36 மணி நேரத்தில் இரும்பு பாலம் ரெடி! மின்சாரம் இல்லை; சாப்பாடு இல்லை! களப் பணியில் தமிழர்!
வயநாடு: சூரல்மலை மற்றும் முண்டக்கை ஆகிய இரு ஊர்களுக்கு இடையே இருந்த பாலத்தை ஆற்று வெள்ளம் அடித்துக் கொண்டு போன நிலையில் ராணுவத்தினர் முயற்சியால் ஒரு தற்காலிக பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இந்தப் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர் தமிழர் ஒருவர் அதன் சிரமங்களைப் பற்றிப் பேசி இருக்கிறார்.
கடந்த ஜூலை 30 இரவு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் முண்டக்கை, பூஞ்சேரி மட்டம், மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளரிமலா, பொத்துகலு உள்ளிட்ட பல கிராமங்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு மண்ணுக்குள் புதைந்துவிட்டன. இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி இதுவரை 360 பேர் இறந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் நிலை குறித்து தெரியவில்லை. அடையாளம் காண முடியாத சுமார் 166 உடல் பாகங்களும் கிடைத்துள்ளன.

ஒட்டு மொத்தம் 4,833 மக்கள் இந்த நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 6 நாட்களாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் பேரிடர் குழு அதிநவீன ரேடார்கள், ஆளில்லா விமானங்கள், ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் சடலங்களைத் தேடுதல் படலம் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வயநாடு, முண்டக்கை, பூஞ்சேரி மட்டம், சூரல்மலை எனப் பகுதிகளில் தொடர்ந்து 17 நாட்களாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் முழுமையாக மீட்புப் பணிகள் முடியவில்லை. முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகள் முழுக்க தரைமட்டமாகிவிட்டது. அங்கே 400 வீடுகள் இருந்த பகுதியில் 30 வீடுகள் மட்டுமே மிச்சம் உள்ளன.
இந்தச் சூரல்மலை மற்றும் முண்டக்கை ஆகிய இரண்டு ஊர்களுக்கும் இடையே இருந்த ஆற்றுப் பாலம் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய்விட்டது. ஆகவே இந்த ஊரில் மீட்புப் பணிகளை மேற்கொள்வது கடினமாக இருந்தது. அதை உணர்ந்த ராணுவத்தினர் உடனடியாக ஒரு தற்காலிக பாலத்தைக் கட்டி முடித்தனர். அதன்மூலம் மீட்புப் பணிகள் இப்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பாலம் கட்டப்பட்டதுதான் மாபெரும் சாதனை. அதைக் கட்டிய ராணுவக் குழுவில் ஒரு தமிழரும் இருந்துள்ளார். அவர் இந்தப் பாலத்தைக் கட்டும் போது ஏற்பட்ட கஷ்டங்கள் பற்றி பேசுகையில், “நாங்கள் பல இடங்களில் இதைப்போன்ற பேரிடர் காலங்களில் பாலம் அமைத்துள்ளோம். ஆனால், இங்கே முண்டக்கை மற்றும் சூரல்மலை இடையே பாலம் அமைப்பது சவாலாக இருந்தது. ஏனென்றால், இது பாலம் அமைப்பதற்கான தகுதி உள்ள இடம் இல்லை. பெங்களூரில் மதராஸ் ட்ரெயிங் குரூப் என்று உள்ளது. அந்த ராணுவப் பிரிவில் இருந்து நாங்கள் இங்கே வந்துள்ளோம்.
கடந்த 31 ஆம் தேதி மீட்புப் பணி தொடங்கிய அன்று மாலை 6 மணிக்கே இந்த வேலைக்கான பணிகள் குறித்து ஆராயத் தொடங்கினோம். ஆனால், மறு நாள் மாலை 3 மணிக்கு இந்தப் பாலத்தை முழுதாக போட்டு முடித்தோம். அனைத்து உபகாரங்களையும் போட்டு முடித்து, எங்கள் வாகனங்களை வைத்துச் சோதித்துப் பார்த்த பின்னர் சரியாக 4 மணிக்கு ஒப்படைத்துவிட்டோம். நாங்கள் பெங்களூருவிலிருந்து கிளம்பிய போதே சரியாகச் சாப்பிடவில்லை. வரும் வழியில் லேசாகச் சாப்பிட்டோம். இங்கே வந்த பிறகுச் சரியான வேலை. பயங்கர பசி. ஆனால், எங்கேயும் உணவு கிடைக்க வழியே இல்லை. இரவு வந்து பணியிலேயே மறுநாள் காலை வேலை தொடங்கினோம். பாலம் கட்டி முடிக்கப்படும் முற்பகல் வரை சரியாக யாருக்கும் உணவு கிடைக்கவில்லை. அதன்பின்னர் தான் உணவுக்கு ஏற்பாடு செய்தார்கள்.
