• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விஜயகாந்த் அரசியலுக்கு வரலாமா?

By Staff
|

நடிகர் விஜயகாந்த்தும் அரசியல்வாதிகளின் கூட்டங்கள் போலவே கூட்டங்கள் போட ஆரம்பித்துவிட்டார். இவரது கூட்டங்களில்அரசியல் கூட்டங்கள் போலவே அனைத்து அம்சங்களும் உண்டு. கூட்டங்களில் பேசும்போது, ஆசை வெட்கம் அறியாதுஎன்பதுபோல, நமது தலைவர் இரண்டாயிரத்து ஆறில் ஆட்சியைப் பிடிப்பார் என்று சூளுரைக்கின்றார்கள் அவரது ரசிகர்கள்.ஆக, நடிகர் விஜயகாந்த் அடிமனதில் உள்ள முதல்வர் ஆசை அம்பலத்திற்கு வந்துள்ளது.

Vijayakanth in public meetingநடிகர் விஜயகாந்த் புகழ்பாடும் வீடியோ சிடிகள் வெளியிடப்பட்டு, தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் போடப்படுகின்றன. அவ்வீடியோவில் எம்.ஜி.ஆரையும் இவரையும் இணைத்து விளம்பரங்கள் வேறு. இனி என்ன? புதிய கட்சி அறிவிப்புவெளியிடவேண்டியதுதான் பாக்கி.

ரஜினிக்கு வராத துணிச்சல் விஜயகாந்த்துக்கு எப்படி வந்தது? ரஜினியை விட விஜயகாந்த்க்கு மக்கள் செல்வாக்கு அதிகமா? இக்கேள்விகளுக்கு விட காண்பதற்கு முன்பு அரசியலில் ஈடுபட்ட சினிமா நடிகர்களைச் சற்றுக் கண்ணோட்டமிடுவோம்.

தமிழக அரசியலில் களம் கண்டவர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், டி.ராஜேந்தர், பாக்கியராஜ் என்று பலர்.இப்பட்டியலைக் கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை புலப்படும். எம்.ஜி.ஆரைத் தவிர வேறு எவரும் சிவாஜி உள்பட அரசியலில்எடுபடவில்லை என்பதே ஆகும்.

ஜெயலலிதா அரசியலில் களம் இறங்கும்போது அவர் ஒரு முன்ளாள் நடிகைதான். அதுவும் அவருக்கு என்று தனிப்பட்டசெல்வாக்கு ஏதுமில்லை என்பது அவர் தனியாக அதிமுக(ஜெ) அமைத்து போட்டியிட்டபோது ஏற்பட்ட படுதோல்வியும்,பர்கூரில் தனிப்பட்ட முறையில் தோல்வியடைந்தபோதும் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். எம்.ஜி.ஆரின் செல்வாக்கினால்தான்இன்றுவரை ஜெயலலிதாவின் அரசியல்வண்டி ஓடிக்கொண்டுள்ளது.

கலைஞரை எடுத்துக்கொண்டால் அரசியலிருந்துதான் அவர் சினிமாவுக்கு வந்தார். சினிமாவிலிருந்து அரசியலுக்குச் சென்றவர்இல்லை என்ற உண்மையைப் புரிந்து கொள்ளவேண்டும்.

சரி, மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்று எம்.ஜி.ஆர் வெற்றி பெறவில்லையா? அதேபோல் நானும் வெற்றிக்கொடிநாட்டுவேன் என்று விஜயகாந்த் நினைப்பாரானால் அது புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாகத்தான்முடியும்.

அன்றைய சூழலில் மக்கள் சினிமா கதாநாயகர்களைப் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. ஒருகாலத்தில் எட்டாக்கனியாக இருந்த சினிமா. இப்போது தகவல் தொடர்புச்சாதனங்களால் கனவுத்தொழிற்சாலையின் அத்தனைதொழில்நுணுக்கங்ளும் சாதாரண பாமரனுக்குக் கூட அத்துப்படியாகியுள்ள சூழ்நிலை. இதை நடிகர்கள் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.

ஆண்டிப்பட்டியும் அருப்புக்கோட்டையும் கூட முன்னேறி விட்டன. ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா வெற்றி பெறுவது கூடமுக்குலத்தோர் மற்றும் அதிமுக வாக்குவங்கியால் மட்டுமே. சினிமா கவர்ச்சியினால் அல்ல. சென்ற நாடாளுமன்றத்தேர்தலில்திமுக சார்பில் போட்டியிட்ட நடிகர் சரத்குமாரின் தோல்வியையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

அந்தக் காலத்தில் சினிமா கலைஞர்களுக்கு இருந்த அந்த மாயை இப்போது இல்லை என்பதே எதார்த்தமான உண்மை. அப்படிஎன்றால் இன்றும் நடிகர் நடிகைகளைப் பார்க்க பெரும் திரளான கூட்டம் திரளுகின்றதே எப்படி?

