சாதாரண தொழிலாளி டு முதலமைச்சர்! மொத்த கேரளாவும் கொண்டாடிய ஆளுமை! யார் இந்த வி.எஸ்.அச்சுதானந்தன்?
திருவனந்தபுரம்: கேரளாவின் முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் (101) காலமானார். தனது சிந்தனைகளாலும், போராட்டங்களாலும் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களுக்கான தொடர்ந்து போராடிய பழம்பெரும் பொதுவுடமைவாதி மறைந்திருக்கிறார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதுமை காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் நீண்ட காலமாக திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவர், கடந்த வாரம் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது இறுதிச் சடங்குகள் குறித்த விரிவான தகவல்களை குடும்பத்தினருடன் கலந்தாலோசித்த பிறகு கட்சி விரைவில் அறிவிக்கும். புன்னப்புரா-வயலார் தியாகிகளும், மூத்த கட்சி தலைவர்களும் நல்லடக்கம் செய்யப்பட்ட ஆலப்புழா 'வலிய சுடுகாட்டில்' (பெரிய சுடுகாடு) வி.எஸ்.அச்சுதானந்தனின் உடலும் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது.
2006 முதல் 2011 வரை கேரள முதலமைச்சராக இருந்த வி.எஸ்., கேரள மக்களின் நன்மதிப்பை பெற்ற முதலமைச்சர்களில் ஒருவராக இருந்தார். ஊழலுக்கு எதிரான அவரது தொடர் போராட்டங்கள், இ.எம்.எஸ். வீட்டு வசதி திட்டம், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான அவரது உறுதியான நிலைப்பாடு போன்றவை மக்கள் மனதில் அவரை வலிமையான தலைவராக மாற்றியது.
ஆட்சி மற்றும் எதிர்க்கட்சி பேதமின்றி போராட்டங்களில் பங்கெடுத்த ஒரு சில தலைவர்களில் வி.எஸ். அச்சுதானந்தனும் ஒருவர். பினராயி விஜயன் அரசாங்கத்தின் முதல் 5 ஆண்டு ஆட்சிக்காலத்தில், கேரளாவின் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவராக இருந்தார். இதுவே அவர் அதிகாரப்பூர்வமாக வகித்த கடைசி பதவியாகும்.
1923 ஆம் ஆண்டு ஆழப்புழாவில் உள்ள புன்னப்பராவில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த வி.எஸ். தனது ஏழாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, முதலில் ஒரு துணிக்கடையிலும், பின்னர் கயிறு தொழிற்சாலையிலும் வேலை செய்தார். 1938-ல் காங்கிரஸில் சேர்ந்த பிறகுதான் வி.எஸ். பொது வாழ்க்கையில் நுழைந்தார். இடதுசாரி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் அவர் தீவிரமாக இருந்தார். 1940-ல் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.
அச்சுதானந்தனின் திறமையான செயல்பாட்டை அறிந்த பி. கிருஷ்ணபிள்ளை, அவரை விவசாயத் தொழிலாளர்களிடையே பணியாற்ற குட்டநாடுக்கு அனுப்பினார். அங்குள்ள பணிகளிலிருந்துதான் அச்சுதானந்தன் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைமைப் பதவிக்கு உயர்ந்தார். புன்னப்புரா-வயலார் போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் பூஞ்சார் பகுதிக்கு தலைமறைவானார்.
பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர், நான்கு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். பிடிபட்ட பின் போலீசாரிடம் தான் சந்தித்த கொடூரமான தாக்குதல்களைப் பற்றி அச்சுதானந்தன் புத்தகமாக எழுதியுள்ளார். 1964ம் ஆண்டு ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது, 'இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எனவும், 'இந்திய கம்யூனிஸ்ட் கட்சி' எனவும் பிரிந்தது.
அந்த சமயத்தில் வி.எஸ்.ஏ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பக்கம் வந்தார். இக்கட்சியை உருவாக்கிய கேரளாவைச் சேர்ந்த ஏழு தலைவர்களில் வி.எஸ். அச்சுதானந்தனும் ஒருவர்.
வி.எஸ். அச்சுதானந்தன் வகித்த முக்கிய பதவிகள் (1952 - 2001)
1952: கம்யூனிஸ்ட் கட்சி ஆலப்புழா பிரிவின் செயலாளர்.
