• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கமணி அவர்களுக்கு

By Staff
|

திரு தங்கமணி அவர்களின் கட்டுரையைக் கண்டேன். அவர் தமிழில் வழக்கம்போல நிகழ்வதுபோலஒட்டுமொத்தமாக வையாமல் பிடித்தது பிடிக்காதது என்று வகைப்படுத்தியமைக்கு நன்றிகளை முதலில்தெரிவித்துக் கொள்கிறேன்.

என் தரப்பில் சில விளக்கங்களைச் சொல்ல விரும்புகிறேன்.

1. கீதையைப்பற்றிபேசும்போது வருணாசிரம தர்மம், சாதி இரண்டுக்குமான வேறுபாட்டை விளக்கியிருந்தேன்.இந்திய சமூகவரலாற்றைப் பார்ப்பவர்கள் இவை இரண்டும் வெவ்வேறான அடிப்படை கொண்டவை என்பதைஎளிதில் காணமுடியும். வருணம் வளர்ந்து சாதியாக ஆனது என்பது எவ்வகையில் பார்த்தாலும் அறிவியல்நோக்குஅல்ல. நான்குவருணம் நாற்பதாயிரம் சாதிகளாக, துணை சாதிகளாகப் பிரிவது சாத்தியமே அல்ல.

சாதி என்பது நம் பழங்குடி மரபில் இருந்து உருவான இனக்குழு அடையாளத்தின் முதிர்ந்த நிலை. நம்பழங்குடிகளை ஆராய்ந்த அத்தனைபேரும் வருணாசிரம தொடர்பே இல்லாதவர்களிடம்கூட சாதி அமைப்பின்அடிப்படைகள் திட்டவட்டமாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். வருணம், செயல் /தொழில் அடிப்படையில்ஆரியர்கள் தங்களைப் பிரித்துக் கொண்டது. வருணாசிரமம் என்பது பின்பு சாதிகளை தொகுக்கும் கருதுகோளாகவிரிவுபடுத்தப்பட்டது. அந்த நான்கு பிரிவினைக்கு உள்ளும் நாலாயிரம் உட்பிரிவுகள் பிரிந்தபடியே செல்வதுஇதனால்தான்.

கீதைபேசுவது குண கரும அடிப்படையிலான வருணாசிரமத்தை. அதுவும் அவரவருக்கு உரிய சுய தர்மத்தைச்சொல்லும்பொருட்டு . பிறப்பு அடிப்படையிலான சாதிப் பிரிவினையை அது ஏற்கவில்லை. இதுவே நான்சொன்னது

Krishanசாதியை வருணாசிரம அடிப்படையில் தொகுக்க முயன்ற அனைவருமே கீதையை அதற்கேற்ப விளக்கியுள்ளனர்.சங்கரர் கூட. அப்படித்தான் விளக்குகிறார். சங்கரரை நிராகரிக்க முடியுமென்றால் காஞ்சி சங்கராச்சாரியார்எம்மாத்திரம்!அவ்விளக்கங்கள் கீதையின் பொருள் ஆகாது. அப்படி ஆகுமென்றால் தொல்காப்பியம், குறள்அனைத்துமே அப்படி விளக்கப்பட்டுள்ளனவே என்று கேட்கிறேன்.

கீதையை விளக்கியவர்கள் சாதிய நோக்குடன் தவறு இழைத்தார்கள் என்று சொல்லப்பட்டால் எனக்கு அதில் என்னஆட்சேபணை? குறளை விளக்கிய பரிமேலழகரும் அதே தவறிழைத்தார். ஆனால் கீதையே அப்படிச் சொல்வதாகதிரும்பத்திரும்பப் பிரச்சாரம் செய்யப்பட்டது. பரிமேலழகரை ஆதாரமாகக் கொண்டு குறள் பார்ப்பனச் சாதிவெறிநூல் என்று நான் பிரச்சாரம் செய்தால் எப்படியோ அப்படித்தானே இதுவும் . இந்த தவறையே நான் சுட்டிக்காட்டினேன். இதில் என்ன குழப்பம் உள்ளது?

2. கீதையை நியாயப்படுத்தும் பொறுப்பு ஏதும் எனக்கு இல்லை. கீதை இறைவனின் வாக்கு என நான்எண்ணவில்லை. அது ஐந்தாம் நூற்றாண்டு ஆக்கம் என்றே எண்ணுகிறேன். அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை.குறிப்பாக கீதை வலியுறுத்தும் மறுபிறவிக் கோட்பாட்டை நான் ஏற்கவில்லை- இதை பலமுறை எழுதியுமுள்ளேன்.அதை வேறு ஒருவகை உள்வெளிச்சத்தின் முதிராவெளிப்பாடாகவே எண்ணுகிறேன். ஆனால் வருணம் குறித்தகீதையின் கோட்பாட்டுக்கு அதன் அமைப்பில் நியாயம் உள்ளது. அது குண கரும அடிபப்டையில் அது அளிக்கும்தீர்வுகளையும் பகுக்கிறது.

கீதை பெண்களை நோக்கும் நோக்கு அக்காலத்துக்கு உரியது. ஏற்கத்தக்கதல்ல. உண்மையில் அக்கால நூல்களில்எதுவுமே பெண்களை சமமான உயிர்களாக நோக்குபவை அல்ல. குறளானாலும் தொல்காப்பியமானாலும்கீதையானாலும் கம்பனானாலும் காளிதாசனானாலும். இன்றைய ஜனநாயக யுக மதிப்பீடுகள் அந்நூல்களின் இந்தநோக்கை நிராகரிக்க கடமைப்பட்டுள்ளன.

3. எல்லா நூலும் எல்லா நம்பிக்கைகளும் எல்லா தத்துவங்களும் எக்காலத்திலும் அடையாள அரசியல்கருவிகளாக ஆகியுள்ளன. அடையால அரசியலில் காய்நகர்த்தும் இரு தரப்புகளையும் சாராமல் நூலைஅதனளவிலேயே பயில்வதே முறை என்றே நான் சொன்னேன். எனக்கு அவர்கள் ஒரு பொருட்டே அல்ல.

ஆனால் நான் அறிந்தவரை ஆர் எஸ் எஸ் கிளைகளில் முன்னிறுத்தும்/ விற்கும் கீதை உரை அவர்களுடையதலைவர்களில் ஒருவரும் பி ஜே பி தேசியப்பொறுப்பில் இருந்தவரும் இந்துமக்கள் வாழ்வுரிமைக்கழகநிறுவனரும் பிறப்பால் நாடாரும் ஆன கேப்டன் எஸ் பி குட்டி ( டி ராமன்) எழுதிய கீதை உரைதான். அதுசங்கராச்சாரியாரின் உரையை கடுமையாக நிராகரித்து கீதையின் நோக்கு சாதிய நோக்கு அல்ல என்று வாதிட்டுநிறுவும் நூல். திரு தங்கமணி செய்வதுபோன்ற எளிமைப்படுத்தல்கள் அரசியலைப்புரிந்துகொள்ளக்கூட உதாவது.

ராமகோபாலன் போன்றவர்கள் எல்லாக்காலத்திலும் எல்லா மதங்களிலும் உள்ளனர். அவர்கள் நோக்கு வெறும்குழு/இன/கும்பல் அடையாள அரசியல்.என் நோக்கில் அடையாளம் சார்ந்து நூல்களை குறுக்கும் எந்நோக்கும்நிராகரிப்புக்கு உரியதே. அதை அந்நூலை வைத்தே நிராகரிக்கவேண்டும்.

4. ஈ வே ரா மீது அவர் கோட்பாடுகளை உருவாக்கவில்லை என்று நான் குறை சொல்லவில்லை. கோட்பாடுகளைஉருவாக்காத பேரறிஞர்கள் பலர் உண்டு. ஈவேரா எவற்றைப்பற்றியெல்லாம் பேசினாரோ அவற்றைப்பற்றிஅறியவும் ஆராயவும் அவர் முனையவில்லை. மேலோட்டமான மனப்பதிவுகளை நம்பி உடனடி முடிவுகளுக்குவந்தவர் அவர். அதன் விளைவுகளை வைத்தே நான் அவரை நிராகரிக்கிறேன்.

வெறும் பிராமண எதிர்ப்பையே எல்லா சாதியச் சீரழிவுகளுக்கும் காரணமாக அவர் வைத்தது தமிழகத்தில் சாதியின்வேர்கள் மேலும் ஆழமாக ஊடுருவ வழிசெய்தது. தமிழக பிற்பட்ட சாதியினரின் சாதிவெறி திராவிட இயக்கத்தால்நீரூற்றி வளர்க்கப்பட்ட ஒன்று. எளிதில் எங்கு திராவிட இயக்கம் வேரூன்றியதோ அங்குதான் தலித்துக்கள் அடக்கிஒடுக்கபடுகிறார்கள் என்ற நடைமுறை உண்மையைக் கண்டபிறகே தமிழக தலித்துக்கள் ஈவேராவை எதிர்க்கஆரம்பித்தனர். அவரை பெயர்க்காமல் தமிழகத்தில் தலித் விடுதலை நிகழ முடியாது. என் குற்றச்சாட்டுஆராய்ச்சியோ நுண்ணறிவோ இல்லாமல் வசைபாடுதலே பெரிய சீர்திருத்தப்போக்கு என்ற எண்ணத்தை ஈவேராஉருவாக்கி இன்றும் பலரிடம் நிறுவி வைத்திருப்பதைப்பற்றித்தான். இந்த அறிதலை நான் தமிழகக்கிராமங்களிலிருந்தே அடைந்தேன்.

திரு தங்கமணி புரிந்துகொள்ள முயன்றால் என் தரப்பில் முரண்பாடுகள் இல்லை என்பதை உணரலாம்.

- ஜெயமோகன் (jeyamoohannn@rediffmail.com)

கீதையின் பெயரில் சில கட்டுரைகள்:தங்கமணி

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X