இதற்கு எளிதான விளக்கம் கொடுக்கலாம். ஒரு சர்க்கஸ் கம்பெனி சர்க்கஸ் நடத்தும்போது அதில் கோமாளிகள் வேடிக்கைகாட்டுவார்கள். மறுநாள் சர்க்கஸ் முடிந்தபின் அக்கோமாளிகள் கடைவீதியிலோ அல்லது வெளியிடங்களில் செல்லும்போதுஅவர்களைச் சுற்றிப் பெருங்கூட்டம் காணப்படும். உடனே அவர்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு என்றுகூறமுடியுமா? கோமாளிகளுடன் நான் நடிகர்களை ஒப்பிட்டுப் பேசவில்லை. ஒரு எடுத்துக்காட்டுக்குத்தான் கூறினேன்.

அதாவது, நம் மக்கள் தங்களைவிட யாராவது சற்று வித்தியாசமாக எது செய்தாலும் கூட்டம் போட்டுவிடுவார்கள். உடனேஅதைக் கண்டு தப்புக்கணக்குப் போட்டுவிடக்கூடாது.

அப்படித் தப்புக்கணக்குப் போட்டுத் தோல்வியைத் தழுவியர்கள் திரையுலகில் அதிகம். அந்தப்பட்டியலில் விஜயகாந்த் பெயரும்இடம் பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில், நடிகர் விஜயகாந்தின் சிந்தனைக்குச் சில கருத்துக்களை முன் வைக்கின்றேன். திரையுலகில் நீங்கள் சுறுசுறுப்பாகப்பணியாற்றிய காலங்களில் வராத இந்த நினைப்பு அதாவது அரசியலில் ஈடுபட்டு பதவியைப் பிடித்து பொதுச்சேவை செய்யவேண்டும் என்ற இந்த நினைப்பு திரையுலகில் ஆடி அடங்கும் போது உருவாகியதேன்?

தற்போது அரசியலில் இல்லாமல்தானே மக்கள்சேவை செய்து வருகின்றீர்கள் அதையே தொடரலாமே!.

அது என்னமோ தெரியவில்லை.. வயது ஆகி சினிமாவிலிருந்து ரிட்டையர் ஆகும்போதுதான் உங்களைப் போன்றவர்களுக்குப்பதவியைப் பிடித்து மக்கள் சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் பீறிட்டு எழுகின்றது.

அப்படியே பார்த்தாலும் நீங்கள் மற்ற நடிகர்களை விட மிகுந்த செல்வாக்கு மிக்கவரா? உண்மையில், ரஜினிதான், சிறுவர்கள்,இளைஞர்கள், பெண்கள் பெரியவர்கள் என்று அனைவரின் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரின் குரலே சென்றதேர்தலில் அடிபாதளாத்திற்குச் சென்றுவிட்டநிலையில் உங்களைத் தூண்டிவிட்டுப் பாதாளத்தில் வீழ்த்தி விடநினைப்பவர்களிடம் நீங்கள் சற்று எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.

நடிகர் விஜயகாந்த்தும் தன்னைச் சுற்றியுள்ள அடிவருடிகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு உண்மையான நிலையை உணர்ந்து கொள்ளமுன்வர வேண்டும். கமல்ஹாசனைவிட நீங்கள் அதிகம் நற்பணி செய்வதாக எண்ணுகிறீர்களா? அவர்களுக்கு எல்லாம் வராதபதவி ஆசை உங்களுக்கு ஏன்?

நடிகர் திலகம் சிவாஜியை விடவா உங்களுக்கெல்லாம் செல்வாக்கு? உலகின் எந்த மூலையில் உள்ள எந்தத் தமிழனும் அறிந்த,நேசித்த ஒப்பற்ற நடிகர் அவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு இணையாகச் செல்வாக்குப் பெற்றவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பொதுக்கூட்டங்களிலும் மக்களின் கட்டுக்கடங்காத கூட்டம்தான் காணப்படும். அவர் த.மு.மு.என்ற தனிக்கட்சி ஆரம்பித்து 1989-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக(ஜா) அணியுடன் கூட்டணி அமைத்து அவரின்சொந்த மாவட்டமான தஞ்சையில் உள்ள திருவையாறு என்ற தொகுதியில் போட்டியிட்டார்.

Vijayakanth in public meetingஅவரை எதிர்த்து திமுக சார்பாக நின்றவர் அப்போதுதான் முதன்முதலில் தேர்தல் களத்துக்கு வந்த ஒரு இளைஞர். திமுகதலைவர்கள் கூட சிவாஜிக்காக அதிதீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என்று அப்போது பேசிக்கொண்டார்கள். சிவாஜிவாக்குக் கேட்டு கிராமம் கிராமமாகச் சென்றார். செல்லுமிடங்கள் எல்லாம் அளவுக்கு மீறியக் கூட்டம். இறுதியில் முடிவு என்னதெரியுமா? நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தோல்வியைத் தழுவினார்.

அப்போ, நடிகர் திலகம் ஒரு பேட்டியில் கூறியதை நினைவுப்படுத்துகின்றேன். "நான் ஓட்டு கேட்டு போறப்ப என்னச்சுற்றியிருந்தவர்கள் எல்லாம், உனக்குத்தான் வெற்றி, உனக்குத்தான் வெற்றின்னு சொல்லிச்சொல்லி உண்மை நிலவரத்தைமறைச்சுட்டாங்க... ஆனா எனக்கு தேர்தல் நேரத்தில் ஒரு டீக்கடை தம்பி அந்த உண்மையை அப்பவே புரியவச்சுட்டார்" என்றார்.

தேர்தல் சமயத்தில், ஒரு மாலைப்பொழுதில் நடிகர் திலகம் வாக்கு கேட்டுச் சென்ற நேரத்தில் ஒரு கிராமத்திற்குச் செல்லும் வழியில்சாலையோர டீக்கடையில் டீ குடித்துவிட்டு, அந்தக் கடைக்காரரைப் பார்த்து, என்னப்பா வெற்றி வாய்ப்பு எல்லாம் எப்படிஇருக்குன்னு கேட்டு இருக்கிறார்.

அதற்கு அந்தக் கடைக்காரர், ஐயா.. நீங்கதான் அய்யா ஜெயிக்கனும்..ஆனா.. உண்மை நிலவரம் அப்படி இல்லை அய்யா என்றுகண்கலங்கிக் கூறியிருக்கிறார்.

அப்போதே அரசியலில் சுற்றியிருப்பவர்களை நம்பக்கூடாது என்ற உண்மையை தான் உணர்ந்துகொண்டதாக சிவாஜி பின்பு ஒருபேட்டியில் கூறியிருந்தார். சிவாஜிக்கே இந்த நிலை என்றால் மற்ற நடிகர்களுக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டாமா?

நடிகர் விஜயகாந்த் புதிய கட்சி அமைத்தால் அதன் செல்வாக்கு எப்படி இருக்கும்? திருமாவளவன், கிருஷ்ணசாமி கட்சிகள் போலதொகுதிக்கு இரண்டாயிரம், மூன்றாயிரம் ஓட்டுகள் மட்டுமே பெறும் கட்சியாகவே இருக்கும். அல்லது வைகோ கட்சி, டாக்டர்ராமதாஸ் கட்சி போல ஒரு சில தொகுதிகளில் மட்டும் கொஞ்சம் கூடுதலாக ஐந்தாயிரத்திலிருந்து பத்தாயிரம் வாக்குகள்கிடைக்கலாம்.

இவ்வோட்டுகளும் அதிமுக ஓட்டு வங்கியிலிருந்து உருவிய ஓட்டாகவே இருக்கும். மற்றப்படி எந்தவிதமான தாக்கத்தையும்உருவாக்க இயலாது.

ஆட்சி, பதவி என்ற கனவை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு அண்ணண், அப்பா, தாத்தா போன்ற கதாப்பாத்திரங்களை ஏற்றுநடித்துவிட்டு ஓய்வு காலத்தை மகிழ்ச்சியாகக் கழிப்பதே "முதிய" நடிகர்களுக்கு ஏற்ற ஒன்று. சினிமாவினால் ஏற்படும் கவர்ச்சியைமூலதனமாகப் போட்டு அரசியலில் இறங்கி வெற்றி பெறுவது என்பது இக்காலத்தில் எடுபடாது என்றே தோன்றுகின்றது.

- அக்னிப்புத்திரன் (agniputhiran@yahoo.com)

இவரது முந்தைய படைப்பு:

1. வேகமா? விவேகமா?

2. எட்டாத பழத்துக்குக் கொட்டாவி!

3. ஞானி!

4. டுபாக்கூர் விருதா? தேவையற்ற ஒரு சர்ச்சை!

5. கனிந்து வரும் காலம்

6. நாடகம் நடக்குது நாட்டிலே!

7. தமிழ்தான் தமிழருக்கு முகவரி!

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X