மத உரிமை முதல் மதமாற்றத் தடை வரையில்... அ.குமரேசன்
ஒரு மலையாள சினிமாவுக்கான வெளிப்புறப் படப்பிடிப்பு வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஒரு கோவிலின் நுழைவாயிலுக்கு எதிரே உள்ள அந்த இடத்திற்கு வருகிற சிலர், படப்பிடிப்புக் குழுவினரோடு பேச்சுக்கொடுக்கிறார்கள். படத்தின் கதை எதைப்பற்றியது என்று கேட்கிறார்கள். பதில் கிடைத்ததும், தொடர்ந்து படப்பிடிப்பை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். வாக்குவாதம் தகராறாகவும் மாறுகிறது. அங்கிருந்த படப்பிடிப்புக் கருவிகள் சில உடைக்கப்படுகின்றன. படப்பிடிப்பு நிறுத்தப்படுகிறது.

படத்தின் கதை இரு வேறு மதங்களைச் சேர்ந்த இருவருக்கிடையே மலர்ந்த காதலைப் பற்றியது. அதை அறிந்த பின் அந்தத் திரைக்கதைக்கான படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, இந்தத் தரைக்கதை நடத்தப்பட்டிருக்கிறது. ஒரு சிறுமி உட்பட சிலருக்குக் காயம் ஏற்பட்டதாகப் படக்குழுவினர் கூறுகிறார்கள். காவல்துறையினர் அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தியதாகவும், தகராறில் ஈடுபட்ட சிலரைக் கைதுசெய்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
'நீயாம் தணல்' (நீதான் நிழல்) என்ற அந்தப் படத்தை ஆஷிக், ஷினு, சல்மான் என்ற மூன்று இயக்குநர்கள் இணைந்து இயக்குகிறார்கள். பாலக்காடு மாவட்டம் கடம்பழிபுரம் பகுதியில் உள்ள வாயில்யம்குன்னு பகவதி அம்மன் கோவில் முன்னால் உள்ள திறந்தவெளியில் படப்பிடிப்பின் ஒரு கட்டம் முடிந்து, அடுத்த கட்டத்திற்கான தயாரிப்புகள் நடந்துகொண்டிந்தபோதுதான் இந்தத் தலையீடுகள். மற்ற இடங்களில் ஒரு நாளுக்கு 35,000 ரூபாய் வாடகை கேட்கப்பட்டது, இங்கே 3,000 ரூபாய்தான் கேட்கப்பட்டது என்பதால் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தாகத் தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள். அத்துடன், கோவில் நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வமாக இல்லை என்றாலும் வாய்மொழி அனுமதி பெற்றுதான் இந்த இடத்திற்கு வந்ததாகவும் அவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
கோவில் நிர்வாகத்திடம் ஒப்புதல் பெறாமலே படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக மாவட்ட பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள். கோவிலின் நிர்வாக அதிகாரி, ஒப்புதல் அளிக்கப்பட்டதா என்று தனக்குத் தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். படப்பிடிப்புத் தளத்தில் ஒரு முஸ்லிம் லீக் கொடியும், மாணவர் சங்க கொடியும் உலர வைக்கப்பட்டிருந்தன, அதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒருவர் தனது ட்விட்டர் தொடர்பில், பாகிஸ்தான் கொடியின் சாயலில் ஒரு கொடி இருந்தது என்று பதிவிட்டிருக்கிறார். இதைப் பார்க்கிறவர்களில் எத்தனை பேர் பாகிஸ்தான் கொடிக்கும், இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்டதொரு கட்சியான முஸ்லிம் லீக்கின் கொடிக்கும் உள்ள வேறுபாட்டை யோசித்துக்கொண்டிருப்பார்கள்? அப்படியெல்லாம் யோசிக்கவிடுவதில்லையே இப்படிப்பட்ட பதிவுகள்? மேலும் யோசிக்கவிடாதபடி, "லவ் ஜிஹாத்" ஆதரவு சினிமா என்றும் சிலர் ட்விட்டியிருக்கிறார்கள்.
வேறு இடங்களில் படப்பிடிப்பு தொடரும் என்று தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள். எங்கே படப்பிடிப்பு நடந்தாலும் எதிர்க்கப்படும் என்று எதிர்ப்பாளர்கள் சொல்கிறார்கள்.
ஒரு சினிமா முழுமையாக உருவாவதற்கு முன்பே, இதுதான் கதை என்று முடிவு செய்து, சட்டப்பூர்வமற்ற ஒரு தன்னதிகார தணிக்கை வாரியமாகச் செயல்பட முடிவது கருத்துச் சுதந்திரத்திற்கு எப்பேற்பட்ட அச்சுறுத்தல்? படத்தில் உண்மையாகவே தவறான காட்சிகளோ கருத்துகளோ இடம்பெற்றிருக்குமானால் அவற்றைக் கடுமையாக விமர்சிக்கிற உரிமை எவருக்கும் இருக்கிறது. அதற்கு முன் படத்திற்கு அனுமதிச் சான்றளிப்பது தொடர்பாக முடிவெடுக்கிற பொறுப்பு தணிக்கை வாரியத்திற்கே உரியது. வாரியத்திற்கே படம் செல்லவிடாமல் முடக்குவதில் குறுகிய மதவாத அரசியலன்றி வேறு நோக்கம் என்ன இருக்கிறது? பெரும்பான்மை, சிறுபான்மை என எந்த மதத்தின் மதில்களையும் காதல் மனங்கள் தாவிக் கடக்க ஆதரவளிக்கும் எந்தவொரு கலையாக்கத்தையும, எந்தவொரு மதவாதியும் எளிதில் ஏற்பதில்லைதான். காதல் உறவு, கருத்துச் சுதந்திரம், மனித உரிமை போன்றவற்றில் மதங்களின் பார்வைகள் ஒன்றுபடுகிற, வேறுபடுகிற இடங்கள் பற்றியே தனியாகப் பேசலாம்.
தாக்கப்படுவது கருத்துச் சுதந்திரம் மட்டுமல்ல
கலை வழியாகக் கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்பதையும் தாண்டி, மக்களிடையே மத வேலிகளைத் தாண்டிப் படர்ந்திருக்கிற நல்லிணக்கக் கொடியின் வேரில் பகைமை அமிலம் கொட்டப்படுவதை நாகரிக சமூகம் ஏற்காது. கோவில் திருவிழா ஊர்வலத்திற்கு உதவிய முஸ்லிம் குடும்பங்கள், தொழுகை நடத்துவதற்கு இடம் ஒதுக்கிக் கொடுத்த இந்து அமைப்புகள், மாதா கோவிலுக்கு வருகிற பிறமதக் குடும்பங்கள் என்றெல்லாம் அவ்வப்போது வருகிற செய்திகள் நம்பிக்கையும் பெருமிதமும் அளிக்கின்றன. அவற்றினூடாக இப்படிப்பட்ட செய்திகள் கவலையையும் தலைக்குனிவையும் ஏற்படுத்துகின்றன.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் பரப்புரையையொட்டி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும பாஜக வேட்பாளர், மதப் பகைமையைத் தூண்டும் வகையில் பேசியதற்காக அவருக்குத் தேர்தல் ஆணையம் விளக்கம் கோரும் ஆணையை அனுப்பியிருக்கிறது. (அதற்கு முன், அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நந்திகிராம் வாக்காளர்களுக்கு மதவாத அடிப்படையில் வேண்டுகோள் விடுத்தார் என்று தேர்தல் ஆணையம் இதே போன்ற ஆணையை அனுப்பியது.)
இந்தக் காட்சிகள் இந்தியாவின் போற்றுதலுக்குரிய ஜனநாயகமும், பெருமைக்குரிய மதச்சார்பின்மையும் எத்தகைய அச்சுறுத்தலான நிலைமையில் நிற்கின்றன என்ற மன உளைச்சலைத் தருகின்றன. மக்கள் அவரவர் நம்பிக்கைகளைப் பின்பற்றுவதற்கு உரிமையளிக்கிற இந்திய அரசமைப்பு சாசனம், நாட்டின் அரசு மதச்சார்பற்றதாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. ஆனால், மதச்சார்பின்மை என்ற வார்த்தையே மக்களின் மத ஈடுபாட்டிற்கு எதிரானது என்பது போலச் சித்தரித்துதான் எதிர்ப்பரசியல் கட்டப்பட்டு வந்திருக்கிறது.
நாடாளுமன்றமும் நீதிமன்றமும்
இத்தகைய பிரச்சினைகளை மக்கள் பிரதிநிதிகள் விரிவாகவும் விசாலமான மனதோடும் பேசி, மேலும் மேலும் சரியான அணுகுமுறைகளையும் சட்டப்பாதுகாப்புகளையும் உருவாக்க வேண்டிய இடம் நாடாளுமன்றம். அதன் மக்களவையில் மிக வலுவான பெரும்பான்மையைப் பெற்றிருக்கிற மத்திய ஆளுங்கட்சியினர், தங்களது அரசியல் சித்தாந்தம் காரணமாக, அத்தகைய விரிவான, விசாலமான விவாதங்களுக்கு மனதைத் திறந்துவைக்கத் தயாராக இருப்பார்களா என்ற ஐயம் எழுவது இயல்பு. இந்நிலையில், நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்ளத் துணையாக இருப்பது நீதிமன்றம்தான்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் தொடர்பான வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, இப்போது உ.பி. மாநிலத்தின் காசி விஸ்வநாதர் கோவில் அருகாமையில் ஞான்வாபி மசூதி இருக்கும் இடத்தில் முன்பு கோவில் இருந்ததா என்பதைக் கண்டுபிடிக்குமாறு இந்திய தொல்லியல் ஆய்வுத்துறைக்கு வாரணாசி நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணை போன்றவை விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. உ.பி., உத்தர்காண்ட் மாநில அரசுகள் கொண்டுவந்துள்ள மதமாற்றத் தடைச்சட்டத்திற்குத் தடை விதிக்க மறுத்துள்ள உச்சநீதிமன்றம், இது தொடர்பான வழக்குகளை சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றங்கள் விசாரித்து வருவதால் அவற்றின் தீர்ப்புக்காகக் காத்திருக்கலாம் என்று கூறியது. ஆயினும் நீதிமன்றத்தை நம்பிக்கையோடு நாடத்தான் வேண்டியிருக்கிறது.
மத மாற்றங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு ஆணையிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றை உச்சநீதிமன்றம் இந்த மாதம் 9ம் தேதியன்று தள்ளுபடி செய்திருப்பது அந்த நம்பிக்கைக்கு உரம் சேர்க்கிறது. "18 வயதடைந்த எவரும் தனது மதத்தைத் தேர்ந்தெடுக்க உரிமை உண்டு" என்று கூறியுள்ள நீதிபதிகள் ஆர்.எப். நாரிமன், பி.ஆர். கவாய், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, மனுதாரருக்காக வாதாடிய கோபால் சங்கர நாராயணா என்ற மூத்த வழக்குரைஞரைக் கடுமையாகச் சாடியிருப்பதுடன், இதற்காகப் பெருந்தொகை அபராதம் விதிக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியிருக்கிறது. மனுவை விலக்கிக்கொள்ள அனுமதி கோரியதை ஏற்க மறுத்து, நீதிமன்றமே மனுவைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. வேடிக்கை என்னவென்றால், அந்த மூத்த வழக்குரைஞர் யாருக்காக வாதாடினாரோ, அந்த மனுதாரரான அஷ்வினி உபாத்யாய் என்பவரும் ஒரு வழக்குரைஞர்தான்.
மதமாற்றத் தடையை எங்கிருந்து தொடங்குவது?
18 வயதடைந்தோர் எவருக்கும் தனது மதத்தைச் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் கருத்து முக்கியமானது. மதமாற்றத்தை ஒரு பெரும் பிரச்சினையாகத் திரும்பத் திரும்ப முன்வைக்கிறவர்கள் தங்கள் மதத்தின் விழுமியங்களில் தங்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சேர்ந்த ஒருவர் பிற மதங்களைப் பரிசீலிப்பது ஏன் என்பதற்கான சமூகக் காரணிகளைப் பரிசீலிப்பதற்கு அவர்கள் மறுக்கிறார்கள். மனிதர்களுக்காகத்தான் மதங்கள் உருவாக்கப்பட்டனவேயன்றி, மதங்களுக்காக மனிதர்கள் படைக்கப்படவில்லை என்ற எளிய உண்மையின் பால் கண்களை மூடிக்கொள்கிறார்கள்.
ஆணாதிக்கச் சமூக அமைப்பில் மதமும் சாதியும் ஆணை மையமாக வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன. கணவனுடைய அல்லது தகப்பனுடைய சாதியோ மதமோதான் மனைவி அல்லது பிள்ளைகளின் அடையாளமாகிறது. இல்லற இணையர் இருவரும் தனித்தனியே தங்கள் மதத்தைப் பின்பற்ற சட்டப்படி உரிமை இருக்கிறது என்றாலும் நடைமுறையில், காலப்போக்கில் இதுதான் நிகழ்கிறது. இறுதி வரையில் அவரவர் மத உரிமையில் குறுக்கீடு இல்லாமல் தொடர்கிறவர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு.
உண்மையிலேயே மதமாற்றத்திற்குத் தடை விதிப்பதென்றால், பூமிக்குப் புதிதாக மனித சிசுக்களாக மட்டுமே பிறந்துவரும் குழந்தைகள், அவர்களுடைய புரிதலோ சம்மதமோ இல்லாமல், பெற்றோர்களாலும் மற்ற பெரியோர்களாலும் ஏதோவொரு சடங்கைச் செய்து முதன் முதலாக ஒரு மதத்திற்கு மாற்றப்படுகிறார்களே, அதற்குத்தான் முதலில் தடை விதிக்க வேணடும். நாட்டை ஆளும் அரசாங்கத்தையே தேர்ந்தெடுக்கிற தகுதியும் உரிமையும் பெறுகிற 18 வயதை அடைந்தபின், குடிமக்களில் எவரும் தமது மதம் எதுவென எல்லா மதங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து முடிவெடுக்கிற உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். அதன் பிறகு, தவறான வழிமுறைகளில் ஒருவர் மதம் மாற்றப்படுவாரானால் அதற்குத் தடை விதிப்பதற்கான விதிகளை உருவாக்கலாம். மதமாற்றம் தொடர்பான விவாதங்களின்போது எதிர்வாதம் செய்கிறவர்கள் இந்த வாதத்திற்குள் வருவதே இல்லை.
குறிப்பிட்ட ஒரு கட்சியின் உறுப்பினர்களாக உள்ள பெற்றோருக்குப் பிறப்பதால் ஒருவர் தானும் அந்தக் கட்சியை சேர்ந்தவராகிவிடுவதில்லை. குறிப்பிட்ட கல்வித்தகுதி கொண்டவர்களுக்குப் பிறப்பதாலேயே ஒருவர் தானும் அந்தக் கல்வித்தகுதி கொண்டவராகிவிடுவதில்லை. மதம் ஒரு வாழ்க்கை முறை என்கிறபோது, அது ஏன் பிறப்பால் தீர்மானிக்கப்படுவதாக இருக்க வேண்டும்? வாழ்க்கை அனுபவம்தானே அதைத் தீர்மாளிக்க வேண்டும்? இப்படியான சொல்லாடல்களோ விளக்கங்களோ இல்லை என்றாலும், இந்திய அரசமைப்பு சாசனம் இந்தக் கேள்வினகளை அங்கீகரிக்கும் வகையிலேயே, மதத்தைப் பின்பற்றும் உரிமையை உறுதிப்படுத்தியிருக்கிறது. எந்த மதத்தையும் சாராமலிருக்கிற உரிமையும் இதில் உள்ளடங்குகிறது. இத்தகைய உரிமைக் காப்புகளால்தான் உலகின் செறிவான அரசமைப்பு சாசனங்களின் ஒன்று என்ற சிறப்பை இந்திய சாசனம் பெற்றிருக்கிறது.
இதையெல்லாம் விவாதிக்கிற தளத்தை நாடாளுமன்றம் எப்போது அமைத்துத் தரும்? இதையெல்லாம் விவாதிக்க ஆலோனை கூறுகிற பொறுப்பை நீதிமன்றம் எப்போது எடுத்துக்கொள்ளும்? இதையெல்லாம் நாட்டு மக்கள் மதக் குரோதங்கள் இல்லாமல் விவாதிக்கிற களமாக வீதிமன்றங்கள் பக்குவப்படுகிறபோதுதான். ஆம், கொதிக்கும் மதப்பகைமை வெயிலில் மக்கள் மன்றமே, நீதான் நிழல்.












Click it and Unblock the Notifications