சவர்மா சாப்பிட ஆசை.. ஆனால் நான் வெஜிடேரியன்! “கவலைய விடுங்க” - கேரள நபரின் சூப்பர் முயற்சி
திருவனந்தபுரம்: பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் சவர்மாவை சைவ பிரியர்களும் சாப்பிடும் வகையில் 100% சைவ பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் பிளாண்ட் சவர்மாவை கண்டுபிடித்து உள்ளார் கேரளாவை சேர்ந்த நபர்.
மத்திய கிழக்கு நாடுகளில் உருவான சவர்மா தமிழ்நாட்டுக்கு வந்து ஏறத்தாழ 10 ஆண்டுகளே ஆனாலும் மக்கள் அதன் ருசியில் மயங்கி பிரியர்களாகவே ஆகிவிட்டனர். சிலர் சவர்மா வெறியர்களாக இருக்கின்றனர்.
குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்களில் சவர்மா கடைகள் ஆங்காங்கே தோன்று விற்பனையில் சக்கைபோடு போட்டுக்கொண்டு இருக்கின்றன.

பெருகிய சவர்மா கடைகள்
சென்னையில் வீதிக்கு ஒரு சவர்மா கடை முளைத்து இருக்கிறது. சாலையோரங்களில்கூட சவர்மா மெஷின்களை வைத்து தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் சவர்மா என்பது மக்களின் ஆஸ்தான ஒரு உணவாகவே கடந்த சில ஆண்டுகளில் மாறிவிட்டது என்று சொல்லலாம்.

உயிரிழந்த மாணவி
இந்த நிலையில் கடந்த மே மாதம் கேரளாவில் சவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டிலும் சவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை மேற்கொண்டது. சவர்மாவுக்கு தடை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

மீண்டும் சூடுபிடித்த விற்பனை
இதனால் சவர்மா விற்பனை தமிழ்நாட்டில் சற்று மந்தமானது. சில உணவகங்களில் சவர்மா விற்பனை நிறுத்தப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் சவர்மா பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. சிக்கன், மட்டன், பீஃப் போன்ற ஏதாவது ஒரு கறியை வைத்து சவர்மா தயாரிக்கப்பட்டு வருகிறது.

சைவர்களும் விரும்பும் உணவு
முழுக்க முழுக்க அசைவ உணவான இதை சுவைக்க சைவ உணவு விரும்பிகளுக்கும் ஆசை இருக்குமல்லவா? எப்படி பிரியாணி வெஜ் பிரியாணி, பிசாவில் வெஜ் பிசா, வெஜ் பர்கர், எக் லெஸ் கேக் வந்ததோ அதேபோன்றுதான் தற்போது வெஜிடேரியன் சவர்மாவை கண்டுபிடித்து இருக்கிறார் கேரளாவை சேர்ந்த நபர்.

கேரள தொழிலதிபர்
36 வயதான கண்ணன் பரகுன்னில்தான் சைவ சவர்மாவை கண்டுபிடித்து உள்ளார். கிராஸ்ஹூப்பர் குளோபல் என்ற நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக இருக்கும் இவர், சிங்கப்பூரை சேர்ந்த உணவு நிறுவனத்தோடு இணைந்து 100 சதவீதம் பிளாண்ட் சவர்மா எனப்படும் சைவ சவர்மாவை தயாரித்து உள்ளார்.

100% சைவம்
சிக்கன் சவர்மாவை சாப்பிடும்போது என்ன மாதிரியான சுவை கிடைக்குமோ அதே சுவையை இதில் பெற முடியும் என்று அவர் கூறுகிறார். மேலும் சைவ உணவு விரும்பிகள் குற்ற உணர்ச்சி இன்றி சவர்மாவை சாப்பிடலாம் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே கொவ்தியார் - குருவங்கோனம் சாலையில் இவரது உணவு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

காப்புரிமை
தான் தயாரித்த சைவ சவர்மாவை பலரும் விரும்பி சாப்பிடுவதாகவும், பெரும் அளவில் இது விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறி இருக்கிறார். இந்த வெஜிடேரியன் சவர்மாவை உருவாக்குவதற்கு தேவையான மூலப்பொருட்களை வெளியில் சொல்ல தான் விரும்பவில்லை எனவும், இதற்கு தன்னுடைய பெயரில் காப்புரிமை பெற இருப்பதாகவும் கண்ணன் தெரிவித்து உள்ளார்.

அதே சத்து
இதற்கு இந்திய உணவு தர பாதுகாப்பு நிறுவனமான (FSSAI) உரிமத்தையும் பெற்று உள்ளார் கண்ணன். சிக்கன் சவர்மாவில் இருக்கும் வாசனை, சுவை, பிரோட்டீன் சத்துக்கள் தன்னுடைய பிளாண்ட் சவர்மாவிலும் இருக்கும் என அவர் கூறி உள்ளார். இதற்காக சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனம் ரூ.4 கோடி முதலீடு செய்து உள்ளதாக அவர் கூறினார்.

சாதாரண விலை
சாமானிய மக்கள் வாங்கும் விலையில், எளிதில் எடுத்து செல்லும் விதத்தில் இந்த பிளாண்ட் சவர்மா இருக்கும் என்றும் அவர் விளக்கி இருக்கிறார். தன்னுடைய சவர்மாவில், எண்ணெய், பால் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஏதுவும் இல்லை எனவும், அதை சுற்றுவதற்கும் சமைப்பதற்கு உரிய இயற்கையான பொருளையே பயன்படுத்துவதாக அவர் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications