தமிழகம் குஜராத் ஆக மாறும்.. இந்து முன்னணி தலைவர் மிரட்டல் !

கோவை: இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார் வியாழக்கிழமை மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரணியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார், இவர் வியாழக்கிழமை இரவு 11.30 மணி அளவில், சுப்பிரமணியபாளையத்திலுள்ள தனது வீட்டிற்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, தாக்குதலில் ஈடுபட்டனர். அரிவாளால் பல இடங்களில் அவரை வெட்டினர். இதில் சசிகுமார் நிலைகுலைந்து கீழே சரிந்தார். மர்ம கும்பல் தப்பி சென்றது.

Hindu Munnani Condemns to his party spokesperson assassination

8 இடங்களில் வெட்டு காயங்களுடன் ஆபத்தான நிலையில், அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார். சசிக்குமார் இறந்த தகவல் அறிந்த இந்து முன்னணியினர், மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதையடுத்து சசிக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து இந்து முன்னணியின் மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மற்றும் மாநில நிர்வாகி முகாம்பிகை மணி ஆகியோர் குறிப்பிடும்போது, 'போலீஸ் அஜாக்கிரதையினாலேயே எங்கள் உண்மைத் தொண்டர் ஒருவரை பறிகொடுத்துள்ளோம்.

அவருக்கு ஏற்கெனவே கொலை மிரட்டல் வந்தது. அதை உத்தேசித்து போலீஸ் பாதுகாப்பும் (பிஎஸ்ஓ) போடப்பட்டிருந்தது. அதை சமீபத்தில்தான் போலீஸார் விலக்கிக் கொண்டனர். அதைத் தொடர்ந்தே இந்த கொலை நடந்துள்ளது!' என்று தெரிவித்தனர். மேலும், தமிழகம் குஜராத் ஆக மாறும் எனவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இந்நிலையில் சசிகுமார் இறுதி ஊர்வலத்தின்போது, துடியலூர் பகுதியில் உள்ள சுமார் 50 கடைகள் மீது கல்வீச்சு நடந்தது. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில், போலீஸ் ஜீப்பை கலவரக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இந்த ஜீப், துடியலூர் காவல்நிலைய ஆய்வாளர் பயன்படுத்தி வந்தது ஆகும். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன் ஒசூரில் விஸ்வ இந்து பரிஷத் செயலாளர் சூரி என்பவர் கொலை செய்யப்பட்டார். அதையடுத்து திண்டுக்கல்லில் இந்து முன்னணியின், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர் கணேஷ் என்பவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடதக்கது.

English summary
A Hindu Munnani spokesperson was killed by a four-member gang at Subramaniyampalayam in Coimbatore.
Please Wait while comments are loading...

Videos