For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கந்தகக் கிடங்கினிலே

By Staff
Google Oneindia Tamil News

"சாப்பிட்டுக் குளிக்கிறேம்" பான். சாப்பிட்டு, தட்லயே கையைக் கழுவி எந்திரிச்சு சொதுக்குன்னு திரும்ப அந்த இடத்திலேயே படுத்திருவான். படுத்தவுடனேயே அப்பிடித் தூங்கிப் போயிருவான்.பூமாலைக்குப் பாவமாயிருக்கும்.

இன்னிக்கு .. சாமத்துல பாலகிட்னன் எந்திருச்சி, "யம்மா, தம்பிக்கு எப்படி இருக்கு ..?" ன்னான்.

"என்ன அப்பச்சி .. தூக்கம் வல்லயா? தூங்கு செல்லம் ..! ஏசெண்டையா வந்த பெறகு எழுப்பி விடுகிறேன் .." ன்னாள்.

"தம்பிக்கு எப்படிம்மா இருக்கு ..?"

"காச்ச ரொம்ப அடிக்கிய்யா .. " ன்னு சொல்லிக்கிட்டே பூமாலை லாந்தலைத் தூண்டி விட்டாள்.

முத்துக் கிட்னன் திக்கு திக்குன்னு முழிச்சிக்கிட்டு மூச்சு விட்டுக்கிட்டிருந்தான் .. தம்பி நெஞ்சுல பெறங்கைய வச்சுத் தொட்டுப் பார்த்தான். காச்ச போட்டுக் கொதிச்சது.

"தம்பிப் பாப்பாவ இன்னிக்கு சாத்தூரு பெரிய டாக்டர்ட்ட தூக்கிட்டுப் போறோம்ல .. பெரிய்ய டாக்டரு நல்ல மாத்திரையாக் குடுப்பாரு .. தம்பிப் பாப்பா அதை முழுங்கின ஒடனே காச்சல் விட்ரும்.திரும்ப வராது .."

அண்ணனைப் பாத்து தம்பி சிரிச்சான். அம்மா கலங்கினாள்.

தெனமும் அண்ணன் வந்தவுடனே முத்துக் கிட்னன் தாவி ஓடுவான். தம்பியத் தூக்கி அணைச்சிக்கிட்டுத் தூக்குச் சட்டிக்குள்ளேருந்து ரொட்டியோ .. பிஸ்கோத்தோ .. வாழப்பழமோ எடுத்துக்குடுப்பான்.

வேலைக்குப் போகும்போது பாலகிட்னனுக்கு மதியம் வாங்கித் திங்கறதுன்னு அம்பது காசு குடுத்து விடுவாள். அதில் தம்பிக்கும் வாங்கிட்டு வந்துருவான்.

"எங் கருத்தான தங்கம்!" அவள் உயிரின் ஈரம் கண்களில் கோர்த்தது.

"ம்மா .. பூவா .. ம்மா .. பூவா .. " சிணுங்கின முத்துக்கிட்னன முந்திச் சீலையால நல்லா மூடிக்கிட்டு .. டீக்கடைக்கு தூக்கிட்டுப் போயி ஒரு ரொட்டி வாங்கி காபியிலே நனைச்சிக் கொடுத்தாள்.

முத்துக்கிட்னன் ஏப்பம் போட்டான். ஒடம்பெல்லாம் வேர்த்தது. முந்தியால நல்லாத் தொடச்சாள். காச்சல் துப்புரவாயில்லை. அஜன் மொகத்தில் ஒரு புதுத் தெளிச்சி தெரிஞ்சது.இப்பிடித்தான் அஞ்சு நாளாயிருக்கு .. ராத்திரியெல்லாம் காச்சல் பொறியும். விடிஞ்சா சரியாப் போகும் .. காச்ச வில்லை வாங்கி நாலு நாள் குடுத்துப் பார்த்தாள். கேக்கல.

டவுன்ல கொமரிப் புள்ளைக கூட்டம் கூட்டமா சாமி கும்புட்டுக் கும்மாளமும் சிரிப்பாணியுமாப் போகுதுக .. அவளுகளுக்குப் பின்னால இளவட்டப் பயக .. பக்தி கூடிப் போச்சு ன்னு மனசுக்குள்ளநெனைக்கையிலேயே பூமாலைக்குச் சிரிப்பு வந்திருச்சு.

ஆடி மாதத் திருவிழா, பங்கினிப் பொங்கலுக்கு இப்படித் தான் இவுக ஊர்லேயும் ..