எங்கள் தலைமை தளபதியாக அனிஸ் என்பவர் இருந்தார். அவரது கீழ்தான் நாங்கள் இந்தப் பாலத்தைக் கட்டி முடித்தோம். மொத்தம் 147 பேர் வந்தோம். பாலம் கட்டி முடித்தவுடன் பலரும் போய்விட்டனர். இப்போது மூன்று பேர்தான் உள்ளோம். இந்தப் பாலம் தற்காலிகமானது என்பதால், ஏதேனும் பழுது ஏற்படலாம். ஆகவே, நாங்கள் அதைக் கண்காணித்து வருகிறோம்” என்கிறார்.
இந்தப் பாலம் கட்டும் பணியில் என்ன மாதிரியான சவால்கள் இருந்தன என்பது பற்றி தொடர்ந்து பேசிய இந்த இராணுவ வீரர், “முதலில் இங்கே எங்கேயும் மின்சார வசதி இல்லை. இருட்டில்தான் இரும்பு கம்பிகளைக் கொண்டு வந்து இறக்கி அதற்கான வேலைகளை தொடங்கினோம். மேலும் வெல்ட் அடிக்க மின்சாரம் தேவை. அது இல்லாததால் கேஸ் கொண்டு வந்து வர வேண்டி இருந்தது. கேஸ் வெல்டிங் செய்ய பல போராட்டங்கள் ஏற்பட்டன. ஒருவரை தொடர்பு கொண்டு ஒரு பொருளை வரவழைக்க வேண்டும் என்றால்கூட நெட் ஒர்க் சுத்தமாக இல்லை. யார் மொபைலும் வேலை செய்யவில்லை. ஏனெனில் டவர் இல்லை.
பிறகு இந்த மண் பாரத்தைத் தாங்கும் அளவுக்கு வலிமையாக இல்லை. புதைகுழி போல உள்ளே வாங்கியது. அதை மேம்படுத்த வேண்டி இருந்தது. இதைவிட சவால் இரவு பகலாக மழை விடாமல் பெய்து கொண்டே இருந்தது. இங்கே ஒரு கூடாரம் கூட போட முடியவில்லை. அதை அமைக்கும் வரை மழையில் நனைந்து கொண்டே இருந்தோம். இந்தப் பாலத்தைக் கட்ட 36 மணி நேரம் ஆனது. இந்த 36 மணிநேரமும் ஒருவர் கூட தூங்கவில்லை. விடிய விடிய விழித்திருந்து கட்டினோம்.
ஒரு பக்கம் தோண்டத் தோண்டப் பல உடல்கள். அதைப் பார்த்துக் கதறும் மக்கள். எங்குப் பார்த்தாலும் மக்கள் கூட்டம். இதற்கு இடையில் இந்தப் பாலம் கட்டவேண்டும். இதைக் கட்டினால்தான் உயிருக்குப் போராடும் மக்களைக் காப்பாற்ற முடியும் என்ற நெருக்கடி. ஒரு ஆம்புலன்ஸ் உள்ளே வர வேண்டும் என்றால் கூட, ஒருவர் அந்தக் கரைக்குப் போய் உதவி பெற வேண்டும் என்றால் கூட இந்தப் பாலம் அவசியம். இந்தப் பிணக்குவியல் மத்தியில்தான் மனதைக் கல்லாக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டி இருந்தது. இதற்கு முன்னால் வெள்ளம் ஏற்பட்ட இடங்களில் பாலம் கட்டும் பணியை செய்துள்ளோம். இந்தளவுக்கு உயிர்ச் சேதம் நடந்துள்ள பகுதியில் நடுவே இருந்து பாலம் கட்டி முடிந்த அனுபவம் வாழ்நாளில் மறக்கவே முடியாதது. இனிமேல் எங்கள் வாழ்நாளில் இப்படி நடக்கவே கூடாது என்றும் நினைக்கிறோம்" என்கிறார்.












Click it and Unblock the Notifications