For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

80 வயது ரிக்ஷாக்காரர் 23வது முறையாக தேர்தலில் போட்டி

By Sridhar L
Google Oneindia Tamil News

லக்னோ: உ.பி. மாநிலம் பதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜக்லால் என்ற 80 வயது ரிக்ஷாக்காரர், 23வது தடவையாக லோக்சபா தேர்தலில் போட்டியிடவுள்ளார். தள்ளாத வயதாக இருந்தாலும், நிச்சயம் போட்டியிடுவேன் என்று உறுதியான குரலில் கூறுகிறார் இந்த ரிக்ஷா தாத்தா.

வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டுப் போடவே வருத்தப்படும் சோம்பேறிகள் பலருக்கு மத்தியில் இந்த தாத்தா அனைவரையும் வியக்க வைக்கிறார்.

உ.பி. மாநிலம் பதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜக்லால் தாத்தா. எந்தத் தேர்தல் வந்தாலும் உடனே போய் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வந்து விடுவார். பிறகு தனது ரிக்ஷாவை எடுத்துக் கொண்டு தனி ஆளாக பிரசாரம் செய்யவும் கிளம்பி விடுவார்.

இப்படியாக இதுவரை 22 முறை தேர்தலில் நின்றுள்ளார் ஜக்லால். அத்தனை முறையும் டெபாசிட் பறிபோனது தனிக் கதை.

இந்த நிலையில் நடப்பு லோக்சபா தேர்தலிலும் போட்டியிடப் போகிறாராம் ஜக்லால். இப்போது அவருக்கு வயது 80. ஆனாலும் என்னால் போட்டியிட முடியும், நான் போட்டியிட்டே தீருவேன் என்கிறார் உறுதியான குரலில்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தோற்கிறேனோ, ஜெயிக்கிறேனோ அதுகுறித்து எனக்குக் கவலை இல்லை. லோக்சபா தேர்தலில் நான் நிச்சயம் சுயேச்சையாக நிற்பேன்.

பதேபூர் உள்ளாட்சித் தலைவர் பதவிக்கு ஐந்து முறை போட்டியிட்டுள்ளேன். சட்டசபைத் தேர்தல்களில் எட்டு முறை போட்டியிட்டுள்ளேன். லோக்சபாவுக்கு இதுவரை 9 முறை போட்டியிட்டுள்ளேன். இது எனக்கு 23வது வாய்ப்பு. விட மாட்டேன் என்கிறார் ஜக்லால்.

ஏன் இப்படி என்று அவரிடம் கேட்டால், பதேபூர் மாவட்டத்தில் எத்தனையோ அரசியல் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள், ஜெயிக்கிறார்கள். ஆனால் ஊருக்கு நல்லது மட்டும் செய்ய மாட்டேன் என்கிறார்கள்.

பதேபூரில்தான் நான் பிறந்தேன், இங்குதான் வாழ்ந்து வருகிறேன். எனது கடைசிக்காலமும் இங்குதான் முடியும். அதற்குள் எனது ஊருக்கு நல்லது செய்து பார்க்க ஆசைப்படுகிறேன். அதற்காகததான் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறேன் என்கிறார் உன்னத நோக்கத்துடன்.

ஜக்லால் தாத்தாவின் இந்த தேர்தல் ஆர்வம் உ.பி. மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஜக்லால் தாத்தாவின் பிரசார உத்தியே தனி. ஆள், அம்பு, பரிவாரம் எதுவும் இல்லாமல் தனது ரிக்ஷாவில் ஏறும் வாடிக்கையாளர்களிடம் ஐயா, கண்டிப்பாக எனக்கே ஓட்டுப் போடுங்க என்று கேட்டுக் கொள்வாராம்.

சில நேரங்களில் அவரது ஸ்டாண்டில் உள்ள சக ரிக்ஷாக்காரர்கள் இவரை அழைத்துக் கொண்டு பிரசாரம் செய்வார்களாம்.

அதை விட சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது. இவரிடம் மட்டும் தேர்தல் அதிகாரிகள் தேர்தல் செலவுக் கணக்கே கேட்பதில்லையாம். அப்படியா என்று வியப்புடன் கேட்டால், ஆமாம், கடந்த பொதுத் தேர்தலின்போது ஒரு தேர்தல் பார்வையாளர் என்னை அழைத்து தேர்தல் செலவுக் கணக்கெல்லாம் தாக்கல் செய்கிறீர்களா என்று கேட்டார்.

ஒரு நாளை ஒரு ஆப்பிள் செலவு..

அதற்கு நான் எனக்கு ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள்தான் செலவாகிறது என்றேன். அவருக்குப் புரியவில்லை. விளக்கமாக கூறுமாறு கேட்டார்.

நானும், காலையி்ல் ஒரு ஆப்பிளை வாங்கி வைத்துக் கொள்வேன். பகல் பூராவும் பிரசாரம் செய்வேன். பின்னர் பிரசாரம் முடிந்ததும் அந்த ஆப்பிளை சாப்பிடுவேன். இவ்வளவுதான் எனது பிரசார செல்வு என்றேன். அதைக் கேட்டதும் அவர் என்னிடம் செலவுக் கணக்கை கேட்கவே இல்லை.

அதற்குப் பிறகு என்னிடம் யாரும் செலவுக் கணக்கு கேட்கவில்லை என்கிறார் ஜக்லால்.

ஜக்லாலிடம் அருமையான திட்டமும் உள்ளதாம். அதாவது பள்ளித் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்காகவே ஒரு பள்ளிக்கூடம் கட்டுவதுதான் அது. பள்ளித் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களை யாரும் பள்ளியில் சேர்ப்பதில்லை. அப்படிப்பட்ட மாணவர்களுக்காக இந்த பள்ளியை கட்ட விரும்புகிறேன் என்கிறார் ஜக்லால்.

கடந்த லோக்சபா தேர்தலில் ஜக்லால் 3949 வாக்குகளைப் பெற்றாராம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X