வீடு கட்ட.. குழி தோண்டியது போது.. வெளியே வந்த நரகம்.. கேரளாவை அடுத்தடுத்து உலுக்கும் பாதாள குகை
திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகை காலம் நெருங்கிவிட்டாலே பாதாள உலகத்திலிருந்து மகாபலி சக்கரவர்த்தி மக்களைக் காண வருவார் என்ற ஐதீகக் கதை நினைவுக்கு வரும். ஆனால், காசர்கோடு மாவட்டத்தில் ஓணம் பண்டிகைக்கு முன்பாகவே நிஜமாகவே பாதாளத்திற்கு செல்லும் ஒரு பெரிய வழி திடீரெனத் திறந்து அப்பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காசர்கோடு மாவட்டம் குட்டிக்கோல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒட்டமாவுங்கல் பகுதியில், புதிதாக ஒரு குடியிருப்பு வீட்டின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து, வீட்டின் கழிவுநீர்த் தொட்டிக்காக தொழிலாளர்கள் நிலத்தைத் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக பூமிக்குள் ஒரு பிரம்மாண்டமான நிலத்தடி குகை இருப்பது தெரியவந்தது. குழியின் வழியே எட்டிப் பார்த்த தொழிலாளர்களும் வீட்டின் உரிமையாளரும் உள்ளே இருந்த காட்சியைக் கண்டு அதிர்ந்து போயினர்.

காசர்கோடு பகுதியானது பெரும்பாலும் கடினமான செம்பாறை அமைப்பைக் கொண்டது என்பதால், நிலம் மிகவும் உறுதியாக இருக்கும் என்றும், அடித்தளத்திற்குப் பெரிய அளவில் எந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தேவையில்லை என்றும் வழக்கமாகக் கருதப்படுவதுண்டு. ஆனால், இந்த சம்பவம் அந்த நம்பிக்கையைத் தலைகீழாக மாற்றியுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நிலத்தடி குகை இரண்டு மீட்டருக்கும் அதிகமான உயரத்தைக் கொண்டுள்ளது. பூமிக்கு அடியில் இது எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பது இன்னும் துல்லியமாகக் கணிக்கப்படவில்லை. மேலும், அந்த குகைக்குள் ஒரு நிலத்தடி நீரோடை தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் உள்ளே இறங்கி விரிவான ஆய்வு மேற்கொள்வது கூட மிகுந்த ஆபத்தான காரியமாக மாறியுள்ளது.
A massive tunnel has been discovered beneath a house in Kasaragod while digging a pit for a septic tank. The residents are now scared to stay in their own home. pic.twitter.com/8yJQIRKuZ7
— ಸನಾತನ (सनातन) (@sanatan_kannada) August 18, 2026
கேரளாவில் இதுபோன்று நிலம் திடீரென உள்வாங்குவது மற்றும் கிணறுகள் இடிந்து விழுவது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகின்றன. நிலத்தடியில் ஏற்படும் விரிசல்கள், வெற்றிடங்கள் மற்றும் நீரோட்டங்களை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது. இப்படி காசர்கோட்டில் குகை போன்ற நிலம் தோன்றுவது முதல்முறை அல்ல.. இரண்டாவது முறையாகும். கடந்த வாரம் இதேபோல் அங்கே குகை கண்டுபிடிக்கப்பட்டது.
இன்றைய காலகட்டத்தில் கேரளாவில் 1,000 சதுர அடி கொண்ட ஒரு சிறிய வீட்டைக் கட்டுவதற்கு கூட குறைந்தபட்சம் 40 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. வாழ்நாளின் பெரும்பகுதி சேமிப்பை முதலீடு செய்து வீடு கட்டும் பலரும், கட்டுமானத்திற்கு முன்பாக தகுதிவாய்ந்த பொறியியல் நிபுணர்களையோ அல்லது புவியியல் வல்லுநர்களையோ அணுகுவதில்லை என்பது ஒரு கசப்பான உண்மை.
சாதாரண காய்ச்சல் வந்தால் கூட 250 ரூபாய் மாத்திரை வாங்குவதற்கு முன்பாக, 2,000 முதல் 3,000 ரூபாய் வரை செலவு செய்து முழு உடல் பரிசோதனை செய்துகொள்கிறோம். ஆனால், வாழ்நாளில் ஒரே ஒருமுறை கட்டும் கனவு இல்லத்திற்குத் தேவையான முறையான தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெறப் பெரும்பாலானோர் தயக்கம் காட்டுகின்றனர்.
காசர்கோடு சம்பவம் விடுக்கும் மிக முக்கியமான எச்சரிக்கை என்னவென்றால், எந்த இடத்தில் வீடு கட்டினாலும் அதற்கு முன்பாக மண் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம் என்பதாகும். இதனை ஒரு கூடுதல் வீண் செலவாகப் பார்க்காமல், ஒட்டுமொத்தக் கட்டுமானத்தின் பாதுகாப்புக்கான முதன்மை முதலீடாகப் பார்க்க வேண்டும்.
மேற்பரப்பிலேயே வலுவான பாறைகள் அமைந்திருக்கும் இடங்களில் சாதாரண அடித்தளமே போதுமானது. ஆனால், மண் தளர்வாகவோ அல்லது தண்ணீர் தேங்கும்போது பிடிப்புத் தன்மையை இழக்கும் வகையிலோ இருந்தால், அதற்குத் தகுந்த பொறியியல் தொழில்நுட்ப அடிப்படையிலான பிரத்யேக அடித்தளங்களை அமைக்க வேண்டும். கட்டிடம் கட்டி முடித்த பிறகு அடித்தளத்தை மாற்றியமைக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications
