For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் விரும்பிய சிலருக்கு வாய்ப்பு அளிக்க முடியாமல் போய்விட்டது: கருணாநிதி வருத்தம் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் நான் விரும்பிய சிலருக்கு வாய்ப்பு அளிக்க முடியாமல் போய் விட்டது. அதனால் அவர்கள் எல்லாம் வருந்துவார்களே என்ற வேதனைதான் எனக்கு மிகுதியாக உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ''பதினைந்தாவது பொதுத்தேர்தல் வரும் மே திங்கள் 16ஆம் நாள் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி சார்பில் 41 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் 5 இடங்களிலும், மனித நேய மக்கள் கட்சி சார்பில் 5 இடங்களிலும், புதிய தமிழகம் கட்சி சார்பில் 4 இடங்களிலும், மக்கள் தே.மு.தி.க. சார்பில் 3 இடங்களிலும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி, சமூக சமத்துவப் படைக் கட்சி ஆகியவை தலா ஓரிடத்திலும் என்று 61 தொகுதிகள் தோழமைக் கட்சியினருக்கு வழங்கப்பட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Karunanidhi's letter to his cadres

காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கியதிலே கூட, ஆற்காடு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதிலும், பின்னர் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த சோளிங்கர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது என்றும், ஆற்காடு தொகுதியில் கழகம் போட்டியிடுவதென்றும் இரண்டு கட்சியினரும் கலந்து பேசி ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (13-4-2016) திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள 173 வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப் பட்டுள்ளது. போட்டியிடுகின்ற கழக வேட்பாளர்கள் எல்லாம் என்னைச் சந்தித்து மகிழ்ந்து சால்வை அணிவிக்கின்ற நேரத்தில், அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்து, ஆய்வுக்கும் வந்து, தற்போது வாய்ப்புக் கிடைக்காத நிலையில் அவர்கள் எல்லாம் வருந்துவார்களே, அவர்களை எல்லாம் எப்படி நேரில் சந்திப்பது என்ற வேதனைதான் என் மனதைக் குடைகிறது.

எனக்கே மிக நன்றாகத் தெரிந்தவர்கள், கழகத்திற்காக நீண்ட காலம் அரும்பாடுபட்டவர்கள், கழகம் நடத்திய போராட்டங்களில் ஈடுபட்டு காராக்கிரகத்தில் வாடியவர்கள் சிலருக்கும், அவர்களுடைய அருமை வாரிசுகளுக்கும் நான் வாய்ப்பளிக்க வேண்டுமென்று விரும்பிய நேரத்திலே, அவர்களை விட வேறு சிலருக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம், இந்தத் தேர்தலில் விருப்பமானவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதைவிட, வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதுதான் சிறப்பானது என்ற சரியான கருத்து சொல்லப்பட்ட காரணத்தால், நான் விரும்பிய சிலருக்கு வாய்ப்பு அளிக்க முடியாமல் போய் விட்டது.

அதனால் அவர்கள் எல்லாம் வருந்துவார்களே என்ற வேதனைதான் எனக்கு மிகுதியாக உள்ளது. அவர்களில் சிலருடைய பெயர்களையே குறிப்பிட நான் நினைத்த போதும், ஒருவர் பெயரை மட்டும் குறிப்பிட்டால், மற்றவர்களைக் குறிப்பிடவில்லையே என்ற நிலை ஏற்பட்டு விடும்.

திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் 173 இடங்களில் 97 பழைய முகங்களுக்கும், 76 புது முகங்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 19 மகளிருக்குப் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கழக வேட்பாளர்கள் 173 பேரில், 106 பேர் பட்டதாரிகளாவர். அதிலும் 9 பேர் டாக்டர்கள்; 27 பேர் வழக்கறிஞர்கள்; 12 பேர் இஞ்சினீயர்கள்; 19 பேர் முது நிலைப் பட்டதாரிகள்; முனைவர் எனும் பி.எச்டி ஆய்வு பட்டம் பெற்றோர் 3 பேர்; இளநிலைப் பட்டதாரிகள் 36 பேர். இவர்கள் எல்லாம் விருப்ப மனு தாக்கல் செய்து, நேர்காணலுக்கும் வந்து, நேர்காணலில் நானும், பொதுச் செயலாளர் பேராசிரியரும், பொருளாளர் ஸ்டாலினும், முதன்மைச் செயலாளர் துரைமுருகனும், அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதியும் பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை கலந்து கொண்டு, சுமார் 5 ஆயிரம் பேரை நேர்காணல் செய்து, அவர்களின் தகுதிகள், வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மற்றும் சூழ்நிலைகள் இவற்றையெல்லாம் கடந்த சில வாரங்களாக ஆய்ந்தறிந்து தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள்தான் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் அனைவருமே கழகத்திற்காகப் பாடுபட்டவர்கள்; ஏதோ ஒரு வகையில் கழகத்திற்காக உழைத்தவர்கள்; பல பேர் கழகம் நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர்கள் என்பதில் எனக்கு எப்போதும் சந்தேகமில்லை. ஆனால் நான் ஏற்கனவே தெரிவித்ததைப் போல ஒரு தொகுதியில் கழகத்தின் சார்பில் ஒருவரைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்.

ஒரு தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிட பலர் தகுதி உடையவர்களாக இருக்கக்கூடும். அவர்களில் ஒருவருக்கு ஒப்பீட்டளவில் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கலாம். அப்படிப்பட்டவரைத் தேர்ந்தெடுப்பது, அதுவும் "சமன் செய்து சீர்தூக்குங் கோல் போல் அமைந்து" தேர்ந்தெடுப்பது என்பது எவ்வளவு கடினமான காரியம் என்பதைப் பற்றி நான் முன்பே தெரிவித்திருக்கிறேன்.

சில தொகுதிகளில் நாங்கள் வெற்றி வேட்பாளர் என்று தேர்ந்தெடுத்து அறிவிப்பதற்காகக் காத்திருந்த நிலையில், அந்தத் தொகுதிகள் தோழமைக் கட்சிகளுக்கு அளிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. ஒரு தொகுதிக்கு பல பேர் விருப்ப மனு தாக்கல் செய்த நிலையில் அவர்களில் பலரும் வெற்றி வேட்பாளர்கள் என்று கருதினாலும் அதிலே ஒருவரைத்தான் எங்களால் அறிவிக்க முடிந்தது.

அறிவிக்கப்படாதவர்கள் யாரும் வருத்தப்படக் கூடாது. அந்தத் தொகுதிகள் அனைத்திலும் "தி.மு.கழகம்தான் போட்டியிடுகிறது" என்ற உறுதியான எண்ணத்தோடு உழைத்திட வேண்டும். அனைத்துத் தொகுதிகளிலும் உங்களுக்காக மேலும் நான் தொடர்ந்து உழைத்திட, உங்களுக்குப் பதிலாக நான் போட்டியிடுகிறேன், நமது சின்னம் உதயசூரியன், மற்றும் நம் தோழமைக் கட்சிகளின் சின்னம் என்ற உணர்வோடு அல்லும் பகலும் அரும் பாடுபட வேண்டும்.

எல்லோருக்கும் நல் வாய்ப்பு வரும்; தன்னுடைய சுற்று வரும் வரை காத்திருக்கக் கற்றுக் கொண்டிருப்பவருக்குத் தான் காரியம் கை கூடும் என்பதை மறக்கக் கூடாது. இதைத்தான் அண்ணா அவர்கள் ஆங்கிலத்தில் "We should learn to Wait till our Turn comes" என்று அழகாகச் சொல்லியிருக்கிறார் என்பதை நான் முன்பே ஒரு முறை சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள், இந்தத் தேர்தல், நம்முடைய கழகம் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று, தமிழக மக்களின் நலனுக்காக ஆட்சி அமைத்தே தீர வேண்டும் என்பதற்கான தேர்தல். இந்தத் தேர்தலில் தாம் வெற்றி பெற வேண்டுமென்று கழகத்தில் மனு தாக்கல் செய்தோர் எண்ணாமல், தி.மு. கழகம் வெற்றி பெற வேண்டும், அண்ணா கண்ட சின்னமாம் - அண்ணா தந்த, அண்ணா வென்ற சின்னமாம் உதயசூரியன் வெற்றி பெற வேண்டுமென்ற அசைக்க முடியாத எண்ணத்தோடு இருக்க வேண்டும். போட்டியிட வாய்ப்புக் கிடைத்தோரும், நமக்கு வாய்ப்புக் கிடைத்து விட்டது, நமக்கு எதிராகப் போட்டியிட மனு செய்தவர்களைக் "கவனித்துக்" கொள்ளலாம் என்ற எதிர்மறை நோக்கிலும் போக்கிலும் நடந்து கொள்ளாமல், அனைவரையும் அன்போடு அரவணைத்துச் சேர்த்துக் கொண்டு, கழகத்தின் வெற்றிக்காக முழு மூச்சுடன் பாடுபட வேண்டும்.

