For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீயாய் பரவும் பன்றிக் காய்ச்சல்... பதற வேண்டாம்: முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம்?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நாடுமுழுவதும் பன்றிக்காய்ச்சல் பரவிவருகிறது. கடந்த 40 நாட்களில் மட்டும் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 500ஐ தொட்டுள்ளது. நாளுக்கு நாள் புள்ளிவிபரங்கள் அதிகரிக்க அதிகரிக்க ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

ஆரம்ப காலத்தில் அதாவது 1920களில் இந்த வைரஸ் பன்றிகளிடையே காணப்பட்டது. பின்னர் இந்த வைரஸ் மனிதர்களை தாக்க துவங்கி பின்பு ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் தொற்று நோயாக உருமாறியது. தற்போது இந்த நோய் பன்றிகளின் மூலம் மனிதர்களுக்கு பரவுவது இல்லை.

What is Swine flu? How you can protect yourself from it: Explained

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் உலக அளவில் பரவத்தொடங்கிய இந்த நோய் அனைத்து நாடுகளின் தீவிர தடுப்பு நடவடிக்கை மூலமாக முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. உலக அளவில் பரவும் நோய் நிலையிலிருந்து சாதாரண புளு காய்ச்சலாக உருமாறிவிட்டதால், இனி இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

யாருக்கு பரவும்

நோய் பாதிக்கப்பட்ட மனிதரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது. வயதானவர்கள், சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் நீரிழிவு நோய், இரத்தக்கொதிப்பு, இருதயநோய், கல்லீரல் நோய்களால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்நோய் தீவிரமாக உடல்நிலையை பாதிக்க வாய்ப்புள்ளது.

இன்புளூயன்சியா ஹெச்1 என் 1

ஹெச்1 என் 1 என்ற வைரசால் தாக்கப்படும் இன்புளூயன்சியா காய்ச்சல் பன்றிக்காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.

இது 3 ஏ.பி.சி. என்று 3 வகைப்படுகிறது. இவை அனைத்தும் வைரஸ்களால் ஏற்படுகிறது.

அறிகுறிகள் என்னென்ன?

மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, 3 நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் போன்ற பன்றி காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

குழந்தைகள் வேகமாகவோ, சிரமப்பட்டோ மூச்சு விடுதல், சுறுசுறுப்பு இல்லாமை, படுக்கையை விட்டு எழுவதில் சிரமம், விளையாடுவதில் ஆர்வம் இன்மை ஆகியவற்றுடன் காணப்பட்டுவதும் பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகளாம்.

ஏ டைப் அறிகுறிகள்:

ஏ டைப் வைரஸ் தொற்றினால் லேசான காய்ச்சல் இருக்கும்.

சளி, இருமல் , தலைவலி, வயிற்றுப்போக்கு வாந்தி ஆகியவை இருக்கும்.

சிலருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி இருக்காது.

இவர்களுக்கு ஆய்வக பரிசோதனை தேவை இல்லை. வீட்டில் ஓய்வு எடுத்து கொள்ளும்படியும் மற்ற நபர்களிடம் தொடர்பை குறைத்துக் கொள்ளச் செய்ய வேண்டும்.

ஏ டைப் பன்றிக்காய்ச்சல் சிகிச்சை:

இந்த நோய் வந்தவர்களை தனிமை படுத்தி சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளித்தால் போதும். இவர்களுக்கு டாமிபுளு மாத்திரை கொடுக்கக்கூடாது. ஏன் என்றால் அவ்வாறு அந்த மாத்திரை கொடுத்தால் அது பின்விளைவை ஏற்படுத்தும்.

பி டைப் அறிகுறிகள், சிகிச்சை

பி டைப் நோயாளிகளுக்கு ஏ டைப் நோயாளிகளுக்கு இருந்த அனைத்து அறிகுறிகளுடன் காய்ச்சல் அதிகமாக இருக்கும். தொண்டை வலி அதிகமாக இருக்கும். ஆய்வக பரிசோதனை தேவை இல்லை. பி டைப் நோயாளிகளுக்கு உடனடியாக டாமி புளு மாத்திரை கொடுக்கவேண்டும்.

சி டைப் அறிகுறிகள்:

சி டைப் நோயாளிகளுக்கு பி டைப் நோயாளிகளுக்கு இருந்த அறிகுறி தவிர வழக்கத்தை விட அதிக மூச்சுத்திணறல் ஏற்படும். ரத்தத்துடன் கலந்த சளிவரும். நகம் நீல நிறமாக மாறும். சாப்பிட மனம் வராது. பசி எடுக்காது. உடனே

ஆய்வக பரிசோதனை செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

பன்றிக்காய்ச்சல் சிகிச்சை:

பன்றி காய்ச்சல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் டாமி புளு மாத்திரை மருத்துவரின் ஆலோசனை பேரில் சாப்பிட வேண்டும் 'ஒசல்டமிவிர்', 'ஜானமிவிர்' ஆகிய மருந்துகளை அளிக்க வேண்டும். இந்த மருந்துகள் மரணத்தை ஏற்படுத்தும் நிமோனியாவை கட்டுப்படுத்துகிறது.