அடேயப்பா .. இனிமே அந்தக் காலம் வருமா ..? காத்தியலுக்கு மச்சான் கொழுந்தனத் தேடி அவங்க தலையில ஒட்டுப் பில்லு தேய்க்கறது என்ன.. அவங்க இவளுகளைத் தேடி ஒளிஞ்சு ஒளிஞ்சு வந்துதலையில அதக்கிட்டு ஓடுகிறதென்ன ..

பொங்கல், சித்திரப் பெறப்புக்கு மஞ்ச நீராடறது என்ன .. எல்லாம் போச்சு. சின்ன வெளயாட்டா வெளையாடுவோம் ..? மழைக் காலத்துக்கு ஒரு வெளயாட்டு , பனிக் காலத்துக்கு ஒருவெளயாட்டு, கடுங்கோடை காலத்துக்கு ஒரு வெளயாட்டு.

பல்லாங்குழி, தட்டாங்கல்லு, தாயம், மதியம்- தும்பி- நொண்டியிலே டொப்பி, யானைக் காது, சரியா .. தப்பா, பூசணிக்காய், தவ்வாலடி தவ்வாலு, சோத்துப் பான, பச்சத்தவள்,கொடுக்குப்புடுச்சுன்னு .. பொம்பளப் புள்ளக வெளையாடுவாங்க.

ஆம்பளப் பயக தெள்ளு, கோலி, கிட்டி, எறி பந்து, கால் தாண்டி, நின்னவன் நின்னவன் கால்வாரி, பச்சக் குதிர, கிளித் தட்டு, சடுகுடு, வெடி சூட்டு, காக்கா குஞ்சுன்னு வெளையாடுவாங்க.

சோத்துப்பான வெளயாட்ல பானையத் தூக்கவாரவங்க பாட்டிலேயே மிரட்டுவாங்க .. கெஞ்சுவாங்க. அதுக்குப் பானைகளாக ஒக்காந்திருக்கிறவங்க பாட்லேயே பதில் சொல்லுவாங்க -

"அடுப்பு மேலே ஏறுவேன் ..! "

"துடுப்பக் கொண்டி .. சாத்துவேன்! "

"பல்லு .. வலிக்குது..! "

"நெல்லக் கொறிச்சுக்கோ! "

கிழடு கெட்டைகயெல்லாம் புள்ளைக வெளயாடறதில மொறம மாறாமயிருக்க வந்து சொல்லிக் குடுத்து வழிகாட்டுவாங்க ..

இந்த இருபது வருஷத்தில கொஞ்சங் கொஞ்சமா அத்தன விளையாட்டு .. பாட்டு .. கதையெல்லாம் கொறஞ்சு இன்னைக்கு ஒண்ணுமில்லை.

பயராபீஸ்காரனும், தீப்பெட்டி ஆபிஸ்காரனும் பிள்ளைகள மட்டுமா அள்ளிப் போட்டுக்கிட்டுப் போனாங்க ..? கூடவே இந்த ஊர் வெளயாட்டையும், சிரிப்பையும், அழகையும் அள்ளிட்டுப்போயிட்டாங்களே ..!

ஞாயித்துக் கிழமை கூட .. ஒரு கடுகுஞ்சி கூட வெளையாடப் போகாது .. சின்னதுக அம்புட்டும் ஆறு நாள் வேலை அலுப்பையும் சேத்துத் தூங்குங்க .. பெரிய பொம்பளப் புள்ளைக ஆறுநாள் அழுக்குகளைக்கொண்டுட்டுப் போயி கம்மாயில போட்டு அலசுங்க.

முன்னயெல்லாம் இடுப்புல வெறும் அண்ணாக்கயற மட்டும் கட்டிகிட்டுப் பயக ஊருக்குள்ள திரியும்போது கூட, பாக்க வாழக் கண்ணோட்டம் அழகாயிருக்கும். இப்ப மூஞ்சியில அருளே இல்லை.

கடைக்காரன் சாவியோட வந்தான். மூணு பலகைக் கதவை மட்டும் தெறந்துக்கிட்டு உள்ள போயி வெளியிலே எட்டிப் பார்த்து மெதுவா .. "என்னம்மா இங்கே ஒக்காந்திருக்கே ..?" ன்னான்.

"புள்ளைக்கு ஒடம்புக்குச் சவுரியமில்ல அண்ணாச்சி. ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு வந்தேன் .. " ன்னாள்.

"பனியடிக்கிலே .. உள்ளே வேண்ணா வாம்மா .."

அசிங்கத்ல மிதிச்சிட்ட மாதரியிருந்திச்சு- அவன் கண்ணும், பேச்சும். மகன வாரிச் சுருட்டி மார்போட அணைச்சிக்கிட்டு பொடு பொடுன்னு நடந்தாள். "எச்சிக்கல நாயி .. தூ.."

