For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் புதிய நிலையம்: சென்னை வந்த ஜெர்மனி ஆய்வுக்குழு

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் புதிய நிலையத்தை நிறுவுவது குறித்து ஜெர்மனியைச் சேர்ந்த ஆய்வுக்குழு தமிழகம் வந்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

Yet another desalination plant: German team reaches Chennai

சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு மிக வேகமாக குறைந்து வருவதால், நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தினை நிறுவுவதற்கு தேவையான துரித நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையத்தினை நிறுவுவதற்கு தேவையான நிதி உதவியினை வழங்குவதற்கான பரிந்துரையினை மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை ஜெர்மன் அரசு நிதி நிறுவனத்திற்கு (கே.எப்.டபிள்யூ.) ஏற்கனவே அனுப்பி இருந்தது.

நெம்மேலியில் நிறுவப்படவுள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கான விரிவான திட்ட அறிக்கை ரூ.1,371 கோடியே 86 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தினை பணி ஆணை வழங்கப்பட்ட நாளில் இருந்து 30 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தினை நிறுவுவதற்கு தேவையான நிதி ஆதாரங்களை இறுதி செய்வதற்காக ஜெர்மன் அரசு நிதி நிறுவன ஆய்வுக் குழுவை சேர்ந்த திட்ட மேலாளர் வெரினா வில்லாண்ட், சீனியர் செக்டார் நிபுணர் அனிர்பான் ருண்டு, தொழில்நுட்ப நிபுணர் கிளாஸ் மெர்டஸ், சோசியல் நிபுணர் ஹெய்டர் அப்பாஸ் ஆகியோர் அடங்கிய நால்வர் குழு நான்கு நாள் பயணமாக நேற்று சென்னை வந்தனர்.

இந்த குழுவினர் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் பி.சந்திர மோகனை, அவரது அலுவலகத்தில் சந்தித்து, நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தினை நிறுவுவதற்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் குறித்து கலந்துரையாடினர்.

பின்னர் ஜெர்மனி ஆய்வுக்குழுவினர் நெம்மேலியில் தற்போது இயங்கி வரும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டதோடு, புதிதாக நிறுவப்பட இருக்கும் 150 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தினையும் பார்வையிட்டார்கள்.

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் பயன்பாட்டிற்கு வந்த உடன் சென்னை மாநகரின் மத்திய மற்றும் தென் சென்னை பகுதியில் அமைந்துள்ள சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்திருக்கும் தகவல் தொழில்நுட்ப மையங்கள், தொழிற்சாலைகள், வேளச்சேரி, மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், புனித தோமையார் மலைப்பகுதி, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்க்கட்டளை, மயிலாப்பூர், பள்ளிப்பட்டு, ஆலந்தூர் பகுதிகளில் வசிக்கும் 9 லட்சம் மக்கள் இந்த நிலையத்தில் இருந்து பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரால் பயன்பெறுவார்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
A team from Germany has reached Chennai on tuesday and met officials in connection with the new desalination plant in Nemmeli.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X