அண்ணா அவர்கள் ஒருமுறை பேசியதை நான் ஏற்கனவே நினைவுபடுத்தியது போல, "திராவிட முன்னேற்றக் கழகம் ஓர் அரசியல் கட்சி மட்டுமல்ல; இது ஒரு சமுதாயச் சீர்திருத்த இயக்கம். இதில் ஈடுபட்டிருக்கின்ற அத்தனை பேரும், யார் யார் எந்தெந்த இடத்தில் இருப்பது என்பதல்ல; யார் யார் எந்தெந்த நேரத்தில் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வது என்பதும் முக்கியமல்ல; ஒவ்வொரு வரும் ஒவ்வொரு பொறுப்பை ஏற்றிருப்பது இந்த இயக்கத்திலே அமைந்திருக்கின்ற போர்ப்பாசறை போன்றதாகும். இதிலே பகைவர்கள் உள்ளே புக நினைத்தால், அவர்கள் எங்கள் நெருக்கத்தின் இடையில் சிக்கிக் கூழாகிப் போவார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம், ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திலிருந்து பணியாற்ற வேண்டுமென்பதற்கு ஏற்பட்டிருக்கிற ஓர் அமைப்பே தவிர, வேறு ஏற்றத் தாழ்வுகள், மனமாச்சர்யங்கள் எங்களுக்குள் இருக்கிறதென்று மாற்றார்கள் கருதினால், நாங்கள் வளர்ந்த வரலாற்றை அவர்கள் தெரிந்து கொண்டவர்கள் அல்லர் என்றுதான் சொல்ல வேண்டும். நாங்கள் ஒரு தாயின் வயிற்றில் பிறக்காததற்குக் காரணம், ஒரு தாயின்வயிறு இத்தனை பிள்ளைகளையும் தாங்காது என்பதுதான்" என்று 26-9-1960 அன்று சென்னை கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் உருக்கமாகக் கூறியதை நாம் என்றும் நினைவில் நிறுத்தியிருப்பதை அறியாத மாற்றார், நம்மிடையே பிளவு ஏற்படாதா, இடையில் நாம் புகுந்து ரத்தம் குடிக்க முடியுமா என்று ஏங்கிய நிலையில் காத்துக் கிடக்கும் எதிரிகள் இறுதியில் ஏமாந்துதான் போவார்கள்!

எனவே கழக உடன்பிறப்புகள் சிறு வேற்றுமை இருந்தாலும் அதனை மறந்து, "குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை"என்பதை நினைத்து, அண்ணா அவர்கள் கூறிய "புடவை உவமை"யை மனதிலே கொண்டு, இந்த முறை இன்னார் செயலாளராகப் பணியாற்றினாரா; அடுத்த முறை மற்றொருவர் அந்தப் பொறுப்புக்கு வரட்டும் என்ற விட்டுக் கொடுக்கும் விசாலமான நோக்கோடு கழக உடன்பிறப்புகள் உணர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதை எச்சரிக்கையாக உங்களுக்குத் தெரிவிக்கின்றேன்.

மாறாக, நாங்கள் மோதியே தீருவோம் என்ற ரீதியில் நிகழ்வுகள் நடக்குமானால், அது மோது வோருக்கும், மோதுவோரின் சொந்த வீடான இந்த இயக்கத்திற்கும் தீங்காக முடியும் என்பதையும்; அது வேட்பாளர்களையும் பாதித்து நம் அனைவரையும் பாதித்து, தமிழகத்தின் எதிர்காலத்தையே பாதித்து விடும் என்பதையும், "ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு" என்பதையும் நினைவிலிருந்து சிறிதும் அகன்று விடாமல் நிலைநி றுத்திக் கொள்ள வேண்டுகிறேன். கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு காத்து, கழகத்தின் வெற்றி, உதயசூரியனின் வெற்றி என்ற ஒரே நோக்குடன் உழைத்திடுவீர்! வெற்றி நமதே! இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK President M Karunanidhi on thursday letter to his cadres for up coming assembly election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X