பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!
வாஷிங்டன்: மத்திய கிழக்கு போர் டிரம்பிற்கு நல்ல பெயரை வாங்கி தரவில்லை. அமெரிக்காவில் அவர் மீதான அதிருப்தி தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அங்கு இந்தாண்டு நவம்பர் மாதம் மிட் டேர்ம் தேர்தல் நடக்கும் சூழலில், அதில் இது எதிரொலிக்கலாம். அப்படி மிட் டேர்ம் தேர்தலில் டிரம்ப் நாடாளுமன்ற பெரும்பான்மையை இழந்தால் அதிபராக இருந்தும் அவரால் விரும்பிய சட்டத்தைக் கொண்டு வர முடியாது.
மத்திய கிழக்கு போர் காரணமாக அமெரிக்காவிலும் எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் விலைவாசியும் உயர ஆரம்பித்துவிட்டது. மக்கள் இதனால் அங்குக் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். சமீபத்தில் அங்கு நடத்திய சர்வே முடிவுகள் டிரம்ப் மீது மக்கள் கோபம் பல மடங்கு அதிகரித்துள்ளதையே காட்டுகிறது. அவர் வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய பிறகு, இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலையில் அவரது ஆதரவு இருக்கிறது.

சர்வே
ராய்ட்டர்ஸ் மற்றும் இப்சோஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த தகவல்கள் தெரிய வந்தன. எரிபொருள் விலை உயர்வு இதற்குப் பிரதான காரணமாக இருக்கிறது. மேலும், ஈரான் போரை டிரம்ப் தேவையில்லாமல் தொடங்கி நடத்தி வருவதாக அமெரிக்க மக்கள் கருதுகிறார்கள். இதுவே இந்த வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது..
அதிகரிக்கும் எதிர்ப்பு
இந்த சர்வேயில் அமெரிக்காவில் வெறும் 36% பேர் மட்டுமே டிரம்ப்பை ஆதரிக்கிறார்கள். கடந்த வாரம் இந்த ஆதரவு 40%ஆக இருந்த நிலையில், இப்போது அதை விடக் கீழே போய் இருக்கிறது. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்காவில் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும், அவரது பொருளாதார கொள்கைகள் காரணமாகச் செலவுகள் கணிசமாக அதிகரித்துவிட்டதாக அமெரிக்கர்கள் கருதுகின்றன. வாழ்க்கைச் செலவுகள் குறித்த கேள்விக்கு வெறும் 25% மட்டுமே திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.
அதேபோல 29% பேர் மட்டுமே டிரம்பின் பொருளாதார கொள்கைகளை ஆதரித்துள்ளனர். அவர் ஏற்கனவே 2016 முதல் 2020 வரை அதிபராக இருந்துள்ளார். அந்த காலகட்டத்தையும் சேர்த்துப் பார்த்தால் கூட டிரம்ப் பெற்ற மிகக் குறைந்த ரேட்டிங் இதுதான். இதற்கு முன்பு அதிபராக இருந்த பைடனும் கூட இந்தளவுக்குக் குறைவான ரேட்டிங்கை வாங்கியதே இல்லை.
சரியும் ரேட்டிங்
டிரம்ப் பதவியேற்றதிலிருந்து அவரது ரேட்டிங் தொடர்ந்து குறைந்தே வருகிறது. கடந்தாண்டு தொடக்கத்தில் அவர் அதிபராகப் பதவியேற்ற சமயத்தில் அவரது ரேட்டிங் 47% ஆக இருந்தது. அதன் பிறகும் கூட அது 40%ஆக நீடித்து வந்தது. இந்தச் சூழலில் தான் போர் ஆரம்பித்த பிறகு நிலைமை மோசமாகியுள்ளது. ஈரான் போருக்கு எத்தனை பேர் ஆதரவளிக்கிறீர்கள் என்ற கேள்விக்குக் கடந்த வாரம் 37% ஆதரவு அளித்திருந்த நிலையில், இந்த வாரம் அது 35%ஆக குறைந்துள்ளது. போரை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 59%இல் இருந்து இந்த வாரம் 61%ஆக உயர்ந்துள்ளது.
மிட் டேர்ம் தேர்தல்
இந்தாண்டு இறுதியில் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை முடிவு செய்யும் மிட் டேர்ம் தேர்தல் நடக்கிறது. அதில் டிரம்ப் பிரதிநிதிகள் சபை, அதாவது அமெரிக்காவில் கீழவையில் பெரும்பான்மையை இழப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதுவே அவரது அதிகாரத்தைப் பறிக்கும். செனட் எனப்படும் மேலவையிலும் ரிஸ்க் அதிகமாகவே இருக்கிறது. இதே அதிருப்தி தேர்தல் வரை தொடர்ந்தால் அதையும் கூட டிரம்ப் இழக்கலாம்.
அப்படி செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை என இரண்டிலும் தோல்வி அடைந்தால் டிரம்பிற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்காது. அப்படி இல்லாமல் போனால் டிரம்ப் பெயரளவில் அதிபராக இருந்தாலும் கூட அவரால் விரும்பிய சட்டங்களைக் கொண்டு வர முடியாமல் போகலாம்!












Click it and Unblock the Notifications