800 425 3657 என்ற எண்ணிலும் அறிந்து கொள்ளலாம் என்றும், ஆன்லைன் மூலம் நன்கொடை செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார்.

சிறப்பு ரயில்கள்
பக்தர்கள் வசதிக்காக தீபத் திருவிழாவையொட்டி வரும் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை திருவண்ணாமலைக்கு 24 சிறப்பு ரயில்கள் உட்பட 63 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அத்துடன் வரும் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை, சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதே நாட்களில் புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலை இடையே 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார்.

எங்கிருந்து எத்தனை ரயில்கள்
6 மற்றும் 7ம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் மயிலாடுதுறை மற்றும் திருவண்ணாமலை இடையே 4 சிறப்பு ரயில்களும் இதேபோன்று 6 மற்றும் 7ம் தேதிகளில் வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு 4 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன. அதேபோல தாம்பரம் மற்றும் திருவண்ணாமலை இடையே 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ள ஆட்சியர், இதனை அனைத்து பக்தர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.