வடகிழக்கு வனப்பகுதியை அழிக்கிறதா மத்திய அரசின் பாமாயில் திட்டம்? மணிப்பூர் எரிவது ஏன்?
இம்பால்: வடகிழக்கு மாநிலங்களில் மத்திய பாஜக அரசு படுதீவிரமாக முன்னெடுத்து வரும் தேசிய சமையல் எண்ணெய்- பாமாயில் திட்டம் ஒட்டுமொத்தமாக அந்த பிராந்தியத்தின் அடிப்படை கட்டமைப்பை மட்டுமல்ல- அம்மண்ணின் மக்கள் வசமுள்ள நில உரிமை உள்ளிட்ட அத்தனையையும் கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்க்கக் கூடியதாக உருமாற்றி வருகிறது. மணிப்பூர் மாநிலம் ஏதோ ஒரு மைத்தேயி இனப்பழங்குடிகளின் எஸ்டி கோரிக்கைக்காக மட்டுமே பற்றி எரியவில்லை.. இதன்பின்னுள்ள பாமாயில்- கார்ப்பரேட் அரசியல் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்கின்றனர் அம்மண்ணின் உரிமை செயற்பாட்டாளர்கள்.
மத்திய பாஜக அரசு திட்டம் என்ன? : 2 ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு அமைச்சரவை "தேசிய சமையல் எண்ணெய்- பாமாயில் திட்டத்தை" அமல்படுத்த ஒப்புதல் அளித்தது.
தேசிய சமையல் எண்ணெய்- பாமாயில் திட்டத்தின் அம்சங்கள் என்ன? மத்திய அமைச்சரவை தீர்மான்ம் சொன்னது இதுதான்:

- தேசிய சமையல் எண்ணெய்- பாமாயில் திட்டத்தை மத்திய அரசின் புதிய நிதி உதவித் திட்டமாக வட கிழக்கு மாநிலம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் அமல்படுத்த முடிவு.
- சமையல் எண்ணெய்களின் இறக்குமதி மீதான சார்பு அதிகரித்திருப்பதால் அவற்றின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது அவசியமாகியுள்ளது
- இப் புதிய திட்டத்திற்காக ரூ. 11,040 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் பங்காக ரூ. 8,844 கோடியும் மாநில அரசின் பங்காக ரூ. 2,196 கோடியும், அவற்றுடன் மானியத் தொகையும் அடங்கும்.
-பாமாயில் உற்பத்திக்காக 2025-26 ஆம் ஆண்டு வரை கூடுதலாக 6.5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்புடன், 10 லட்சம் ஹெக்டர் அளவை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- பாமாயில் உற்பத்தி 2025-26 ஆம் ஆண்டு வாக்கில் 11.20 லட்சம் டன்னாகவும், 2029-30 ஆம் ஆண்டில் 28 லட்சம் டன்னாகவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பாமாயிலை பயிரிடுவதற்கு ஒரு ஹெக்டேருக்கான உதவித் தொகை ரூ. 12000-லிருந்து ரூ.29000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் கடந்த 2 ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலங்களில் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலமும் மெல்ல மெல்ல பாமாயில் உற்பத்திக்கான நிலமாக உருமாற்றப்பட்டு வருகிறது.
இப்படியான பாமாயில் உற்பத்தி திட்டத்தில் மத்திய அரசுதான் நேரடியாக இறங்கி உள்ளதா? அல்லது கார்ப்பரேட்டுகளை களமிறக்கிவிட்டு மத்திய அரசு, சமையல் எண்ணெய் உற்பத்திக்கு முன்னுரிமை என வசனங்களைப் பேசுகிறதா? என்கிற கேள்வி மிக முக்கியம்.
வடகிழக்கு இந்தியாவில் களத்தில் நிற்கும் சில முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் இவைகள்தான்.. Godrej Agrovet, Patanjali group- Ruchi Soya plans, 3F Oil Palm என்பவை. அதாவது வடகிழக்கு மாநிலங்களில் பாமாயில் திட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை தம் வசமாக்கி வைத்துள்ளன கோத்ரெஜ் மற்றும் யோகா வாத்தியார் ராம்தேவின் பதஞ்சலி கம்பெனி உள்ளிட்டவை. தேசத்தின் நலனுக்காகவே பாமாயில் உற்பதிக்காகத்தானே இந்த கார்ப்பரேட்டுகள் களமிறங்கி உள்ளன? வட கிழக்கு மாநில மக்களுக்கு அப்படி என்ன பாதிப்பு? என்பது இயல்பான கேள்வி.