பூமாலை பஸ் ஸ்டாண்டுக்கு வந்து முத்துக் கிட்னனை கீழே இறக்கி ஒக்கார வச்சுட்டுப் போறவார சனங்களப் பார்த்துக் கிட்டிருந்தாள்.

ஒரு போலீஸ் கூட்டம் துப்பாக்கிகளைச் செமந்துக்கிட்டு பஸ்ல ஏறினது. அவங்களைப் பாத்ததும் பந்தல்குடியில போலீஸாயிருக்கிற பூமாலை அண்ணன் பொண்டாட்டி போன லீவுக்கு மகளையும் மகனயும்ஊருக்குக் கூட்டிட்டு வந்திருந்தது ஞாபகத்துக்கு வந்தது.

மறு ஞாயித்துக்கெழம அவுகளப் பாத்துட்டு வாரேன்னு போன பாலகிட்னன் போன மாயந் தெரியல ஒடனே சோம்பிப் போயி திரும்பி வந்துட்டான். என்ன கேட்டாலும் பதில் ஒண்ணுஞ் சரியாச்சொல்லாம கால் சட்டைப் பையிலேர்ந்து பிஸ்கத்து பாக்கெட்டை எடுத்துக் கீழே போட்டுட்டு .. விறுவிறுன்னு பாய எடுத்து விரிச்சுச் சொதுக்குன்னு புள்ள படுத்திருச்சு ..

பூமாலை ஓடிப் போயி "யப்பச்சி .. என்னப்பச்சி?"ன்னு தூக்கி ஆதரவா மடியிலே போட்டுக்கிட்டுக் கேட்டாள்.

"வாசல்ல போயி நின்னு கும்புடுதேன்த்தே ன்னேன் அத்தே ஒரு மாதரிப் பாத்தாங்க .. பிஸ்கத்த கையில எடுத்திக்கிட்டு அவங்க பக்கத்தில போனப்போ மூச்சுப் பிடிச்சுக்கிட்டு மொகத்த ஒரு மாதிரிகோணல் காட்டி "ஓ.."ன்னு ஓங்காரிச்சாங்க"ன்னான்.

பூமாலைக்குக் கொடலப் புடுங்கிப் போட்ட மாதரியிருந்துச்சு .. உடனே போயி போலிஸ்காரன் பொண்டாட்டி கூட அப்டீச் சண்டை போட்டாள்.

அன்னிக்கு ராத்திரிப் பூரா பூமாலைக்குத் தூக்கமே வரல. சாமத்ல எந்திரிச்சு பாலகிட்னன் பக்கத்துல படுத்து அவன் மேல மோந்து பாத்தாள்.

கொஞ்சங் கூட தீப்பெட்டி ஆபீஸ் கந்தக வாடையோ .. மெழுகு வாடையோ வீசல. அவ குடுத்த அதப்பால் வாசந்தான் "கம்"னு அடிச்சது. " ஏ .. தெய்வமே எனக்குத் தான் இப்படித் தெரியுதா? ன்னுபாலகிட்னன் கால்லேர்ந்து உச்சி வரை மோந்து மோந்து பாத்தாள் .. எந்த வீச்சமும் இல்லே "கம்"னு அதப்பால் வாசந்தான் அடிச்சது.

புள்ளயப் படிக்க வைக்காமப் போய்ட்டமேன்ற வருத்தம் எப்பவும் அவ மனச அரிச்சிக்கிட்டேதான் இருக்கு.

"மேல வீட்டு காண்ட்ராக்டர் தன் மகன பி.ஏ. படிக்க வச்சு அம்பதாயிரம் குடுத்து வேல வாங்குனாரு. இத்தனைக்கும் அவருக்குக் கட்சிச் செல்வாக்கு ரொம்ப ஜாஸ்தி. நம்மால அந்த அளவுபணங்குடுக்க முடியுமா .. இன்னிக்கு வேல ரேட்டு அம்பதாயிரம்னா, இன்னம் பத்து பதினஞ்சு வருஷங் கழிச்சு எத்தன லட்சமாயிருமோ ..?" ன்னு பூமாலை புருஷன் எடுத்துச் சொன்னான்.

இத விடப் பெரிய கொடுமை, சோலையப்பன் மகங் கொடுமை, பி.ஏ. படிச்சு, பத்து வருஷமா வேலை கெடைக்காததால மருந்து குடிச்சுச் செத்துப் போயிருச்சு. அவங்க அம்மா சொல்லி பைத்தியமாஅலையறா.

மணி எட்டிருக்கும்.. வாலிபப் பையங்க வெத வெதமா சட்ட சூட்டு போட்டுக் கிட்டு திரிஞ்சாங்க .. கொமரிப் புள்ளங்களும் அப்படித்தான். ஆணும், பொண்ணும் விகல்பமே இல்லாம ஒண்ணு, மண்ணுமாகலம்பரச் சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்தது. ரொம்ப அழகாயிருந்தது.

பச்ச மண்ணு .. எஞ் செல்லம் ..! பாலகிட்னன கெந்தக் கெடங்கிலே தள்ளி விட்டுட்டேனே ..! மனதின் ஆழத்திலிருந்து ஏக்கம் குமிழ் விட்டுப் பூமாலையின் கண்களில் பரவியது. கண்ணத்தொடச்சிக்கிட்டாள். இதுகயெல்லாம் காலேஜ் புள்ளைக ..

இவுக ஊருக்கு ரெண்டு மூணு மாத்தைக்கு முன்னால இப்படித்தான் நூத்துக்கணக்கான காலேஜ் புள்ளைக வந்து படிக்காத பெரியவங்களுக்குப் பள்ளிக் கொடம் ஆரம்பிக்க விழா கொண்டாடுனாங்க ..அதில பேசின மொதலாளி மருமகள் மங்கத்தாயம்மாள் நல்ல கொடமானம் குடுத்து விட்டிருச்சு .. "அடேயப்பா! "

இந்த ஊருக்கு முதியோர் கல்வி தேவைதான். ஏன்னா .. படிக்க வேண்டிய அஞ்சு வயசிலேருந்து பதினெட்டு வயசு வரயுள்ள புள்ளைகளையெல்லாம் தீப்பெட்டி ஆபிஸ்காரனும், பயராபீஸ்காரனும் போட்டிபோட்டு அள்ளிட்டுப் போயிடுறான். இருபதுலேர்ந்து அறுபது வரைக்கும் உள்ளவங்க வகுத்துப் பாட்டுக்கே லோ லோன்னு அலையச் சரியாப் போகுது .. அறுபது வயசுக்கு மேல நடமாட முடியாது.

கெழடு கெட்டைகளான பெறகாவது இந்த ஊர் ஜனங்க நாலு எழுத்து அறிஞ்சு ஒலகத்த தெரிஞ்சிக்கிட்டு நல்லபடியா சாகட்டுமேங்கற பெருந்தன்மையில நீங்க இங்க ஒரு முதியோர் கல்வி மையம்துவக்கறதில எங்களுக்கு ரொம்ப சந்தோஷந்தான் .. இப்படி அந்தத் தாயி பேசிட்டு இறங்கிட்டாங்க.

ஆத்தாடீ .. காலேஜ் பொண்ணுங்களும், பையங்களும் கை தட்னதும், சிரிச்சதும் ..!

எட்டரை மணிக்கு பஸ் ஸ்டாண்டிலேர்ந்து கிளம்பும்போது பூமாலைக்கு மனசுக்குள்ள சங்கடமாத்தான் இருந்தது. இவள் புருஷன் வெவசாய வேலை எதுவுமில்லாததால கார்த்திகை, மார்கழி ரெண்டு மாசம்தேனீப் பக்கம் போயி வேல செஞ்சுட்டு வாரேன்னு பாலகிட்னன் கணக்கில் நூறு ரூபாய அட்வான்ஸ் வாங்கிட்டுப் போனான். அதுல வாரம் அஞ்சு ரூபா வீதம் முப்பத்துஞ்சு ரூபா கழிஞ்சிருக்கு.

இப்ப அம்பது ரூபா அட்வான்ஸ் கேக்கணும். மொதலாளி இழுத்தடிச்சு கடைசில அந்த முப்பத்தஞ்சு ரூபாயக் கொடுப்பாரு. அத வாங்கிப் புள்ளக்கு வைத்தியம் பாத்துட்டு ஊருக்குப் போகலாங்கறதுபூமாலையோட நம்பிக்கையான திட்டம்.

தீப்பெட்டி ஆபீஸ் நெருங்கும்போதே நாத்தமடிச்சது. கதவு ஒடஞ்சு கெடக்கற வறட்டு கக்கூஸ்கள் தெரிஞ்சது.

"டம் .. டம்"ன்னு கட்டைகளை அடிச்சு ஒழுங்குபடுத்துற சத்தம் "படார் .. படார்"ன்னு பண்ரோல் தட்டி பேக் பண்ற சத்தம் ..

ஆனா ஆச்சரியம் நூற்றுக்கணக்கான குழந்தைகளை உள்ளே அடைச்சிருந்தாலும் .. அவங்க சத்தம் மட்டும் கொஞ்சம் கூட கேக்கல.

தரை மண்ணும், சுவரெல்லாங் கூட கந்தக நெறத்தில செவந்தும், கரிப்புகை நெறத்தில் கறுத்தும் தெரிஞ்சது.

ஒரே கந்தக, துத்தநாக நாத்தம் ..

பாலகிட்னன் வேல பாக்கற செட்டு வாசல்லே போயி பூமாலை நின்ன ஒடனே .. " யக்கா .. ஒங்க மகன் பாலகிட்னன கணக்குப் புள்ளைய்யா இன்னிக்கு அடிச்சிட்டாரு" ன்னு புள்ளைக சொல்லிச்சு.

பாலகிட்னன் மெதுவா அம்மாட்ட எந்திரிச்சு வந்தான்.

ஏ .. செல்லம் . கணக்குப் பிள்ளை ஒன்ன அடிச்சாரா ?

ஒரு மாதிரி சிரிச்சான். அழுத கண்ண இப்பத்தான் தொடச்சிருக்கிறது தெரிஞ்சது.

"கட்டை அடுக்கும்போதே தூங்கி விழுந்தான்னு கணக்குப் பிள்ளைய்யா சக்கையால் ஓங்கித் தலையிலே அடிச்சிட்டாரு .. இந்நேர வரைக்கும் அழுதுக்கிட்டேதான் இருந்தா"ன்னு புள்ளைக சொன்னாக.

பூமாலைக்குப் படபடப்பு. ஒரு கையால முத்துக்கிட்னன ஏந்தியபடி மறு கையால பாலகிட்னன ஒடம்போட அணைச்சுத் தலையைத் தடவினாள். பக்ண்ன்னது .. கையில பிசுபிசுத்தது. கையத் தூக்கிப்பாத்தாள். கருஞ்செவப்பு .. ரத்தம்! திரும்பவும் தலையைத் தடவினாள். தலையில் பொடப்பு, கணக்குப் புள்ள ரூமுக்கு பாலகிட்னன இழுத்திட்டுப் போனாள். பூமாலை கண்ணீர் மாலையானாள்.

"எங்க வீட்ல அரிசி அளக்கவா அடிச்சேன்? தூங்காம .. வெளயாடாம .. வேலயப் பார்த்தா ஏதோ ஒரு அரை வயிறு கஞ்சியாவது ஊத்துவான் .. இல்லாட்டா நக்கிட்டுப் போக வேண்டியதுதான் .."ஈரமேயில்லாம பேசினான் கணக்குப் புள்ள.

"வேலை செய்யற எடத்தில வேலைதாம்மா செய்யணும் .. செய்யலேன்னா அடிக்கத்தான் செய்வோம் .. எங்களுக்காகவா அடிச்சோம் .. அடியாத மாடு படியாது. அதிகமா எங்கிட்ட எதுவும் பேசாத,வெளியே போ .." ன்னுட்டான்.

பூமாலைக்குக் கொல கொதிச்சது. கண்ணீரும் கம்பலையுமா பாலகிட்னன அணைச்சிக்கிட்டு கொள்ளி முடிவான் .. எட்டு வயசு நெறயாத பச்ச மண்ண இப்படிப் போட்டு மண்டையில அடிச்சு, மண்டையஒடச்சுட்டு .. என்ன திமிராப் பேசறான் பாவீ ..! வா பாலகிட்னா .. மொதலாளியிட்டயே போயி ஞாயம் கேப்போம் .. ன்னு இழுத்தாள்.

பாலகிட்னன் அம்மாவுக்கு எதிர்க்க ஓடி அவ கால்களைக் கட்டிக்கிட்டு ஏங்கி, அவ கத்தப் பாத்துக்கிட்டே .. கண்ணீர் ஒழுக யம்மா .. தம்பிக்கு ஊசி போட மொதலாளி கிட்ட அட்வான்ஸ்கேக்கணும்ல .. ன்னான்.

(விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள கலிங்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த தனுஷ்கோடி இராமசாமி தனது முற்போக்கு இலக்கிய வாழ்வுக்கு மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணிஇடைஞ்சலாக இருந்ததால், அதே பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர். இந்த "கந்தகக் கிடங்கினிலே செய்திக் குறும்படமாக்கப்பட்டுள்ளது.)

நன்றி: கதாயுதங்கள்

தொகுப்பாசிரியர்: - பேராசிரியர் இராஜ முத்திருளாண்டி([email protected])

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X