• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தன் தலையில் தானே மண்

By Staff
|

இந்தியா - இலங்கைப் பாதுகாப்புக் கூட்டுறவு உடன்பாடு இவ்வாண்டு இறுதியில் கையெழுத்திடப்படும் என இலங்கைப் பாதுகாப்புத்துறைச் செயலாளர் சிறீல் ஹெராத் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதமே கையெழுத்தாக வேண்டிய இந்த உடன்பாடு இருநாடுகளுமே தேர்தலை எதிர்நோக்க வேண்டியிருந்ததால் தள்ளிவைக்கப் பட்டது என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Chandrika and Vajpayeeஅதாவது பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது கையெழுத்தாக வேண்டிய இந்த உடன்பாடு பிரதமர் மன்மோகன் பதவியில் இருக்கும் போதுகையெழுத்தாகிறது.

பா.ஜ.க. கூட்டணி ஆட்சியானாலும், காங்கிரசுக் கூட்டணி ஆட்சியானாலும் சிங்களருக்கு ஆதரவான நிலையெடுப்பதிலும், உதவிசெய்வதிலும் எத்தகைய வேறுபாடும் இல்லை என்பது தெளிவாகி விட்டது.

எதற்காக இந்த பாதுகாப்பு உடன்பாடு?

இலங்கைக்கு அருகில் பகை நாடு எதுவும் கிடையாது. இந்தியாவைத் தவிர வேறு நாடு கிடையாது. இந்தியாவோ நட்பு நாடு.இலங்கையைத் திருப்தி செய்து நட்புறவாக வைத்துக் கொள்ளத் துடிக்கும் நாடு.

இலங்கையில் இருந்து 5 இலட்சத்திற்கு மேற்பட்ட மலையகத்தமிழர்கள் அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டபோது முணுமுணுப்பு இல்லாமல்ஏற்றுக் கொண்ட நாடு.

தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கை கேட்டபோது தயங்காமல் அளித்த பெருமை இந்திய அரசுக்குண்டு.300க்கு மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களைச் சிங்களக் கடற்படை சுட்டுக் கொன்றபோதும் ஒரு தடவை கூடத் திருப்பிச் சுடாமல் நட்புப்பாராட்டிய நாடு இந்தியா.

இந்தியா, சீனப் போர் மூண்டபோது சீனாவின் ஆக்ரமிப்பைக் கண்டிக்காமல் நடுநலை வகித்த சிங்கள அரசு மீது சிறிதளவு கூடச் சினங்கொள்ளாத நாடு பாரதத் திருநாடு.

1971இல் வங்கதேச விடுதலைப் போர் மூண்ட காலத்தில் பாகிஸ்தான் இராணுவ விமானங்களும், கடற்படையும் இலங்கையில் தங்கிஎரிபொருள் நிரப்பிக்கொண்டு மறுபடியும் வங்காளதேசம் சென்று குண்டு மாரி பொழிய உதவிய போதும் தொடர்ந்து நட்பைக் கைவிடாதநாடு இந்தியா.

1987இல் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை ஒடுக்க இந்தியப் படையை அனுப்பி உதவிய பெருந்தன்மை நிறைந்த நாடு இந்தியா.

இந்தியாவொடு பகைமை பாராட்டிவரும் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடன் இலங்கை மிக நெருக்க உறவு பூண்டுஅந்நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கிக் குவிக்கிறது. ஆனாலும் உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இலங்கையின் இடுக்கண்களைய உதவுகிறது இந்தியா.

இலங்கைக்கு அருகே பகைநாடு எதுவும் கிடையாது. பின்னர் யாரிடமிருந்து தன்னைக் காக்க இந்தியாவொடு பாதுகாப்பு உடன்பாடு செய்துகொள்ள இலங்கை முனைகிறது.

ஈழத்தமிழரை ஒடுக்கவே இந்தியாவின் உதவியை மீண்டும் நாடுகிறது இலங்கை. ஒருபுறம் நார்வேயின் சமரச முயற்சிகளுக்கு ஆதரவு தரும்இந்தியா மறுபுறத்தில் இலங்கையுடன் இராணுவ உடன்பாடு செய்ய முற்படுவது முரணான செயலாகும்.

இராணுவ உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திட்டால் சந்திரிகா துணிவு பெற்று நார்வேயின் சமரச முயற்சிகளைச் சீர்குலைப்பார்.

டில்லியில் உள்ளவர்கள் ஒரு முறைக்குப் பலமுறை சிந்திக்க வேண்டும். சிங்கள அரசு விரித்துள்ள சூழ்ச்சி வலையில் சிக்கக் கூடாது.

அமெரிக்காவின் ஆதிக்கக் கரங்களில் சிக்கிக் கொண்டுள்ளது சிங்கள அரசு. வல்லாதிக்க நாடான அமெரிக்கா சின்னஞ் சிறிய நாடானஇலங்கையில் காலுன்றிக் கொள்ள முயலுவது இந்தியாவை மிரட்டவே.

இந்து மாக்கடல் பகுதியில் அமெரிக்க ஆதிக்கம் நிலையூன்ற முடியாமல் தடுக்க வேண்டுமானால் சிங்கள அரசை இந்தியா எச்சரிக்கவேண்டும். அதற்கு மாறாக அதற்குத் துணை போவது தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதாகும்.

- தென்பாண்டி வீரன்(seide@md2.vsnl.net.in)

இக் கட்டுரை தென்செய்தி நவம்பர் 01 இதழில் இடம்பெற்றதாகும். மாதம் இருமுறை இதழாக வெளிவரும் தென்செய்தியின் ஆசிரியர்பழ.நெடுமாறன். பொறுப்பாசிரியர் சுப.வீரபாண்டியன். ஓராண்டு சந்தா ரூ.100 (உள்நாடு), ரூ.400 (வெளிநாடு). சந்தா தொகையைஅனுப்ப வேண்டிய முகவரி:

தென்செய்தி,

33, நரசிம்மபுரம்,

மைலாப்பூர்,

சென்னை-04

தொலைபேசி: 24640575

தொலைநகல்: 24953916

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X