அமைச்சர் சேகர்பாபு போட்ட ஆர்டர்.. நெல்லையில் 16 வருடத்திற்கு பிறகு நடந்த மாற்றம் !
நெல்லை: இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நெல்லையப்பர் கோவில் மற்றும் பாபநாச சுவாமி திருக்கோயில்களுக்கு இரண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். நெல்லையப்பர் கோயிலில் 16 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த மேற்கு கோபுர வாசலை திறக்க உத்தரவிட்ட அமைச்சர் சேகர்பாபு, பாபநாச சுவாமி திருக்கோயிலில் விரைவில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இதுவரை இல்லாத ஒன்றாக அனைத்து கோயில்களின் சொத்துக்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டார். அதன்படி சொத்துக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களின் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. பல்வேறு கோயில்களை ஒவ்வொரு வாரமும் சென்று ஆய்வு செய்யும் அமைச்சர் சேகர்பாபு. கோயில்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளை விரைவாக முடிக்க ஆணையிட்டுள்ளார்.

சிபிஎஸ்இ பள்ளி கட்டிடம்
இந்நிலையில் தென்காசி மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறையில் கீழ் செயல்படும் குற்றாலம் ஶ்ரீபராசக்தி மகளிர் கலைக் கல்லூரியில் ஆய்வு செய்த அமைச்சர் சேகர் பாபு, ஏழை மாணவிகள் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உயர்கல்வி பயில தேவையான அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் இக்கல்லூரியில் அமைத்திட முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் அறநிலையத்துறை சார்பாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் CBSE பள்ளிக்கு குற்றாலம் ஆதிபராசக்தி கல்லூரி வளாகத்திலேயே புதிதாக சொந்த கட்டிடம் கட்டி, பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளை ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

வன்னியப்பர் திருக்கோவில்
ஆழ்வார்குறிச்சி அருள்மிகு வன்னியப்பர் திருக்கோவில், தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாத ஸ்வாமி திருக்கோயில் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் சேகர் பாபு, திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்காக அடிப்படை வசதிகளையும் திருக்கோயில் மேம்பாட்டிற்கான திருப்பணி வேலைகளையும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலேசொன்ன இரண்டு கோயில்களில் பற்றாக்குறையாகவுள்ள அர்ச்சகர் உள்ளிட்ட பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு நிரப்பிட முதலமைச்சரின் அனுமதி பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

கீழப்பாவூர்
இதேபோல் தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோயிலில் (07.07.2021) அன்று கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருக்கோவில் மதில்சுவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக இடிந்துள்ளதை சீரமைக்கவும் 100 ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடைபெறாத இக்கோயில் திருப்பணிகளை ஆகம விதிகளின்படி பழமை மாறாமல் புதுப்பித்து குடமுழுக்கு நடத்தவும் அறிவுறுத்தினார்.

குடமுழுக்கு
முன்னதாக பாபநாசம், அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில் உபகோயிலான அருள்மிகு கோடி லிங்கேஸ்வரர் திருக்கோயில் கல்யாண தீர்த்தம் ஆகியவற்றை பார்வையிட்ட சேகர்பாபு. திருப்பணிகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தினார். அத்துடன் பாபநாசம் திருக்குளத்தில் நீராடும் பக்தர்களுக்காக புதியதாக உடை மாற்றும் அறை, கோடி லிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள அகத்தியர் உலோக சிலை மழை வெள்ளபெருக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டதையும், கோயில் புனரமைப்பு பணிகளையும் விரைந்து மேற்கொண்டு குடமுழுக்கு நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார்

மேற்கு வாசல்
இதேபோல், திருநெல்வேலி அருள்மிகு காந்திமதி அம்மாள் உடனுறை நெல்லையப்பர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளையும் அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு 16 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த மேற்கு கோபுர வாசலை பொதுமக்கள் தரிசனத்திற்காக திறக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அறநிலையத்துறை அமைச்சர்
இந்நிலையில் திருநெல்வேலியில் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசும் போது. ''தமிழகத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தொன்மை வாய்ந்த கோயில்களில் ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது நெல்லையப்பர் கோயிலில் பல்வேறு திருப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலில் சிதிலமடைந்துள்ள மண்டபத்தில் திருப்பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை அனுமதி கோரப்பட்டுள்ளது. இங்குள்ள கருமாரி தெப்பத்தை முழுமையாகச் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நவக்கிரஹ சந்திரன் சிலை சீரமைக்கப்படும். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். கோயிலில் வெள்ளித் தேர் புனரமைக்கப்பட்டு, 2 ஆண்டுகளில் தேரோட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதிக்கு 30 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இனி 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். சுவாமி நெல்லையப்பருக்கு நடைபெற்று வந்த மூலிகை தைலக் காப்பு வைபவம் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறவில்லை என்று தெரியவந்தது. அதை உடனே நடத்த அறநிலையத் துறைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு அதிகமான கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது. கோயில்களின் சொத்துகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம். இந்து சமய அறநிலையத்துறையில் எந்தப் பணியும் கடந்த ஆட்சியில் நடக்காமல், அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் இருக்கிறது. அனைத்துப் பணிகளும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.












Click it and Unblock the Notifications