நாட்டின் பிற பகுதிகளைப் போல வடகிழக்கு மாநில மக்களுக்கான நில உரிமை என்பது சர்வே எண்/பட்டா/ சார்ந்த ஒன்றாக இல்லை. பல்வேறு இனக்குழுக்கள் நிறைந்து காணப்படுகிற வடகிழக்கு மாநிலங்களில் ஒவ்வொரு இனக்குழுவும் ஒவ்வொரு வகையான நில உரிமை கொள்கையை கடைபிடிக்கின்றன. இதனை இந்திய மத்திய அரசும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. குக்கி இனக்குழுவைப் பொறுத்தவரை அந்த இனக்குழுவின் தலைவருக்குதான் நில உரிமை என சொல்லப்படுகிறது. அந்த தலைவரிடம் இருந்து குத்தகை பெறுதல் என்பது ஒரு நடைமுறையாக இருக்கிறது. சில இடங்களில் இனக்குழுக்களின் கவுன்சில்கள் அல்லது நிர்வாக அமைப்பிடம் நில உரிமை இருக்கிறது. இத்தகைய வேறுபட்ட நில உரிமைகளால் வடகிழக்கு மாநிலங்களில் எளிதாக கார்ப்பரேட்டுகள் கால் பதிக்க முடியாமல் இருந்தன. இப்போது மானியங்கள், நிதி உதவிகள், வாழ்வாதர மேம்பாடு என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு பல்லாயிரக்கணக்கான விளைநிலங்கள் கைமாற்றப்பட்டு வருகின்றன. இதற்கு இனக்குழுவின் பிரதிநிதிகள், கவுன்சில்களும் பின்விளைவுகளை அறியாமலேயே கார்ப்பரேட்டுகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டும் வருகின்றன.
அடர் வனத்தை அப்படியே கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்த்துவிட்டு அந்த வனத்தின், நிலத்தின் மீதான காலங்காலமான உரிமையை வடகிழக்கு குடிமக்கள் இயல்பாகவே இழந்துவிடுகின்றனர். இதனால் வாழ்வாதாரம் தேடி அகதிகளாக இடம்பெயர வேண்டிய நெருக்டி உருவாகிவிடுகிறது. இப்படி கார்ப்பரேட்டுகளின் பிடியில் சிக்காத இனக்குழுக்கள் வெவ்வேறு அரசியல் காரணங்களால் நெருக்கடிகளுக்குள்ளாக்கப்படுகின்றன. இந்தப் பின்னணியில்தான் மைத்தேயி - இனக்குழு மோதலையும் நாம் பார்க்கலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
மைத்தேயி இனக்குழுவினர் இயல்பாகவே பாஜக வாக்கு வங்கி; குக்கி இனமக்கள் அவர்களுக்கு எதிரானவர்கள்; மைத்தேயி மக்கள் சமவெளி வாழ்விடங்களைக் கொண்டவர்கள்; குக்கிகள் மலைகளை- வனங்களை பூர்வீகமாக கொண்டவர்கள். மைத்தேயி மக்களின் பழங்குடி பட்டியலில் சேர்க்கக் கோரிக்கையை மணிப்பூரில் ஆளும் பாஜக அரசு ஏற்கிறது. அதனை செயல்படுத்த முனையும் போது குக்கிகள் எதிர்க்கின்றனர். அப்புறம் என்ன குக்கிகளை ஒடுக்குவதற்கு அரசாங்க படைகள் இறக்கப்பட வேண்டும். அதனால்தான் 10,000 அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர், 500 பிஎஸ்எப் வீரர்கள் மணிப்பூர் மண்ணில் இறக்கப்பட்டனர். மணிப்பூரில் குக்கிகள், ஆயுதங்களை பாதுகாப்பு படையினரிடம் இருந்து கொள்ளையடிக்க முடிகிறது எனில் தற்போது இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. குக்கிகளின் ஆடும் வரை வேடிக்கை பார்க்கும்.. ஒரு கட்டத்தில் குக்கிகளின் மலைநிலம் பாதுகாப்பின் பெயரால் பாதுகாப்பு படைகள் வசமாகும்; பின்னர் அது கார்ப்பரேட்டுகள் வசமாகும். இதுதான் மணிப்பூர் வன்முறையின் பின்னிருக்கும் அரசியல்.
சரி பாமாயில் உற்பத்தியால் வடகிழக்கு வளம் கொழிக்கும் பூமியாகிப் போனால் உமக்கு என்ன வயிற்றெரிச்சல்? என கேட்கலாம். பாமாயிலுக்கான பனை உற்பத்தி என்பது தண்ணீரை பெருமளவு உறிஞ்சி நீர்வளத்தை நிர்மூலமாக்கக் கூடியது. அண்டை தாவரங்களை வளரவிடாமல் கொல்லக் கூடியது. பல்லுயிர் பெருக்கம் கொண்ட- தாவரங்கள்- வனவிலங்குகள் வாழ்வதற்கான சூழலை மலடாக்கக் கூடியது. இதனால்தான் பாமாயில் திட்டத்தில் கை கோர்த்த மிசோரம் விவசாயிகள் மண்ணை மலடாக்கிவிட்டு இப்போது வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிகழ்கால வரலாறு.
மத்திய பாஜக அரசு, வடகிழக்கு மாநிலத்தை பாமாயில் விளைவிக்கப்படும் பெரும் பூமியாகப் பார்க்கிறது..வடகிழக்கு மாநில மக்களும் பேராபத்தை உணராமல் நிலத்தை தாரைவார்த்து பாலைநிலமாக்கப் போகிறார்கள்; இதற்கு முன்னோட்டங்களே மணிப்பூர் பற்றி எரிவதை கண்டும் காணாமல் வேடிக்கை பார்க்கும் மத்திய அரசின் அசமந்தப் போக்கு என எச்சரிக்கை விடுக்கின்றனர் வடகிழக்கு மாநில உரிமை செயற்பாட்டாளர்கள்.












Click it and Unblock the Notifications