6 மணி ஷோக்கு திடீர் அனுமதி இதற்காகத்தானா? சீன், மூக்குத்தி அம்மன் 2க்கு மட்டும் கிடைத்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் அதிகாலை 6 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. ஆனால், இந்த அனுமதி வெளியான நேரம்தான் இப்போது பல கேள்விகளையும் விவாதங்களையும் கிளப்பியிருக்கிறது. தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் சீன், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படங்களுக்கு 6 மணி காட்சிகள் திரையிட அனுமதி கிடைத்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்துக்கு ஏன் இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது.

குறிப்பாக ரஜினி ரசிகர்கள் இந்த 2 விஷயங்களையும் ஒப்பிட்டு பார்த்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஜெயிலர் 2 படம் வெளியாகும்போது 6 மணி காட்சிக்கு அனுமதி கொடுக்காத அரசு, இப்போது மட்டும் எப்படி அனுமதி கொடுக்கிறது? தீபாவளி படங்களுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதா? அல்லது இனிமேல் வெளியாகும் எல்லா பெரிய படங்களுக்கும் அதிகாலை காட்சிகள் நடத்த அனுமதி கிடைக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

Tamil Cinema Jailer Rajinikanth Vijay Suriya

ஜெயிலர் 2 படத்துக்கு ஒரு விதி

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் 2 படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. படம் வெளியான முதல் நாளிலேயே தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால், தமிழ்நாட்டில் அதிகாலை 6 மணி காட்சிக்கு அனுமதி கிடைக்கவில்லை. மற்ற மாநிலங்களில் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில், தமிழக ரசிகர்கள் மட்டும் வழக்கமான நேரத்தில்தான் படத்தை பார்க்க வேண்டியிருந்தது.

இப்போது சூர்யாவின் சீன், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படங்களுக்கு 6 மணி காட்சி நடத்த அனுமதி கிடைத்திருப்பதால், ஜெயிலர் 2 படத்துக்கு மட்டும் ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுவது இயல்புதான். அதுவும் ரஜினிக்கும் விஜய்க்கும் ரசிகர்கள் மத்தியில் நீண்ட காலமாக போட்டி இருப்பதால், இந்த விவகாரத்தையும் சிலர் உள்குத்து அரசியல் கோணத்தில் பார்க்க தொடங்கியிருக்கின்றனர்.

விஜய் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ரஜினி படத்துக்கு அதிகாலை காட்சி அனுமதி கிடைக்கவில்லை. ஆனால், இப்போது விஜய் முதலமைச்சராக இருக்கும் சூழலில் சூர்யா, நயன்தாரா படங்களுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. இதனால் ரஜினியை பின்னுக்குத் தள்ளுவதற்காகத்தான் ஜெயிலர் 2 படத்துக்கு 6 மணி காட்சி அனுமதி மறுக்கப்பட்டதா? என்று சில ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

முன்பு 6 மணி காட்சி மறுக்கப்பட்ட காரணம்

தமிழ்நாட்டில் அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு கட்டுப்பாடு வந்ததற்குப் பின்னால் 2023-ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் இருக்கிறது. பொங்கல் பண்டிகையின்போது விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்கள் வெளியாகின. அப்போது அதிகாலை 4 மணி, 5 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. பெரிய கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. அந்த படங்களின் வெளியீட்டின்போது சென்னையில் துணிவு படத்தின் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 19 வயது ரசிகர் ஒருவர் லாரியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரசிகர்களின் கொண்டாட்டம் சில நேரங்களில் எல்லை மீறுவது, ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்படுவது, பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறு உண்டாவது போன்ற பிரச்சினைகளும் பேசப்பட்டன.

இதற்கு பிறகு அதிகாலை காட்சிகளை நடத்துவதில் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றத் தொடங்கியது. 2023-ல் விஜய்யின் லியோ படம் வெளியானபோதுகூட 4 மணி, 7 மணி காட்சிகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. காலை 9 மணி முதல் காட்சிகளை நடத்தும் நடைமுறையே தொடர்ந்தது. இதனால் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானாலும் தமிழக ரசிகர்களுக்கு அதிகாலை முதல் காட்சியை பார்க்கும் வாய்ப்பு இல்லாமல் போனது.

திடீர் அனுமதி

திரையுலகினர் தரப்பில் இதற்குத் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. ஒரு படம் தமிழ்நாட்டில் வெளியாகும் நேரத்துக்கு முன்பே மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் படம் பார்த்துவிட்டு விமர்சனங்கள் வெளியாகிவிடுகின்றன. இதனால் தமிழகத்தில் வெளியாகும் படங்களுக்கு முதல் நாள் வசூலிலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பிலும் பாதிப்பு ஏற்படுவதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து தமிழ் திரைப்பட ஆக்டிவ் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அரசிடம் கூடுதல் காட்சிகள் மற்றும் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி கேட்டன. இந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து நவம்பர் 3-ம் தேதி தமிழக அரசு புதிய உத்தரவை வெளியிட்டது.

அதன்படி, புதிதாக வெளியாகும் தமிழ் திரைப்படங்களுக்கு முதல் 7 நாட்களுக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சம் 6 காட்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை காட்சிகளைத் திட்டமிடலாம். வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் மற்றும் உள்ளூர் பண்டிகை நாட்களிலும் இந்த நடைமுறை பின்பற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதனால் இது சீன், மூக்குத்தி அம்மன் 2 படங்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட தனிப்பட்ட சலுகை கிடையாது. புதிய தமிழ் படங்களுக்கான பொதுவான விதிமுறை மாற்றம். ஆனால், தீபாவளிக்கு வெளியாகும் படங்கள்தான் இந்த புதிய அனுமதியை முதலில் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை பெற்றிருக்கின்றன. இதனால்தான் தீபாவளி படங்களுக்காக மட்டும் 6 மணி ஷோ அனுமதி கொடுக்கப்பட்டதா என்ற விவாதம் உருவாகியிருக்கிறது.

6 மணி ஷோ மகிழ்ச்சியா? சிரமமா?

இன்னொரு பக்கம் இந்த முடிவை வரவேற்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களில் அதிகாலை காட்சிகள் நடக்கும்போது தமிழகத்தில் மட்டும் 9 மணிக்குத்தான் முதல் காட்சி என்ற நிலை மாறியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகின்றனர். பிடித்த நடிகரின் படத்தை முதல் நாளே அதிகாலையில் பார்த்துவிட்டு கொண்டாடுவது என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நீண்ட காலமாக இருக்கும் ஒரு ஆசை. அந்த வாய்ப்பு மீண்டும் கிடைத்திருப்பதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆனால், இதற்கு எதிராகவும் கலர் குமுறுகிறார்கள். குறிப்பாக தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அதிகாலை முதலே ரசிகர்கள் தியேட்டர்களை நோக்கிப் படையெடுக்கும்போது சாலைகளில் கூட்டம் அதிகரிக்கலாம். பட்டாசு வெடிப்பது, வாகனங்களை நிறுத்துவதில் சிக்கல், ரசிகர்களுக்கு இடையே மோதல், போக்குவரத்து நெரிசல் என பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஏற்கனவே ஒரு ரசிகரின் உயிரிழப்புக்குப் பிறகு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்ட நிலையில், மீண்டும் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி கொடுப்பது சரியான முடிவுதானா என்றும் கேட்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+