• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கீதையின் பெயரில் சில கட்டுரைகள்

By Staff
|

திண்ணையில் வந்த பகவத் கீதை குறித்த ஜெயமோகனின் கட்டுரைகள் முக்கியமானவை எனக் கருதுகிறேன். இந்த பகவத்கீதை அரசியல்நடந்துகொண்டிருந்த நேரத்திலேயே இதைப்பற்றி எழுத நான் மிகவும் விரும்பினேன். ஏனெனில் எனக்கு பிடித்த புத்தகங்களில் கீதையும் ஒன்று, இன்னும்சொல்லப்போனால் நான் எனது தேடலை கீதையிலிருந்தே ஆரம்பித்தேன். நல்லவேளையாக எங்கள் வீட்டிலோ, வெளியிலோ கீதை பாராயணம் என்றவழிபாடுகள் இல்லை. கீதை ஒரு புத்தகமாக இருந்தது. அதை வீட்டில் படித்தவனும் நான் தான்.

அப்போது பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். அந்த கீதை உரையாசிரியரின் பெயர் நினைவிலில்லை. அதை உரை என்று சொல்லமுடியாது. வெறும் மொழிபெயர்ப்பு. உரையல்லாத மொழிபெயர்ப்பை படிக்க நேர்ந்தது எவ்வளவு நல்லது என்று பின்னால் தெரிந்துகொண்டேன். அந்த வயதில் என்னுள் பதிந்த பலகீதை கருத்துகள் இன்றும் என் அனுபவமாய் ஒளிர்வது எனக்கு ஆச்சர்யமளிக்கும் விசயமல்ல. ஏனெனில் கீதையை நான் பாராயணம் செய்யவில்லை.வழிபடவில்லை. அது ஒரு மனிதனின் பார்வையென்றால் (vision) அதை எனக்கும் சாதிக்க நேர்ந்தால் மட்டுமே நம்புவது என்ற தேடலை நான்வைத்திருந்தேன்.

இங்கு குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் சுயதர்மமே மேலானது; எவ்வளவு மேலானதாயினும் பரதர்மம் ஐயத்திற்கிடமானது என்றகிருஷ்ணனின் வரிகள் இன்னும் என் மனதில் அநதப் புத்தகத்தில் இருந்தவாறே நினைவில் இருக்கிறது. இந்த வாக்கியத்தில் மிகப்பெரியஉண்மை இருக்கிறது என்று நான் நம்பினேன். அதன் காரணம் நான் அறியேன். ஆனால் அப்போது இருந்த மனநிலை வேறு. இருப்பினும்அந்தப் புத்தகம் தந்த உத்வேகம், அது காட்டிய திசை சாதரணமானதல்ல. பிறகே சித்பவானந்தரின் உரையினைப்படித்தேன்.சித்பவானந்தரின் உரையில் இருந்த ஒரே நல்ல அம்சம் அவர் பெரும்பாலும், இராமகிருஷ்ணரின் வாழ்க்கைச் சம்பவங்களைஉதாரணமாக்கிவிடுவார். இவர்களது மண்டையில் சுரக்கும் வியாக்கியானங்களைவிட இராமகிருஷ்ணரின் வாழ்க்கை கீதைக்கு அருகிலவரும்.

சித்பவனந்தருக்கு தாயுமானவர் பாடல்களில் நல்ல பரிச்சயம் உண்டு. சில சமயங்களில் தாயுமானவர் பாடல்களும் உரையில் வரும்.அதுவும் அவரது உரையின் சிறப்பம்சம். ஆனாலும் எனக்கு சித்பவானந்தரின் நேரடி ஆன்மிக அனுபவங்களின் பேரில் நம்பிக்கையில்லை.அதனால் அந்த உரையையும் ஓரளவுக்கு மேல நான் நம்பியதில்லை. பிறகு பாரதி மொழி பெயர்த்திருந்த கீதையைப் படித்தேன்.பாரதியின்நேர்மையின் மீது எனக்கு அபாரமான நம்பிக்கை இருந்தது. அப்போது ஞானரதமும், விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தசிட்டுக்குருவியைப் போலேயும், குருவி மனதைக் கொல்லும் உபாயத்தைச் சொன்னவிதமும் பாரதியின் அனுபவங்களை எனக்குஏற்புடையாக்கியது. அவனும் உரையெழுதாமல் வெறுமே மொழிபெயர்த்தது அதனால் எனக்கு ஆச்சர்யமாய் இருக்கவில்லை. பிறகு பலவருடங்கள் கழிந்து ஓஷோவின் சில கீதை விளக்கங்களைப் படித்தேன். இன்னும் அனைத்து பாகங்களையும் படிக்கவில்லை. என்னுடையஅளவில் கீதைக்கு உரை எழுத அவரே தகுதியானவர். ஆனால் அவரது உரை மற்ற உரையாசிரியர்களின் உரையைப் போன்றுமேற்கொள்களைக் கொண்ட விளக்கங்கள் அல்ல. அவை முற்றிலும் வேறானவை.

Krishna and Arjunaஜெயமோகனின் கீதை கட்டுரைகளை நான் குறிப்பிடுவதற்குக் காரணம் இந்த மேற்சொன்ன புத்தகங்களையே அவரும் சொன்னதற்காகஅல்ல. கீதையை ஒரு மதநூல் அதுவும் இந்து மதநூல் என்ற கற்பிதத்திலிருந்து விடுவித்து எழுதியமைக்காக; அது தனிமனிதனிடம் பேசுகிறதுஎன்ற தனித்தன்மையை குறிப்பிட்டதற்காக (மற்ற நூல்கள் பொதுவாக மக்கள் கூட்டத்தை நோக்கியே பேசுகின்றன) ; அது வழிபாட்டு நூல்என்ற கருத்தை கடந்தமைக்காக. அவரது கட்டுரையின் முதல் பாகத்தினோடு நான் ஏறக்குறைய முழுமையாக உடன்படுகிறேன். அதுவும்அதைப் படித்தபோது நான் எழுதநினைத்திருந்ததையே எழுதியிருப்பதற்காக மகிழ்ந்தேன். ஏனெனில் கீதை வீரத்துறவியின்கைகளுக்கெல்லாம் போய் ஒரு பாரயணத்திரட்டு என்ற நிலையையும் கடந்து, அது இந்துக்களின் நூல் என்று சூட்டப்பட்டஅடையாளத்தோடு உசுப்பேற்றி கலவரத்தை தூண்டும் கருவியாகிவிடும் நிலைக்கு வந்துவிட்ட சூழலில் அதற்கும் வீரத்துறவியின், ஆர்.எஸ்.எஸின் இந்து மதத்துக்கும் எந்த சம்பந்தமில்லை என்று எந்த காரணங்களை முன்வைத்து எழுத விரும்பினேனோ அதையே அவரும்எழுதியிருந்தார்.

ஜெயமோகனின் கட்டுரையின் முதல்பாகத்தோடு நான் முரண்படுவது கீதை வருணாசிரமத்தை முன் வைக்கும் நூலா? என்ற கடைசிபகுதியோடுதான். நான் கீதையைப் படிக்கும்போது நெருடியது இதுதான். இதை இரண்டு முறைகளில் அணுகலாம்.

1. ஒரு நம்பிக்கையாளனின் வழி. அதாவது அது கீதையில் இருப்பதாலேயே அது சரியானது, ஆனால் தவறாக விளங்கிக் கொள்ளப்படுவது,வருணாசிரமப் பிரிவுக்கு அப்போதைய அர்த்தம் வேறு என்றெல்லாம் சாதிப்பது. ஜல்லியடிப்பது.

2. உண்மையான தேடலை, அதாவது தன்னுடைய அனுபவக் கண்கொண்டு பார்ப்பவனின் வழி. அது நூலின் கருத்துக்கு, தேடலுக்குபொருந்தாது; அப்படி ஒரு தவறான பார்வை கீதாச்சாரியனுக்கு இருக்குமுடியாது என்று தன்னுடைய அனுபவத்தின் உரைகல்லில் உரைத்துப்பார்த்து ஒருவன் உணருவானானால் நிச்சயமாக அந்தப்பகுதி ஒரு இடைச்செருகலே என்று உணருவான்.

ஆனால் ஜெயமோகன் ஒரு நம்பிக்கையாளனின் பார்வையை இந்தப்பகுதியில் கைக்கொள்கிறார். அதில் எல்லா நம்பிகையாளர்களையும்போல ஜல்லியடிக்கிறார். வருண அமைப்பு வேறு, சாதிவேறு என்று. இரண்டும் வேறுதான். ஆனால் வருணம் சாதியமைப்பாக உருமாறிஆயிரக்கணக்கான வருடங்கள் ஆகின்றன. வருணம் சாதியாக்கப்ப்பட்டபின் இந்த கருத்து நுழைக்கப்பட்டிருக்கலாம் என்று எப்படி இவர்கண்டுகொள்ளாமல் போனார். அப்படி கண்டுகொள்ளாமல் இருப்பதும், நம்புவதும் ஒரு நம்பிக்கையாளனின் நிலைப்பாடல்லவா?

கீதையில் எழுதப்பட்ட வரிகள் இன்று தொனிப்பது சாதியக்குரலைத்தான். அல்லது அது இடைச் செருகப்பட்டபோதும் சாதியநோக்கோடுதான் (சாதியத்தை உன்னத தத்துவ நூலின் ஊடாக நுழைக்கும் உத்தியாகத்தான்) செய்யப்பட்டது. இதை நிருபிக்க எளிய வழிஒன்று உள்ளது. சாதியைத்தான் வருணம்/தொழில்/குணம் என்ற அடிப்படையில் பிரிக்கவேண்டும்; கீதை அப்படித்தான் பிரிக்கிறது;அப்படித்தான் புரிந்துகொள்ளவேண்டுமென்று சாதிக்கலாம். ஆனால் அது பெண்களையும் இழிவாகவே குறிப்பிடுகிறது. அதற்கு என்னகாரணத்தை ஜெயமோகன் வகையறாக்கள் சொல்லமுடியும்.

பெண்களைப் பற்றிய இந்த பார்வைதான், கருத்தாக்கம் தான் அதை இடைச்செருகல் என்று என்னை உணரவைத்தது. ஆனால் ஜெயமோகன்இதைப் பற்றி பேசவேயில்லை. ஆனலும் வருணாசிரமத்தைப் பற்றி அவரளித்த விளக்கம் அவருக்கே உண்மையல்ல என்றுபட்டிருக்கவேண்டும், பிறகு இரண்டாவது பாகத்தில் கீதை ஏன் மக்களைப் பகுக்கிறது? என்ற பகுதியில் மெதுவாகஇடைசெருகலாயிருக்கலாம் என்ற வழிக்கு வருகிறார். அதற்குள் வழக்கம் போல ஈ.வே.ராவை திட்டி மன ஆறுதலடைகிறார். தன்னளவில்ஒரு புத்தகத்தையும் உருவாக்க முடியாத மலட்டு இயக்கம் என்கிறார். புத்தகங்களை உருவாக்குவது இன்னும் பெரிய விசயம் என்றே அவர்எண்ணி வருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால் தான் அவரால் இவ்வளவு எழுத முடிகிறது; அவரே சொல்வதுபோலஅவரது புத்தகங்களின் மீது அவருக்கு பிடிப்பும் வருகிறது. அது புரிந்துகொள்ளக்கூடியதே.

காந்தி என் வாழ்க்கையே என் செய்தி என்பார். பெரியாரின் வாழ்வும் அத்தகையதே. ஆன்மீக தளத்தில் கூட எல்லா ஞானிகளின்வார்த்தைகள் அல்ல, வாழ்க்கையே செய்திதான். இயேசுவின் வாழ்க்கையன்றி அவரது வார்த்தைகள் முழுமைபெறாது. பெரியார் எல்லாகருத்தாக்கங்களையும் குறிப்பாக அவை மக்களை சுரண்டுமாயின் (கருத்தாக்கங்கள் அனைத்துமே தம்மையோ, பிறரையோ ஏமாற்றவும்சுரண்டவும் கற்பிக்கப் பட்டவைதான்) அதை கட்டுடைப்பதையே வாழ்க்கையாகக் கொண்டவர். கருத்தாக்கங்களைக் கடந்து செல்வதைப்பற்றிய அறிவில்லாமல் அதைச் செய்யவில்லை. கருத்தாக்கத்தைக் கடந்து செல்ல வேண்டுமென்று கலகம் செய்தவர்.

எல்லா சுரண்டல் கருத்துகள், வடிவங்கள் இவற்றை அந்தத் தளங்களிலேயே எதிர்கொண்டவர். அவற்றை உடைத்தவர். அவர் இன்னொருகருத்தாக்கத்தை, தத்துவத்தை கட்டமைக்கவில்லை என்று சொல்வது ஆச்சர்யமானது. ஆனால் இது ஜெயமோகனுக்கு எரிச்சல் ஊட்டுகிறது.எல்லா நம்பிக்கையாளருக்கும் அது எரிச்சலைத் தருவதுதான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால் தான் கம்யூனிஸ்ட்களைப்பொறுத்துக்கொண்ட மடங்களால், வைதீகர்களால் பெரியாரை, புத்தரைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் கம்யூனிசமும்நம்பிக்கையாக மாறலாம். அப்போதே மாறி இருந்தது. ஒரு மாற்று நம்பிக்கை உண்மையில் அவ்வளவு ஆபத்தானது அல்ல. ஏனெனில்மாற்று நம்பிக்கை என்பது உண்மையில் சுயமான ஒன்றல்ல. ஆனால் சுயமாய் இருப்பதை, தனது அனுபவத்துக்கு மட்டும் மதிப்பளிப்பதைஇவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் அது உண்மையில் மிகவும் ஆபத்தானது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.

ஜெயமோகனின் இந்த பிறழ்வை இரவி ஸ்ரீனிவாஸ் தனது திண்ணைக் கட்டுரையில் மிக அழகாகக் குறிப்பிடுகிறார். கீதையை வருணாசிரமநூல் என்று புரிந்து கொள்பவர்கள் முதலில் அதை ஆதரிக்கும், சங்கரமட வகையறாக்கள், இந்து மத வெறி பிடித்த உரையாசிரியர்கள், சங்கப்பரிவாரங்கள் தாம் . இவர்களது இந்தப் புரிதலின் பேரிலேயே, வியாக்கினத்தின் பேரிலேயே அது திராவிடக் கட்சியினரால்எதிர்க்கப்பட்டது. இப்போது ஜெயமோகன் நியாயமாக யாரைத் திட்டியிருக்கவேண்டும்? ஆனால் பெரியாரைத் திட்டுவது ஏன்?

இன்று பகவத்கீதையை தூக்கிக் கொண்டு முன்னாள் முதல்வரின் வீட்டுக்குப்போய் மூக்குடைபட்டு வந்த வீரத்துறவி, கண்டமாதேவிதேரோட்டப் பிரச்சனையை தூக்கிக்கொண்டு தலித்துகளுக்கு நியாயம் கேட்டு முதல்வரைப் பார்க்க அல்லது சங்கராச்சாரியாரை பார்க்கப்போவாரா? இன்று ஒரு குப்பாயம் போன்ற ஒன்றை அணிந்து கொண்டு இந்து மதம் அழியப்போகிறது கேட்டால் அடிக்க வருகிறார்கள்என்று கோயில் கோயிலாய் போய் அரற்றுபவர், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகவேண்டும் என்று கோயில் கோயிலாய் போய்சாமியை வேண்டுவாரா? கருணாநிதிக்கு நல்ல புத்திவரவேண்டும் என்று கோபாலபுரம் வேணுகோபால சாமியிடம் வேண்டுபவர், காஞ்சிகாமாட்சி கோயிலுக்குப் போய், தமிழில் அர்ச்சனை செய்தால் தீட்டு, குடமுழுக்கு செய்தால் குற்றம் என்று சொல்லுபவருக்கெல்லாம் நல்லபுத்திவர வேண்டுவாரா?

ஆனால் நாத்திகத்தையும் தன்னுள் அடக்கிய இந்து ஞான மரபைக் கொண்டாடும் ஜெயமோகன், வீரத்துறவி மாதிரியான ஆட்களை எந்தப்பிரிவில் அடக்கியிருக்கிறது என்று விளக்கினால் நன்று.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X