லேப்டாப் போராட்டம் என்றால் என்ன? கேரள மாணவர்களால் திடீர் பரபரப்பு.. பின்னணி என்ன?
திருவனந்தபுரம்: கேரளாவில் கல்லூரி மாணவர்கள் தொடங்கிய லேப்டாப் போராட்டம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
கேரளா மாநில எப்போதும் விந்தையான போராட்டங்களுக்கு பெயர் போனவை என்றே கூறலாம். வடமாநிலங்களில் மாட்டுக்கறி உண்ணக் கூடாது என்று யாராவது பேசினால், அங்கு மாட்டுக் கறி திருவிழாவே நடத்தப்படும். அதற்கு அம்மாநில மாணவர்கள் மத்தியில் அரசியல் செயல்பாடுகள் மிகமுக்கிய காரணமாக இருக்கிறது.

புதிய போராட்டம்
கல்லூரி காலத்திலேயே அரசியல் கட்சிகளின் மாணவர்கள் அமைப்பில் சேர்வதற்கான வாய்ப்புகள் கேரளாவில் இருக்கும். மாணவர்களுக்கு பிரச்னை என்றால், மாணவ இயக்கங்கள் முன் நின்று போராட்டத்தில் ஈடுபடும். இந்த நிலையில் கேரள மாணவர்களால் லேப்டாப் போராட்டம் என்று புதிய போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நிழற்குடை
கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள சிஇடி பொறியியல் கல்லூரி பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் குடியிருப்புவாசிகள் அசோசியேஷன் சார்பில் 9 ஆண்டுகளுக்கு முன் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நிழற்குடை இருக்கையில் பொறியியல் கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் பேருந்துக்காக காத்திருக்கும் நேரத்தில் அமர்வது வழக்கம்.

இருக்கைகள் மாற்றம்
அப்போது மாணவ, மாணவிகள் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த அப்பகுதியினர், அசோசியேஷன் சார்பில் பேருந்து நிழற்குடையில் உள்ள பெஞ்ச் போன்ற இருக்கைகளை மாற்றிவிட்டும், இடைவெளி விட்டு மூன்று இருக்கைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
இது கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

லேப்டாப் போராட்டம்
இதனால் கோபமடைந்து பேருந்து நிழற்குடைக்குச் சென்று மாணவ, மாணவிகள் ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு மாணவர்கள் மடியில் மாணவிகளும், மாணவிகள் மடியில் மாணவர்களும் அமர்ந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர். இதற்கு லேப்டாப் போராட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டத்திற்கு ஏராளமான மாணவ இயக்கங்கள் ஆதரவளித்தன.

மேயர் ஆதரவு
இந்தத் தகவலறிந்த திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆர்யா ராஜேந்திரன் கூறுகையில், மாணவர்களின் போராட்டத்தால் இங்குள்ள பிரச்னை பற்றி அறிந்தேன். மாணவ, மாணவிககளுக்கு நிழற்குடையைப் பயன்படுத்த முழு உரிமை உண்டு. இங்கு புதிய பேருந்து நிழற்குடை அமைக்கப்படும். அது ஆண், பெண் சமத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமையும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