1954: கட்சி மாநிலக் குழு உறுப்பினர்.
1956: ஆலப்புழா மாவட்டச் செயலாளர், மாநில செயலக உறுப்பினர்.
1959: கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கவுன்சில் உறுப்பினர்.
1964: கட்சிப் பிளவுக்குப் பிறகு சி.பி.எம். மத்தியக் குழு உறுப்பினர், ஆலப்புழா மாவட்டச் செயலாளர் (1964-1970).
1980-1991: மூன்று முறை கட்சி மாநிலச் செயலாளர்.
1986-2009: சி.பி.எம். பொலிட்பீரோ உறுப்பினர்.
1965-2016: பத்து சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு ஏழு முறை வெற்றி.
1992-1996, 2001-2006, 2011-2016: கேரள சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்.
1998-2001: இடது முன்னணி அமைப்பாளர்.
வி.எஸ். அரசியல் பயணம்
கட்சியின் பெரும் வெற்றி கிடைக்கும்போது வி.எஸ். தோற்பதும், வி.எஸ். வெல்லும்போது கட்சி தோற்பதும் ஒரு வழக்கமாக இருந்ததால், அமைச்சராவதற்கு முன்பு நேரடியாக முதலமைச்சராக பதவியேற்ற அரசியல் தலைவர் வி.எஸ். மட்டுமே. 2006 சட்டமன்றத் தேர்தலில் வி.எஸ்-ஐ போட்டியிட வைப்பதில் கட்சிக்குள் பெரிய கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
ஆனால், கட்சித் தொண்டர்கள் ஒருமித்த குரலில் தெருக்களில் இறங்கி போராடினர். இதன் காரணமாக, கட்சி தனது முடிவை மாற்றிக்கொண்டு வி.எஸ்-ஐ போட்டியிட அனுமதித்தது. கேரள கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றில் இப்படி யாருக்காகவும் கட்சியின் தொண்டர்கள் இறங்கி அதற்கு முன்னரும், பின்னரும் போராடியது கிடையாது.
அந்த தேர்தலில் ஒரு அதிசயம் நடந்தது. அதாவது இவர் போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்றார். அதேபோல, மாநில அளவில் சிபிஎம் கட்சியும் பெரும்பான்மை பெற்று வென்றது. எனவே முதல்வர் வேட்பாளருக்கு இவரை தவிர வேறு யாரும் பொருத்தமானவராக இல்லை. இப்படித்தான் இவர் முதலமைச்சர் ஆனார்.
2011 தேர்தலில் வி.எஸ். வெற்றி பெற்றாலும், சிபிஎம் பெரும்பான்மை பெறாததால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. எனவே எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற வி.எஸ்., கேரளாவில் ஒரு 'தீப்பொறி'யாகச் செயல்பட்டார். அதன் பலன் 2016 தேர்தலில் பினராயி விஜயனுக்கு கிடைத்தது. இடது முன்னணி மிகப்பெரிய வெற்றி பெற்றபோது, பினராயி விஜயன் முதல் முறையாக முதலமைச்சர் ஆனார்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.எஸ்-க்கு நிர்வாக சீர்திருத்த ஆணையர் பதவியை வழங்க கட்சி முடிவு செய்தது. எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அந்தப் பதவியை அவர் ஏற்றுக்கொண்டார். உடல்நலக் கோளாறுகள் காரணமாக 2020 முதல் அவர் மெல்ல மெல்ல அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகத் தொடங்கினார்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கேரளாவில் நடந்த சுற்றுச்சூழல், தொழிலாளர் மற்றும் பெண் சார்பு போராட்டங்களில் வி.எஸ்-ன் பங்களிப்பு இருந்தது. சுற்றுச்சூழலை ஒரு அரசியல் பிரச்சினையாக முதன்முதலில் வி.எஸ்-தான் முன்னிறுத்தினார். மிகவும் வறுமையான சூழ்நிலையில் பிறந்து, சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, தொழிலாளர்களுக்காக போராடி, அடக்குமுறைகளை சந்தித்து, இறுதியில் கேரளாவின் முதலமைச்சர் பதவியை அடைந்த வி.எஸ்-ன் வாழ்க்கை ஒரு வரலாறாக மாறியிருக்கிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications