போகும் போது உடுமலை.. வரும் போது போடி.. சென்னை சுற்றுலா பயணிகள் மிஸ் பண்ணக்கூடாத ரயில் பயணங்கள்
தேனி: சென்னையில் இருந்து ரயிலில் சென்று மலைப்பிரதேசத்திற்கு சுற்றுலா செல்ல விரும்புவோர், மிஸ் பண்ணக்கூடாத ரயில் பயணங்களை இந்த பதிவில் பார்ப்போம். சென்னையில் இருந்து மூணாறு அல்லது கொடைக்கானல் செல்ல விரும்புவோர் தாராளமாக பழனி எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்லலாம். அதேபோல் திரும்ப சென்னை வரும் போது, அவர்கள் போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வரலாம். இந்த பயணம் மிக இனிமையாக இருக்கும்.
ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, தேக்கடி, வாகமன், மேகமலை, வால்பாறை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்னையில் இருந்து செப்டம்பர் மாதத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் செல்வார்கள். செப்டம்பர் மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை, ஓணம் பண்டிகை விடுமுறை, காலாண்டு தேர்வு விடுமுறை என அடுத்தடுத்து விடுமுறைகள் வருகிறது. எனவே பலர் சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டுவார்கள்.. அப்படி சுற்றுலா செல்ல விரும்புவோர் பெரும்பாலும் சொந்த வாகனங்களிலும், ஆம்னி பேருந்துகளில் செல்வார்கள். அதேநேரம் ரயிலில் சென்றால் சிறப்பாக இருக்கும்.

தமிழ்நாட்டில் புகழ் பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கோ அல்லது கேரளாவில் உள்ள மூணாறுக்கோ சுற்றுலா செல்ல விரும்பினால், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்திற்கும் ரயில்களை தேர்வு செய்து பயணிக்கலாம். உதாரணமாக மூணாறு அல்லது கொடைக்கானல் செல்வோர் பழனி எக்ஸ்பிரஸில் இரவில் ஏறினால் எந்த அலுப்பும் இன்றி காலையில் பழனி வந்துவிடலாம். பழனியில் இறங்கி முருகனை தரிசித்துவிட்டு கொடைக்கானல் செல்லலாம். பழனி கொடைக்கானல் பேருந்து பயணமும் சரி, கார் பயணமும் சரி, திரில்லான அனுபவமாக இருக்கும். இந்த பாதை சாகச பிரியர்களுக்கு பிடித்தமான பாதையாகும். கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியும், மூங்கில் காடும், பூங்காக்களும் நிச்சயம் மெய்சிலிர்க்க வைக்கும். அங்கு எத்தனை இடங்கள் உள்ளன என்பதை எண்ணவே முடியாது.
இல்லை.. நீங்கள் மூணாறு போக வேண்டும் என்றால், பழனிக்கு பதில் உடுமலைப்பேட்டையில் இறங்கலாம்.. அங்கிருந்து சுற்றுலா கார்கள் மூலமாகவோ அல்லது பேருந்துகள் மூலமாகவோ மூணாறு சென்றால் நிச்சயம் திரில் அனுபவமாக இருக்கும். மறையூரை தாண்டும் போது உங்களுக்கு இயற்கை அழகும், அடர்ந்த காடும், உங்களை வசியம் செய்துவிடும். அதேநேரம் நீங்கள் செல்லும் வழியில் அதிர்ஷ்டம் இருந்தால் தாராளமாக யானை உள்ளிட்ட வனவிலங்குகளை பார்க்க முடியும். இதேநேரம் இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணிப்பது நல்லது இல்லை.. குறிப்பாக மாலை நேரங்களில் மற்றும் இரவு நேரங்களில் கண்டிப்பாக பைக்கில் பயணிக்க கூடாது. மூணாறு-உடுமலை சாலையில் இரவில் பயணிக்க வேண்டும் எண்ணம் இருந்தால் மறந்துவிடுங்கள்.
மூணாறை அடைந்ததும் அங்கு மாட்டுப்பட்டி அணை, டாப் ஸ்டேசன், காந்தலூர், வட்டவடா, கொழுக்குமலை உள்பட பல்வேறு இடங்களை பார்த்துவிட்டு வரும் போது, தேனி வழியாக வரலாம். மூணாறில் இருந்து காரில் வந்தால் வெறும் ஒன்றரை மணி நேரத்தில் போடி ரயில் நிலையத்திற்கு வந்துவிடலாம். அங்கிருந்து ரயிலில் தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, மதுரை, திண்டுக்கல் வழியாக சென்னைக்கு வரலாம். இந்த ரயில். மலை, காடு மற்றும் ஆறுகளை கடந்து செல்லும் ரயிலாகும். இந்த ரயிலில் பயணம் செய்வதே சிறப்பான அனுபவமாக இருக்கும். பிதாமகன், கேப்டன் பிரபாகரன், உள்பட பல்வேறு திரைப்படங்கள் எடுக்கப்பட்ட ரயில் ஆகும்.












Click it and Unblock the Notifications