For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிற மொழி நூல்களை காவியமாக்குவேன் - கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: வாய்ப்பு கிடைத்தால் தாய் காவியம் போல பிற மொழி நூல்களையும் தமிழ் காவியமாக்குவேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

ரஷ்ய கலாசார நட்புறவு கழகம் சார்பில் ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்கி எழுதிய தாய் நாவலை, தமிழில் தாய் காவியம் என்று படைத்த முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு விழா மற்றும் இந்திய ரஷ்ய கலாசார நட்புறவு கழக அலுவலக திறப்பு விழாவும் நடந்தது.

இந்த ஆண்டின் அதிசயம்:

அலுவலகத்தை திறந்த வைத்த முதல்வர் கருணாநிதி பேசுகையில், இந்த அலுவலகம் எனது வீட்டுக்கு அருகில்தான் உள்ளது. ஆனால் இப்போதுதான் 40 ஆண்டுக்கு பிறகு முதன்முதலாக இந்த நட்புறவு கழகத்துக்கு அழைக்கப்பட்டு வந்துள்ளேன் என்பதை இந்த ஆண்டின் அதிசயமாக சொல்ல விரும்புகிறேன்.

நான் எழுதிய தாய் காவியம் நூலுக்கு பாராட்டு விழா, இது பாராட்டு விழா அல்ல. அரங்கேற்று விழா, ஏற்கனவே இந்த நூலை பேராசியர்கள் போன்றோர் வெளியிட்டு பேசியிருக்கின்றனர்.

இங்கு பேசிய ஜெயகாந்தன் எனக்கு திட்டத்தான் தெரியும், பாராட்டத் தெரியாது என்றார். அந்த மோதிர கலையால் குட்டுப்பட்டால்தான், அதுதான் அரங்கேற்றம் என்று கருதுகிற காரணத்தால்தான், ஜெயகாந்தன் பாராட்டி முடிந்தால் இது அரங்கேறியதாக அர்த்தம். அந்த முறையிலேதான் இதை அரங்கேற்றம் என்றேன்.

தாய்தான் தழுவுவதற்கு உரியவர்:

தாய் காவியம் ரஷ்ய நாவலை தழுவி எழுதப்பட்டது. இது மொழி பெயர்ப்பல்ல. ஒரு காவியத்தை தழுவி எழுதப்பட்டது. தாயை தழுவி எழுதுவது தவறல்ல. தாய்தான் தழுவுவதற்கு உரியவர்கள். வேறு எதையும் தழுவி எழுதுகிறவர்கள் நாட்டிலே பலர் இருக்கின்றனர். நான் தாயை தழுவி இந்த நூலை தந்திருக்கிறேன்.

1945ல் பெரியாரின் குடியரசு பத்திரிகையில் துணை ஆசிரியராக பணியாற்றிய தொடங்கிபோது நள்ளிரவு 12 மணிக்கு எழுதிய முதல் கவிதை, காவியம் தாயை பற்றியதுதான். அதற்கு முன் கவிதை பல எழுதி இருக்கிறேன். ஆனால் காவிய வடிவத்தில் எழுதியது தாயை பற்றித்தான்.

தாய் இலக்கியத்தில் தொழிலாளர், பாட்டாளி மக்களின் பிரச்சனைகள், கம்யூனிஸ சித்தாந்தங்கள் எல்லாம் நிறைய எடுத்தாளப்பட்டிருக்கிறது. மகன் போரில் வெல்வானோ மாட்டோனோ என்ற சந்தேகம் தாய்க்கு எழுந்ததும் அந்த போர் களத்திற்கு தாயே போராளியாக செல்கின்ற அன்த புத்தகத்தின் கடைசி காட்சி, என்னை மிகவும் கவர்ந்த காட்சி.

தாயின் வீரத்தை இன்று நேற்றல்ல சங்க காலம் முதல் நான் தொடர்ந்து படித்து வருகின்ற காரணத்தால் அணுகி வருகின்ற காரணத்தால் அந்த வீரத்தை பாராட்டுகின்ற வகையில் இந்த தாய் இலக்கியத்தை படைத்திருக்கிறேன்.

அன்றைக்கே நம்முடைய தமிழ்ப்புலவன் தந்த புறநானூற்று தாய்க்கு தமிழ் மெருகு ஊட்டியன் நான். இப்போது ரஷிய எழுத்தாளர் கார்க்கி தந்த இந்த தாய்க்கும் தமிழ் மெருகு ஊட்டியிருக்கிறேன். இன்னும் பல தாய் காவியங்களை போல இயற்றுவதற்கு பிற மொழி நூல்கள் பயன்படுமேயானால் வாய்ப்பு இருக்குமேயானால், நீங்கள் மீண்டும் என்னை அழைத்தால் அந்த காவியங்களை அரங்கேற்றும் இடமாக இந்த அரங்கத்தை களமாக ஆக்கிக்கொள்வேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X