• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழில் நவீன கவிதைகள் 6

By Staff
|

(இக் கட்டுரை ராயர் காபி கிளப் யாகூ குழுமத்தில் வெளியானது.RaayarKaapiKlub-subscribe@yahoogroups.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் இக் குழுமத்தில்அண்மையில் வெளியான கருத்து விவாதங்களை உங்களது மின்னஞ்சல் முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்)

பாரதி உருவாக்கிய பெண்ணியக் கருத்துகளை முன்னெடுத்துச் செல்ல எந்த பெண்கவிஞரும் அதன் பின்னர்முன்வரவில்லை என்று கவிதை விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

எண்பதுகளில் இலங்கைத் தமிழ் பெண் கவிஞர்கள் இன ஒடுக்குமுறைக்கு எதிராகத் தீவிரமாய்எழுத்தொடங்கியபோதுகூட அதன் தாக்கம் தமிழக பெண்கவிஞர்களிடம் இல்லாமல் போனது ஆச்சரியமேஎன்றும் கூறப்படுகிறது. தொண்ணூறுகளில் ஒரே நேரத்தில் ஒரு கொத்துப் பெண் கவிஞர்கள் தோன்றி தீவிரமாகஎழுதத்தொடங்கினார்கள். அவர்களில் பலர், உடல் சார்ந்தும் மனம் சார்ந்தும் சக ஆணின் ஆதிக்க உணர்வின்மீதான வெறுப்பை உமிழும் கவிதைகளை எழுதிக் குவிக்கிறார்கள். சல்மா, மாலதி மைத்திரி, உமா மகேஸ்வரி,அ.வெண்ணிலா, கனிமொழி, குட்டி ரேவதி என நீளும் பட்டியலில் மாலதி மைத்திரி, தாய்-சேய் கவிதைகள் அதிகம்எழுதுகிறார். ஆணாதிக்கத்துக்கு எதிரான இவரது குரலும் ஓங்கி ஒலிக்கிறது.

-------------------------

Womanவீடுகளால் ஆன இனம்

---------------------

ஊரின் அனைத்து வீடுகளும்

நடப்பட்ட பெண்களென நிற்கின்றன

சாளரங்கள் கண்களாகவும் வாசல் யோனியாகவும்

யாரோ ஒரு ஆணிற்காக

ஆயுள் முழுவதும் காத்துக்கிடக்கின்றன

வயதுக்கேற்றபடி தன் உறவுகளுக்காக

கொலைகாரன் திருடன்

குடிகாரன் துரோகி மோசடிக்காரன்

ஊழல் செய்பவன் ஏமாற்றுபவன் விபச்சாரகன்

கொடுங்கோலன் காமவெறியன்

சாதிவெறியன் மதவெறியன் இனவெறியன்

இவர்கள் யாரையும் வீடு கைவிடுவதில்லை

அவரவருக்கான வீடு எப்போதும் இருக்கிறது

உடல் தொட்டிலாகவும் மார்பாகவும் இருந்து

உயிரும் உணவும் அளித்து

அரவணைத்துப் பாதுகாக்கப்படும் ஆண் பந்தங்கள்

ஆண்கள் வீட்டைப் புணர்வதன் மூலம்

பூமியை வளர்க்கிறார்கள்

பெண்களையல்ல

காலத்தை ஆளும் பெண்கள் வீடாவதில்லை.

--- மாலதி மைத்திரி.

வீடு பெண்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கிறது என்ற கருத்தில் ஏராளமாக கவிதைகள் எழுதப்பட்டுவிட்டன.ஆனால் மாலதி மைத்திரி கையாளும் கவிதை மொழி, ஏற்கனவே எழுதப்பட்டு தேய்ந்து போன சொற்களைப்புதுப்பிக்க முனைகிறது.

வீடுகளையெல்லாம் பெண்களாக உருவகப்படுத்தி பெண் இனத்தை வீடுகளின் இனம் என்கிறார்.

ஆண் எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும் அவனுடைய செயல்களுக்கு வாய்மூடி இருக்கும்பெண்ணொருத்தி அவனுக்கென்று இருக்கத்தான் செய்கிறாள் என்கிறார் கவிஞர். இவர்கள் யாரையும் வீடுகைவிடுவதில்லை எனும்போது இவர்கள் (ஆண்கள்) கைவிட்ட வீடுகள் (பெண்கள்) உண்டு என்னும் மறைமுகச்செய்தியும் நமக்கு சொல்லாமல் சொல்லப்படுகிறது. காலத்தை ஆளும் பெண்கள் வீடாவதில்லை என்பதை வீடாகஇருக்கும் பெண்கள் காலத்தை ஆள முடிவதில்லை என்றும் எடுத்துக்கொள்ளலாமா? எதையும் சாதிக்கவேண்டுமென்றால் வீடாக இருக்காதீர்கள் என்று பெண்களுக்கு அறிவுறுத்தும் கலகக் குரலாக ஒலிக்கிறதோகடைசிவரிகள்? கவியரங்கக் கவிதைகளில், பெண்களின் இலக்கியப் படைப்புகளில் கேட்டுப் பழக்கமான கலகக்குரல்தான் என்றாலும் மாலதி மைத்திரி எழுதிச் செல்லும் கசப்பு உணர்ச்சியின் அப்பட்டமானவெளிப்பாட்டிற்காகவும் நயமான கவி மொழிக்காகவும் மேற்கண்ட கவிதையை ரசிக்கலாம்.

---------------------

எல்லா இலக்கியப் பத்திரிகைகளிலும் எழுதிக்கொண்டிருக்கும் மாலதி மைத்திரி பாண்டிச்சேரிக்காரர். பெண்ணியம்சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டுவருகிறார். கவிதைகள் தவிர சிறுகதைகளும் எழுதியுள்ளதாகத் தெரிகிறது.சங்கராபரணி என்ற முதல் கவிதைத் தொகுப்பு காலச்சுவடு வெளியீடாக வெளிவந்து பரவலான கவனத்தைப்பெற்றது.- எஸ்.பாபு(babujee_s@yahoo.com)

இவரது முந்தைய படைப்பு:

தமிழில் நவீன கவிதைகள் 1

தமிழில் நவீன கவிதைகள் 2

தமிழில் நவீன கவிதைகள் 3

தமிழில் நவீன கவிதைகள் 4

தமிழில் நவீன கவிதைகள் 5

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X