Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் சொல்றாரே.. மிகப்பெரிய சம்பவம் நடக்குமாம்! 1967, 1977 தேர்தல்களில் அப்படி என்னதான் நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1967, 1977 தேர்தல்களைப் போல வரவிருக்கும் 2026 சட்டசபை தேர்தல் இருக்கும் எனப் பேசியுள்ளார் தவெக தலைவர் விஜய். விஜய் ஏன் அப்படிப் பேசினார்? 1967, 1977 தேர்தல்களில் அப்படி என்ன நடந்தது?

தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக தேர்தல் களத்தைச் சந்திக்கிறது. எதிர்வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கான பணிகளில் முழு மூச்சில் ஈடுபட்டு வருகிறது தவெக. இந்நிலையில், தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை இன்று அறிமுகம் செய்தார் விஜய்.

Will 2026 Be a Turning Point Like 1967 and 1977 TVK s Vijay Thinks So

அதைத்தொடர்ந்து பேசிய விஜய், "தமிழக அரசியலில் இதற்கு முன்னால் நடந்த மிகப்பெரிய இரண்டு தேர்தல்களைப் போல 2026 தேர்தல் முடிவுகளும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. 1967 மற்றும் 1977 ஆகிய அந்த இரண்டு மாபெரும் தேர்தல்களில் ஏற்கெனவே தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருந்த அதிகார பலம், அசுர பலம் அனைத்தையும் எதிர்த்து நின்றுதான் புதிதாக வந்தவர்கள் ஜெயித்தனர்." எனப் பேசியுள்ளார். விஜய் சொன்ன அந்த 2 தேர்தல்களில் என்ன நடந்தது?

1967 சட்டசபை தேர்தல்

1967ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தல், தமிழக வரலாற்றில் ஒரு திருப்புமுனைத் தேர்தலாக மாறியது. அதுவரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. சுதந்திரத்திற்குப் போராடிய காங்கிரஸை வெளியேற்றி விட்டு, திமுகவை தமிழ்நாடு மக்கள் தேர்ந்தெடுத்து அரியணையில் அமர்த்தினர். அதன்பிறகு காங்கிரஸ் கட்சியால் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கவே முடியாமல் போனது வரலாறு.

1962ல் காங்கிரஸ் வெற்றி பெற்று, காமராஜர் முதலமைச்சர் ஆனார். ஆனால், அவர் பதவி விலகி கட்சிப் பணிக்குச் சென்றுவிட, பக்தவத்சலம் முதலமைச்சர் ஆனார். அந்த ஆட்சிக்காலத்தில் பல பிரச்சனைகள் நடந்தன. 1965ல் இந்தியை ஒரே ஆட்சி மொழி ஆக்குவதை எதிர்த்து திமுக நடத்திய போராட்டம், காங்கிரஸ் அரசுக்கான எதிர்ப்பை ஒருங்கிணைத்தது. ஒரு கட்டத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது, காங்கிரஸ் எதிர்ப்புப் போராட்டமாக மாறியது.

திமுக பெற்ற மிகப்பெரிய வெற்றி

மேலும், இந்த தேர்தலில் மக்களுக்கான அத்தியாவசிய பிரச்சனைகளை எடுத்துச் சொல்லி வாக்கு கேட்டது திமுக. திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி வழங்கும் என்றார் அறிஞர் அண்ணா. மூன்று படி இல்லாவிட்டாலும் ஒரு படி நிச்சயம் என்றார். படி அரிசித் திட்டம் என்ற இந்த வாக்குறுதி, மக்களின் மனநிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்ட அலை, அரிசிப் பஞ்சம், தி.மு.கவின் வலுவான கூட்டணி, தேர்தல் நெருக்கத்தில் எம்.ஜி.ஆர். சுடப்பட்டது ஆகியவை எல்லாம் சேர்ந்து களத்தை திமுகவுக்கு சாதகமாக்கின. தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கி வைத்தன. திமுக தலைமையிலான ஐக்கிய முன்னணி கூட்டணி பெரும் வெற்றியை பெற்றது. காமராஜர் தனது சொந்த ஊரான விருதுநகர் தொகுதியில் தோற்றுப் போனார்.

174 இடங்களில் போட்டியிட்ட திமுக 137 இடங்களைக் கைப்பற்றியது. 232 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 51 தொகுதிகளை மட்டுமே பிடித்தது. முதல் முறையாக ஒரு மாநிலக் கட்சி ஆட்சி அமைத்த வரலாற்றைக் கட்டி எழுப்பியது திமுக. அதன்பிறகு காங்கிரஸ் தமிழ்நாட்டில் இன்றளவும் ஆட்சிக்கு வரவே முடியவில்லை.

1977 சட்டசபை தேர்தல்

1977ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர் துவங்கிய அதிமுக, சந்தித்த முதல் பொதுத் தேர்தலிலேயே அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. புதிதாக ஆரம்பித்த ஒரு கட்சி இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது இந்தியா முழுவதும் அரசியல் அரங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

முன்னதாக 1971 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. ஆனால் அரசின் நிதி நிலைமை மோசமாக இருந்ததால், அரசின் வருவாயை அதிகரிக்கும் திட்டங்களைச் செயல்படுத்த நினைத்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி.

அப்போது மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்பு உதவித் தொகையை வழங்க முடிவெடுத்தது. ஆனால், ஏற்கனவே மதுவிலக்கை அமல்படுத்தியிருந்த தமிழக அரசுக்கு அந்த உதவித் தொகையை வழங்க மறுத்தது. இதனால், தமிழ்நாட்டில் மதுவிலக்கை நீக்க முடிவு செய்தார் கருணாநிதி. 1971 ஆகஸ்ட் 30ஆம் தேதி மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது.

எம்ஜிஆர் தனிக்கட்சி

ஏற்கெனவே, அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படாதது உள்ளிட்ட பிரச்சனைகளால் அதிருப்தியில் இருந்த எம்.ஜி.ஆர், மதுவிலக்கு கொள்கை ரத்து செய்யப்பட்டதை கண்டித்துப் பேச ஆரம்பித்தார். மேலும், கட்சிப் பதவிகளில் இருப்பவர்கள், குடும்பத்திற்கு வாங்கியிருக்கும் சொத்துகள் இருந்தால் கணக்குக் காட்ட வேண்டும் என்றும் பேசினார். இதையடுத்து நோட்டீஸ் அனுப்பபட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதையடுத்து பெரிய பிரச்சனைகள் வெடித்து 1972ல் அதிமுகவை தொடங்கினார் எம்ஜிஆர். திண்டுக்கல்லில் நடந்த இடைத்தேர்தலில் முதல் முறையாக அதிமுக போட்டியிட்டது. அ.தி.மு.க வேட்பாளர் மாயத்தேவர் பெரும் வெற்றி பெற்றார். அதன்பிறகு, அதிமுகவை கிராமங்கள்தோறும் வளர்த்தெடுத்தார் எம்ஜிஆர்.

அதிமுக அபார வெற்றி

1977ல் நடந்த தேர்தல் களம் திமுக vs அதிமுக vs ஜனதா கட்சி vs இந்திரா காங்கிரஸ் என்று நான்கு முனைப்போட்டி ஆனது. தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது ஒட்டுமொத்த இந்தியாவும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்திருந்த அ.தி.மு.க கூட்டணி அபார வெற்றிபெற்றிருந்தது.

இந்தக் கூட்டணியில் அதிமுக மட்டும் 130 இடங்களைப் பிடித்திருந்தது. அதன் கூட்டணிக் கட்சியான சி.பி.எம் 12 தொகுதிகளைப் பிடித்தது. திமுக 48 இடங்களையும் காங்கிரஸ் கட்சி 27 இடங்களையும் அதன் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 இடங்களையும் பெற்றன. ஜனதா கட்சிக்கு வெறும் பத்து இடங்களே கிடைத்தன.

திமுக முதன்முதலில் ஆட்சியைப் பிடித்தபோது, பல கட்சிக் கூட்டணியை அமைத்துத்தான் பெரும் வெற்றியைப் பெற முடிந்தது. ஆனால், மிகச்சிறிய கூட்டணியின் மூலம் அதைச் சாதித்தார் எம்.ஜி.ஆர். இந்தியாவில் ஒரு திரைப்பட நடிகர் கட்சி ஆரம்பித்து, ஆட்சியைப் பிடித்தது அதுவே முதல் முறை. அடுத்த 10 ஆண்டுகளுக்கு, எம்ஜிஆர் மறைவு வரை அதிமுக ஆட்சியை அசைக்க முடியவில்லை.

விஜய் பேச்சு பின்னணி

1967ல் காங்கிரஸை வீட்டுக்கு அனுப்பி, முதல் முறையாக திமுக ஆட்சியைப் பிடித்தது போல, 1977ல் திமுகவை ஆட்சியை விட்டு இறக்கி எம்.ஜி.ஆரின் அதிமுக அரியணையில் ஏறி, 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்ததைப் போல, புதிய கட்சியான தவெக, திருப்புமுனையை ஏற்படுத்தும் எனச் சொல்லி இருக்கிறார் விஜய். அரசியல் சூழல்கள், அதனை மெய்ப்பிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+