டாமி புளு மாத்திரை

பன்றி காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்படாத நபர்களுக்கு இந்த வைரஸ் தடுப்பு மருந்துகளை அளிக்கக்கூடாது. 5 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான குழந்தைகளுக்கு கூட, அவர்கள் கடுமையாக பாதிக்கப்படாத நிலையில் இந்த மருந்துகளை கொடுக்க வேண்டிய தேவை இல்லை.

எச்சரிக்கை

பன்றிக் காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் டாமிபுளு மாத்திரைகளை, மருத்துவர்களின் அறிவுறுத்தல் இல்லாமல், முறையின்றி உட்கொண்டால் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

விளைவுகள் மோசமாகும்

"டாமி புளு மருந்துகளை முறையின்றி பயன்படுத்தினால் மருந்தின் சக்தியை எச்1என்1 வைரஸ் தடுத்து நிறுத்தி மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். டாமி புளு தனது சக்தியை இழக்க நேரிடும். எனவே மருத்துவர்கள் பரிந்துரைப்படியே மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

எனவே, பொதுமக்கள் யாரும், சாதாரண காய்ச்சலுக்காகவோ, சளிக்காகவோ மருத்துவ பரிசோதனை இன்றி டாமி புளு மாத்திரைகளைப் போட வேண்டாம். உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டால் உரிய மருத்துவரை அணுகி, அவரது பரிந்துரையின் படி சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

அச்சம் வேண்டாம்

மேலும், பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்கள், பயந்தோ, அறியாமையாலோ வீட்டிற்குள் முடங்கி இருக்காமல், தகுந்த மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை பெற்று குணமடையலாம். பன்றிக் காய்ச்சல் நோய்க்கு உடனடியாக உரிய சிகிச்சை மேற்கொண்டால் நிச்சயமாக பூரண குணமடையலாம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

பன்றிக்காய்ச்சலை பரப்பும் வைரஸ் கைகுட்டையில் 12 மணிநேரமும், கைளில் 5 நிமிடமும், குளிர்ந்த தண்ணீரில் 30 நாட்களும் உயிர்வாழக்கூடியது . மேலும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க இருமும்போதும், தும்மும் போதும் மற்றவர்களுக்கு குறைந்தது 4 அடி இடைவெளி இருக்க வேண்டும்

சுத்தம் அவசியம்

ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நாமும் நம்மை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தும்மியப் பிறகோ, இருமியப் பிறகோ நமது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். வெளியில் சென்றுவிட்டு வந்ததும் கை, கால்களை நன்கு கழுவி, பின்னர் முகத்தையும் கழுவ வேண்டும்.

தினமும் குறைந்தபட்சம் ஒரு வேளை சுத்தமான நீரில் குளியுங்கள். நோய்க்கிருமி எதிர்ப்பு சக்தி கொண்ட சோப்பைக் கொண்டு அடிக்கடி கைகளை கழுவுங்கள். வெளியில் சென்று விட்டு வந்ததும் கை, கால், முகம், கழுத்துப் பகுதிகளை சுத்தமான தண்ணீரால் நன்கு கழுவுங்கள்.

சத்தான உணவுகள்

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 தம்ளர் தண்ணீர் குடியுங்கள். சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு தானிய வகைகள், பசுமையான காய்கறிகள், வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடுவதன் மூலம் நோய்களை தடுக்கலாம்.

உடற்பயிற்சி

மிதமான உடற்பயிற்சி உடலில் ஆக்சிஜனின் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் என்பதால், தினசரி 30 முதல் 40 நிமிடம் வேகமான நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருங்கள்.

குழந்தைகளுக்கு பாதுகாப்பு

குழந்தைகளை வெளியில் கொண்டு செல்வதைத் தவிருங்கள்.

வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும் குழந்தைகளைத் தூக்காதீர்கள். உடனடியாக உடலை சுத்தம் செய்த பின்னரே அடுத்த வேலையைத் துவக்குங்கள் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இருமல், தும்மல்

இருமல், தும்மல் மூலமும் பன்றி காய்ச்சல் நோய்க்கிருமி ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் என்பதால், நோய் பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து விலகி இருங்கள். உடல் ரீதியாகவும் தொடர்பு வைத்துக் கொள்ளாதீர்கள் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

English summary
The deadly swine flu has returned to haunt us, deaths have been reported from across the country. There is an increase in new cases from across the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X