39 ஆண்டு கால ஏக்கம் நிறைவேறிய மகிழ்ச்சியில் ரேவதி... வாழ்த்துக்களை குவிக்கும் பிரபலங்கள்
சென்னை:தனது 39 வருட திரையுலக வாழ்க்கையில் தன்னுடைய கனவு நிறைவேறியதை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பேஜில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள ரேவதியின் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
குஷ்பூ,நித்யா மேனன், ஸ்வேதா மேனன், போன்ற தமிழ் நடிகைகள் மட்டுமின்றி மலையாளம், கன்னடம்,தெலுங்கு செலிபிரிட்டிகளிடமிருந்தும் ரேவதிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

நாயகியாக அறிமுகம்
கேரளாவை பூர்வீகமாக கொண்ட ரேவதி மாடலிங் துறையில் நல்ல ஆர்வம் கொண்டவர். சிறுவயதிலேயே பரதநாட்டியம் போன்ற கலைகளை முறையாக கற்றுக்கொண்டு தன்னை சினிமாவிற்கு தயார்படுத்தி வந்துள்ளார்.தன்னுடைய மண்வாசனை படத்திற்காக புதுமுக நாயகி தேடி வந்தார் பாரதிராஜா, அந்த நேரத்தில் பாரதிராஜாவின் கண்ணில் ரேவதியின் பரதநாட்டிய அரங்கேற்ற குரூப் புகைப்படம் பட்டது.தன்னுடைய படத்திற்கு ஏற்ற நாயகி இவர்தான் என்று ரேவதியை முடிவு செய்த பாரதிராஜா அவரை மண்வாசனை திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார்.

கிராமத்துப் பெண்ணாக முத்திரை
தன்னுடைய முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்றார் ரேவதி பல விருதுகளையும் வாங்கினார்.கிராமியப் பெண்ணாக அறிமுகமானதாலோ என்னவோ.. அடுத்தடுத்து பல படங்களில் கிராமத்து பெண்ணாகவே நடிக்கவே இவருக்கு வாய்ப்பு வந்தது.ஒரு சில படங்களில் மாடர்ன் பெண்ணாக நடித்தாலும் இவருக்கு தேசிய விருதுகள் மற்றும் பல விருதுகளை பெற்று தந்தது தேவர் மகன் போன்ற கிராமத்து பெண்ணாக நடித்த படங்கள் தான். ஒரு கைதியின் டைரி, மௌன ராகம், மறுபடியும், அஞ்சலி,போன்ற படங்கள் ரேவதியை தமிழ் சினிமாவின் குடும்ப பாங்கான கதாநாயகிகளில் முன் வரிசையில் நிறுத்தியது.

திருமணம் விவாகரத்து குழந்தை பிறப்பு
தான் நடித்த மருமகள் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சுரேஷ் சந்திரா மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
புதிய முகம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இன்றுவரை பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்துக் கொண்டிருப்பவர் சுரேஷ் சந்திரன் மேனன் ஆவார்.இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்ட இவர்கள் இன்னும் தங்கள் நல்ல நட்புடன் இருப்பதாக ஒரு பேட்டியில் ரேவதி கூறியுள்ளார். டெஸ்ட் டியூப் மூலம் பிறந்த குழந்தை ஒன்று தனக்கு இருப்பதாகவும் சமீபத்தில் வெளியுலகுக்கு கூறினார் ரேவதி.

நிறைவேறிய கனவு
80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரேவதி தமிழ்,தெலுங்கு, மலையாளம், என்று ஒரே நேரத்தில் மூன்று மொழிகளிலும் பிலிம் பேர் விருது வாங்கிய ஒரே நடிகை ஆவார். பிலிம் பேர் விருதுகள், தேசிய விருதுகள் என்று பல விருதுகள் வாங்கி இருந்தாலும், தனது பூர்வீகமான கேரள மாநிலத்தின் விருதுகளை வாங்காதது அவருக்கு ஒரு பெரிய குறையாக இருந்து வந்துள்ளது. தனது 39 வருட கனவு "பூத காலம்" திரைப்படத்தின் மூலம் நிறைவேறியதை தனது இன்ஸ்டாகிராம் பேஜில் பகிர்ந்துள்ள ரேவதி "இந்த விருதை பலமுறை எனது நண்பர்கள் கைகளிலும், வீடுகளிலும், பார்த்திருக்கிறேன். பலமுறை கிடைக்கும் என்று எதிர்பார்த்து நழுவி போயிருக்கிறது. தற்பொழுது நான் எதிர்பார்க்காத நேரத்தில் கிடைத்திருக்கிறது.அதற்காக "பூத காலம்"திரைப்படத்தின் இயக்குனருக்கும், கேரளா விருது வழங்கும் குழுவிற்கும் நன்றி என்று மிகவும் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவிற்கு ரேவதியின் சமகால நடிகைகள் தொடங்கி தற்பொழுது இருக்கும் நித்யா மேனன் வரை பலர் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications