ஓட்டு கேட்கப் போய்... கொரோனாவிடம் சிக்கும் வேட்பாளர்கள்- முன்னெச்சரிக்கையே முதன்மை- பா. கிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

அன்பார்ந்த "வாக்காளப் பெருங்குடிமக்களே! உங்களது பொன்னான கோவிட் தொற்றை எங்களது வேட்பாளருக்கே அளியுங்கள்..." கடந்த சில நாட்களாக வரும் செய்திகளைப் பார்த்தால், வேட்பாளர்கள் இப்படித்தான் குரல் எழுப்ப வேண்டியிருக்குமோ?

2021ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் இறுதியான பிறகு தேர்தல் களம் சூடு பிடித்துவிட்டது என்னவோ உண்மைதான்! ஆனால், வாக்குளைக் கேட்கப் போய் வேட்பாளர்கள் இப்போதெல்லாம் தொற்றினைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். சட்டப் பேரவைக்குப் போகிறார்களோ இல்லையோ, மருத்துவமனைக்கு நிச்சயம் போக வேண்டிய ஆபத்து ஏற்பட்டுள்ளதோ!

Writer Paa Krishnans Article on Assembly Election and Covid19

கடந்த சில தினங்களுக்கு முன்பு கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தின் வேளச்சேரி வேட்பாளரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சந்தோஷ் பாபு கொரானா பெருந்தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வேட்புமனு தாக்கல் செய்த அடுத்து இருதினங்களிலேயே அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதைப் பகிர்ந்து கொண்ட அவர், "நான் எவ்வளவு துரதிர்ஷ்டமானவன்" என்று வேதனையோடு கூறியுள்ளார். எனினும், "வாக்காளர்களே, எங்கள் கட்சியினர் உங்களைச் சந்திப்பர்" என்று கூறிய அவர் டிஜிட்டல் தளங்களை நம்பி களத்தில் இறங்கியுள்ளார்.

தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே. சுதீஷ் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் இருக்கிறார்.

அக்கட்சியின் நிறுவனர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, பிரேமலதாவின் தம்பி சுதீஷ் உடன் சென்றிருந்தார். அங்கு உடல் நலை பாதிக்கப்பட்டு, சென்னை திரும்பிய அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டபோது தொற்று உறுதியானது. மருத்துவமனையில் அவர் சேர்ந்தவுடன், அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

சேலம் மேற்கு தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் அழகாபுரம் ஆர். மோகன்ராஜ் தற்போது தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் இருக்கிறார். கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வடசென்னைத் தொகுதியில் போட்டியிட்டபோது வாக்காளர்களை வசீகரிக்க பல உத்திகளை ரசிக்கும்படி செய்தவர் அழகாபுரம் மோகன்ராஜ்.

அப்போது சமூக வலைதளத்தில் "நான் அழகாபுரம் ஆர். மோகன்ராஜ் , உங்கள் நாடாளுமன்ற வேட்பாளர் . நிலையான ஆட்சி, சீரான பொருளாதாரம் , வலிமையான பாரதம் . வடசென்னை மக்கள் குரல் வடக்கே ஒலிக்க, வளமான வடசென்னை உருவாக உங்களுக்காக நாடாளுமன்றத்த்தில் குரல் கொடுக்க , எனக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து , பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்பு தாருங்கள்" என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அதைப் போல் "நாடாளப் போகும் அந்த ஒரு கட்சி எது? உங்கள் யூகங்களே, எங்கள் பதில்கள்" என்றும், "வட சென்னை இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக விளங்க வாக்குப் பதிவை நூறு சதவீதமாக்குவோம்" என்றும் சமூக வலைதளப் பிரசாரத்தை மேற்கொண்டது பலரையும் கவர்ந்தன. இப்படி சமூக வலைதளத்தை நம்பிய அவர் இப்போது சமூக இடைவெளியை மறந்துவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மக்கள் நீதி மய்யத்திற்கு அடுத்த அதிர்ச்சியாக அண்ணா நகர் தொகுதியில் போட்டியிடும் வி. பொன்ராஜ் திங்கள்கிழமை கொரோனா தொற்றுக்கு ஆளாகிவிட்டார்.

மறைந்த குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமிடம் ஆலோசகராகப் பணியாற்றிய அவர், கலாம் மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் சமூக ஆர்வலராகத் துடிப்போடு செயல்பட்டு வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் அவர் குரல் எழுப்பியிருந்தார்.

சில தினங்களுக்கு முன் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை கமல்ஹாசன் வெளியிட்டார். அப்போது, அதில் பெரும் பங்களிப்பு செலுத்திய பொன்ராஜ் அதன் அம்சங்களை விளக்கினார்.

ஆனால், கொரானா தொற்றினால் அவரால் களத்தில் இறங்க இயலாமல் போய்விட்டது. எனினும், பல காலமாக இணையதளம், சமூக ஊடகங்களின் மூலம் பிரபலமடைந்துவிட்ட அவர் தனது பரப்புரையை அதே வழியில் மேற்கொள்கிறார். மேலும், ஜூம் (Zoom) போன்ற இணையதள சந்திப்பைக் கருவியாகப் பயன்படுத்தி வாக்காளர்களுடன் உரையாடப் போவதாகக் கூறியுள்ளார்.

நாட்டில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் ஏதாவது ஒரு கட்சியின் வெற்றியைத் தீர்மானிக்கும் வகையில் ஏதாவது அலை வீசுகிறதோ இல்லையோ தெரியவில்லை. ஆனால், தேர்தல் நடக்கும் தமிழகம் உள்பட பல மாநிலங்களிலும் கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கிவிட்டது.

தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து 3 நாளாக பெருந்தொற்றின் தாக்கம் ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது.

தேர்தலுக்கான பரப்புரை, பொதுக்கூட்டங்கள், வீதி வீதியாக, வீடு வீடாக வேட்பாளர்களின் வாக்கு சேகரிப்பு என மக்கள் கூட்டங்களில் தேர்தல் விதிகள் காற்றில் பறக்கிறதா தெரியவில்லை. ஆனால், சமூக இடைவெளி காற்றில் பறக்கிறது.

எல்லோரும் வோட்டு போடுகிறார்களோ இல்லையோ முகக் கவசம் போடுவதே இல்லை.

"வாக்கு போடுங்கள்" கேட்கும் வேட்பாளர்களில் யாரும் "முகக் கவசம் போடுங்கள்" என்று வேண்டுகோள் விடுப்பதில்லை. பெரும்பாலான வேட்பாளர்களே முகக் கவசங்களை அணிவதில்லை.

அரசியல்வாதிகள் முகமூடி அணிகிறார்கள் என்று அரசியல் பார்வையாளர்கள் வருணிப்பார்கள். ஆனால், முகக் கவசம் அணிபவர்கள் சிலர் மட்டுமே.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் மு.க. ஸ்டாலின். நாம் தமிழர் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் போன்ற ஒரு சிலர் மட்டுமே இப்படி கவனம் செலுத்துகிறார்கள். பரப்புரைகளிலும் அவ்வப்போது வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

ஆனால், எங்கும் சமூக இடைவெளி காணவில்லை. தேர்தலுக்குப் பிறகு எம்எல்ஏக்களுக்கும் மக்களுக்கும்தான் இடைவெளி ஏற்படுகிறதே தவிர, சமூக இடைவெளியைக் காண முடிவதில்லை.

வீடு வீடாக வரும் வேட்பாளர்கள் கையில் நோட்டீஸ் தருகிறார்கள், ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு மரபுப் படி காசு போடுகிறார்கள். மக்கள் மனுவோ எதுவோ தந்தால் வேட்பாளர்கள் ஏற்கிறார்கள். எங்கும் சானிடைசரை மட்டும் காணவில்லை.

ஏற்கெனவே தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இதைப் பற்றி அடிக்கடி எச்சரித்தபடி இருக்கிறார். ஆனால், அதையெல்லாம் யாரும் கேட்பதாகத் தெரியவில்லை. இப்போது நடைபெறும் தேர்தல் திருவிழாவைப் பார்க்கும் போதும் பல வேட்பாளர்களும் களத்தில் நிற்போரும் ஒவ்வொருவராக பெருந்தொற்றுக்கு ஆளாகி வருவதைப் பார்த்தால், இப்படித்தான் தோன்றுகிறது.

ஒரு யோசனை கொரானா முற்றிலும் ஒழிந்து போகும் வரையில், தேர்தல்கள் நடத்தப்பட்டால், தேர்தல் நடத்தை விதிகளில் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல், தொற்றுநீக்கி (சானிடைசர்) பயன்படுத்துதல் ஆகியவற்றை கட்டாயம் என இடம் பெறச் செய்யலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+